இராஜதந்திர வீழ்ச்சி – கருணாகரன்

மீண்டும் ஒரு தத்திலிருந்து 11.07.2019 அன்று தப்பிப் பிழைத்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம். இதில் அரசாங்கத்தைக் காப்பாற்றியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளுமே. இதை இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு ஆண்டுக்குள் இரண்டு தடவை மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முறியடித்துள்ளது. இதற்குப் பேருதவி புரிந்தவை  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளுமேயாகும்.

இவற்றின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் நிச்சயமாகக் கவிழ்க்கப்பட்டிருக்கும். இதையும் நாம் இன்னொரு விதமாகச் சொல்லிக் கொள்ளலாம் – சிறுபான்மையினத் தரப்புகள் முட்டுக் கொடுக்கவில்லையென்றால் இப்பொழுது நாட்டில் முற்றிலும் வேறான அரசியல் யதார்த்தம் ஒன்றே அரங்கேறியிருக்கும்.

எனவே இந்த இரண்டு மிகப் பெரிய அரசியல் நெருக்கடிகளிலும் கூடவிருந்து தலையைக் காப்பாற்றிய சிறுபான்மையினத் தரப்பினருக்கு ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல, ஆயுட்காலத்திலும் நன்றி மறக்க முடியாது. ஆனால், அரசாங்கத்தினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் இதற்கு எத்தகைய பிரதியுபகாரங்கள் செய்யப்பட்டுள்ளன?

இதையும் இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், இந்தப் பேராபத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாத்ததற்குப் பதிலாக அரசாங்கத்திடமிருந்து தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் பெற்ற நன்மைகள் என்ன? இந்த நன்மைகள் அரசியல் ரீதியாக எத்தகைய பெறுமானங்களைக் கொண்டவை? மக்கள் நலன்சார்ந்து எவ்வாறான நல்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன?

ஏனெனில் அரசியலில் எப்போதும் லாபநட்டக் கணக்குகளே முக்கியமானவை. அவற்றைப் பெறுவதற்கான சதுரங்க ஆட்டமே (புத்திபூர்வமான காய் நகர்த்தல்களும் பேரம் பேசுதல்களும் அவற்றைச் சாதுரியமாக முன்னோக்கி நகர்த்துவதுமே) அரசியல் வெற்றியாகக் கருதப்படுவதுண்டு. அதிலும் பாதிக்கப்பட்ட அல்லது பின்தங்கிய நிலையிலுள்ள  மக்கள் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் தமது அரசியல் பேரங்களையும் வெற்றிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் எப்போதும் கிட்டுமென்றுமில்லை. ஆகவே கிட்டிய வாய்ப்புகளை இழப்பதென்பதும் சொதப்புவதென்பதும் அரசியற் தோல்வியாகவே அமையும்.

எனவே ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கின்ற, ஆட்சி அதிகாரமற்ற சிறுபான்மையினத் தரப்பினர் ஒருபோதும் தமக்குக் கிடைக்கின்ற அபூர்வமான சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் எந்தக் காரணம் கொண்டும் சொதப்பி விடக் கூடாது. அரசியல் தோல்விகளில் சிக்கலாகாது. எந்த நேரத்திலும் விழிப்பாக இருக்க வேண்டிய சின்னஞ்சிறிய காட்டு விலங்கிற்கு ஒப்பானது இது. கரணம் தப்பினால் மரணம்.

இந்த நிலையில்தான் ரணில் அரசாங்கத்தைக் காப்பாற்றியதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவை பெற்ற அரசியல் பெறுமதிகளைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இலங்கை அரசியற் சூழல் என்பது எப்போதும் சிறுபான்மையினத்தினருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டதொன்றாகும். அரசியல் அமைப்பிலிருந்து, ஆட்சிமுறைமை, நிர்வாக நடவடிக்கைகள், அரசியல் தீர்மானங்கள், நிதி ஒதுக்கீடுகள், படைத்துறைக்கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக நிலை என அனைத்தும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கே அனுகூலத்தை அதிகமாக அளிப்பதாக உள்ளது. மறுவளமாகச் சிறுபான்மையினத்தவரைப் பலவீனப்படுத்துவனவாக, பாதிப்பை உண்டாக்குவனவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறானதோர் நிலையில்தான் உச்ச விழிப்போடு சிறுபான்மையினத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும். ஆனால், பாராளுமன்றத்தில் மட்டும் சம்மந்தன் தூங்கவில்லை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலிலும் தூங்குகிறார். இதனால்தான் அரசாங்கத்தைப் பாதுகாத்த அளவுக்கு சிறுபான்மையினத்தவர் எந்தப் பெரிய நலன்களையும் பெறவில்லை. சிறுபான்மையினரினால் இந்த அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட அளவுக்கு எந்தக் குறிப்பிடத்தக்க அரசியல் பிரதியுபகாரங்களையும் அரசாங்கமும் செய்ததாக இல்லை.

