மரண தண்டனையை நீக்க முற்படும் நாள் தேசிய துக்க தினமாகும்

மரண தண்டனையை நீக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கும் நாட்டை ஒப்படைப்பதாக அமையும் என்றும், அப்படி ஏற்பட்டால் அந்த தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (14) முற்பகல் வளவை வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலகத்தின் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மரண தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் சிலரினது தேவையின் பேரில் பாராளுமன்றத்தில் சட்டமொன்றை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதன் மூலம் வெற்றியடைவது நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளுமேயாகும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இந்த நாட்டின் இளம் தலைமுறையினரது எதிர்காலத்தை சீரழிப்பதற்கு தான் இடமளிக்க போவதில்லையெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், மரண தண்டனை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மரண தண்டனை வழங்குவது பற்றிய தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனவே மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்பதை நாட்டையும் இளந் தலைமுறையினரையும் நேசிக்கின்றவர்கள் மத்தியில் விரிவான மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நோக்கத்திற்காக ஒன்றிணையுமாறு தான் அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாக குறிப்பிட்டார்

நாட்டை வளப்படுத்தி நாட்டுக்கு உணவை வழங்கும் மகாவலி விவசாய சமூகத்திற்கு அவர்கள் நீண்டகாலமாக இருந்து வந்த காணிகளின் சட்ட ரீதியான உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தில் உள்ள ஐயாயிரம் விவசாயிகளுக்கு காணி உறுதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 4 சமய ஸ்தாபனங்களுக்கான கொடுப்பனவு பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

அனைத்து இலங்கையர்களுக்கும் காணி உறுதியையும் வீட்டு உரிமையையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு தமது வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கும் இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.

சங்கைக்குரிய ஓமல்பே சோபித்த நாயக்க தேரர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, ஹேஷான் வித்தானகே, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb