அதிகாரிகளின் அக்கறையின்மையால் ஐந்து வருடங்களை கடந்தும் தெரிவு செய்யப்படாத கிராம அபிவிருத்திச் சங்கம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராம அலுவலர் பிரிவின் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு ஐந்து வருடங்களை கடந்தும் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாது இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின ஆயுட் காலம் இரண்டு வருடங்கள் ஆகும். இரண்டு வருடங்கள் நிறைவுற்றப் பின்னர் பொதுக் கூட்டம் கூட்டப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆனால் அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் பக்கச்சார்பான நடவடிக்கைகளினால் ஊற்றுப்புலம் கிராமத்தின்புதிய கிராம அபிவிருத்திச் சங்கத்தினை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள நிர்வாகம் செயலிழந்துள்ளமையினால் கிராமத்தின் நலன்கருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கிராமத்தின் சில பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாது காலத்தை கடத்தி வருகின்றனர் என்றும் தற்போது தங்களுக்கு நேரம் இல்லை என்றுதம் பதிலளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே உரிய மேலதிகாரிகள் ஊற்றுப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தி்ன் தெரிவில் கூடிய கவனம் எடுத்து விரைவில் தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Author: theneeweb