என்பதால்தான் தமிழ் மக்கள் இன்று கூட்டமைப்பை கடுமையாக எதிர்க்கின்ற – விமர்சிக்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதே நிலைமைதான் முஸ்லிம்களுக்கும்.

இதைக்குறித்துத் தொடர்ச்சியாகவே இந்தப் பத்தியாளர் தொடர்ந்து பேசியும் கவனப்படுத்தியும் வந்திருக்கிறார். மேலும் ஆனாலும் தொடர்ந்தும் இதைப்பற்றியே பேச வேண்டியிருக்கிறது. இது எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும் சலிப்பூட்டும் ஒன்றாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றே. மாற்றம் நிகழும் வரை திரும்பத்திரும்பத் தவறுகளைச் சுட்டிக்காட்டி வழிப்படுத்துவதன் மூலமே அரசியல் சரிகளை நோக்கி உரியவர்களை வழிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையின் – பொறுப்புணர்வின் வெளிப்பாடு இது.

2015 இற்குப் பிறகு சிறுபான்மையினச் சமூகங்களுக்கு கூடுதலான  அனுகூலங்கள் கிடைத்திருந்தன. 2015 இல் அரசாங்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்காற்றியது சிறுபான்மையினச் சமூகத்தினரே. ஆகவே அந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்புகள் செல்வாக்கு மிக்கவையாகத் தம்மைக் கட்டமைத்திருக்க வேண்டும்.

அரசாங்கத்தை எவ்வாறு வழிப்படுத்துவது? என்பதில் தொடங்கி, முன்னர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் கால நீட்சிக்கு இடமளிக்காமல் குறுகிய கால அவகாசத்தில்  பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமைகள், கிடைக்க வேண்டிய நீதிகள், பெற வேண்டிய நன்மைகளைக் குறித்து தெளிவான வேலைத்திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், அதில் இவை அனைத்தும் கோட்டையே விட்டன. ஆனாலும் சிறுபான்மையினத்தினருக்கான வாய்ப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஸவும் மேலும் உருவாக்கிக் கொடுத்தனர். 2018 ஒக்ரோபரில் ரணில் அரசாங்கம் மீதான நெருக்கடி சிறுபான்மைச் சமூகங்களுக்குக் கிடைத்த இன்னொரு பெரிய வரப்பிரசாதம். அப்பொழுது அரசாங்கத்தின் தள்ளாட்டம் (தளம்பல்) எப்படி இருந்தது என்பதை ஒரு கணம் யாரும் நினைவில் கொண்டு பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் தலைகளுக்கான பேரங்கள் பேசப்பட்டன. அது அரசியல் சீரழிவின் உச்சமாக இருந்தது. ஆனால், இதை உடைத்து தலைகளுக்குப் பதிலான பேரங்களுக்குப் பதிலாக அதை மக்களின் நலனைக் குறித்த அரசியற் பேரங்களாக்கியிருக்க வேண்டும். அதுவே எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய நாட்களில் எதிர்க்கட்சி அந்தஸ்திலிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் கொண்டிருந்த பேரம் பேசும் சக்திக்கு நிகரான பலத்தோடும் பேரம் பேசும் ஆற்றலோடுமிருந்தது.

ஆனால், கையில் கிடைத்த தங்கக் கட்டியை அவர்கள் குப்பையில் கைவிட்டனர் என்றவாறாகவே நடந்து கொண்டனர். மக்கள் நலனை விட கட்சி நலன், தனி நபர் நலன் என்ற அளவிலே குறுகிக் கொண்டதன் வெளிப்பாடிது. இதனால் அன்றைய அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய பாரிய அரசியல் வெற்றிகள் அனைத்தும் கைதவறிப்போயின.

பதிலாக அரசாங்கம் (ரணில்) எந்தச் செலவுமே இல்லாமல் தன்னைத் தக்க வைத்துக் கொண்டதுடன் பெரும் பாய்ச்சலையும் செய்திருந்தார். நெருக்கடிகளின்போது சாணக்கியமாகக் காய்களை நகர்த்துவதில் வல்லவர் ரணில் விக்கிரமசிங்க என்ற கீர்த்தியைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் தரப்பினரும் ஏற்படுத்தியிருந்தனர். இதில் மலையகக் கட்சிகளுக்கும் கணிசமான பொறுப்புண்டு.

சிறுபான்மைச் சமூகத்தினரின் அரசியல் வரலாற்றில் இது மிகப் பெரிய தோல்வியே. மிகப் பெரிய  பின்னடைவே.

இன்னொரு வாய்ப்பைக் கடந்த 11.07.2019 அன்று ஜே.வி.பி சிறுபான்மைச் சமூகத்தினருக்கு வழங்கியிருந்தது. முன்னர் இழந்தவற்றை இப்போதாவது – இந்தச் சந்தர்ப்பத்திலாவது பெற்றிருக்கலாம். முன்பு விட்ட தவறுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் திருத்திக் கொண்டிருக்கலாம்.

ஆனாலும் அதையும் செய்யவில்லை இந்தத் தரப்புகள். இது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும்.

இதை எதன் பொருட்டும் சமாதானப்படுத்தி விட முடியாது. இதனுடைய அர்த்தம் ரணில் அரசாங்கத்தைக் கவிழ்க்கத்தான் வேண்டும் என்றில்லை. பதிலாகப் பேச வேண்டிய பேரங்களைப் பேசியிருக்க வேண்டும். பெற வேண்டிய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போகிறோம் என்று ஜே.வி.பி அறிவித்திருந்தபோதே கூட்டமைப்பும் பிற சிறுபான்மையினக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம்.

அப்படித்தான் முஸ்லிம் கட்சிகளும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஒத்துழைக்கவில்லை என்றாலும் கூட்டமைப்புத் தனித்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க முடியும்.

இதன்படி தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகளை முன்வைத்துத் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை – பேரத்தைப் பேசியிருக்கலாம்.

இதைச் செய்வதற்குப் பதிலாக கல்முனைப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது உள்ளிட்ட – சிரிப்புக்கிடமான சில சில்லறைக் கோரிக்கைகளை மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கிறது.

இதைப் பெரிய பெருமையாக வேறு அது சொல்லியும் கொள்கிறது. இதைப் பெரிய சாதனையாகச் சித்திரித்திருக்கிறார் ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் என்பத இன்னொரு பெரிய நகைச்சுவை. இது கூட்டமைப்பின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளதே தவிர, கூட்டுவதாக அமையவில்லை. அப்படி ஒரு போதுமே அமையாது. பெரும் பசியோடிருக்கும் சமூகத்துக்கு சிறிய இனிப்புத்துண்டொன்றைக் கொடுத்து ஏமாற்றுவதைப்போன்றது இது. இது வாக்களித்த சனங்களை, நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை அவமதித்ததாகும். ஏமாற்றியதாகவே அமைகிறது. இதனால்தான் கூட்டமைப்பின் இந்தப் பேரம் பேசுதலையிட்டுப் பலரும் சிரிக்கிறார்கள்.

ஒரு மூத்த அரசியல் தலைவராக இருக்கும் இராஜவரோதயம் சம்மந்தனுக்கு இதெல்லாம் மிகப் பெரிய அரசியல் தோல்வியே. இராஜதந்திர வீழ்ச்சியே. நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் சம்மந்தனுடைய இறுதிக்காலத்தில் அவர் சம்பாதிக்கும் அடையாளம் என்பது நிச்சயமாக நேர்மறையானதாகவே இருக்கப்போகிறது. எனவே இத்தகைய போக்கிலிருந்து, குறுகிய நோக்கிலான அரசியல் தீர்மானங்களிலிருந்து அவர் விடுபட வேண்டும். தவறான திசையை நோக்கி வழிநடத்தப்படுவதற்கு அவர் இடமளிக்கக் கூடாது.

அப்படி அனுமதித்தால் அது மக்களுக்கு எதிரானதாகவே அமையும். கூடவே கூட்டமைப்புக்கு எதிரானதாகவும் மாறும். அதுவே கூட்டமைப்புக்கும் கூற்றாகும்.

அரசியல் வெற்றிகளைப் பெற வேண்டிய சமூகத்தினர், அதற்கான வாய்ப்புகள் குவிந்திருக்கின்ற நிலையிலும் வெறுங்கையோடு தெருவில் நிற்பது கொடுமையிலும் கொடுமை. இதைக்குறித்துச் சிந்திக்கவும் பேசவும் தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்திலுள்ள சக்திகள் முன்வர வேண்டும்.

Share:

Author: theneeweb