பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி கல்வியின் கலங்கரை விளக்கு கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தின நிகழ்வு

மக்களுக்கான சித்தாந்தத்தை சிதறவிடாமல் வாழ்ந்து காட்டிய மனிதர் தோழர் கார்த்திகேசன்
இலங்கைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்வியாளனும், சமூக சேவையாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளை அரசியலிலும், கல்விப் பரப்பிலும், பொதுவாழ்விலும் அவர் ஆற்றிய காத்திரமான பங்களிப்புக் குறித்து நினைவு கூறுவது சாலவும் பொருத்தமானதாகும்.
மலேசியாவிலிருந்து வந்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட தோழர் கார்த்திகேசன், கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். அத்தோடு கட்சியின் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து செயலாற்றினார். அச்சமயம் வடபகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை விஸ்தரித்து, முன்னெடுத்துச்
4
செல்லும்பொருட்டு, கட்சியின் மத்திய குழுவால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி என்பன தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் கொள்கைகளையும் பரப்பும் நடவடிக்கைகளில் இளைஞரான தோழர் கார்த்திகேசன் தீவிரமாக ஈடுபட்டதுடன், வடபகுதியிலுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலுள்ள இளைஞர்களை இணைத்து, தொடர்ச்சியான அரசியல் வகுப்புகளின் மூலம் அரசியல் அறிவை வளர்த்தெடுத்து அணிதிரட்டினார். யாழ் குடாநாட்டிலுள்ள தொழிலாளி, விவசாயிகள் மத்தியிலும், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் பொதுவுடமைக் கருத்துக்களைப் பரப்பினார். இதன் மூலம் அந்த மக்கள் மத்தியில் புதிய சிந்தனையையும், புதிய எழுச்சியையும் உருவாக்குவதில் பெரும் பெற்றியடைந்தார்.
தோழர் கார்த்திகேசனால், அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தலைசிறந்த எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், பேச்சாளர்களாகவும்
5
திகழ்ந்தார்கள். வடபகுதியில் பிற்போக்குக் கொள்கைகளும், மூடத்தனமான சிந்தனைகளும் புரையோடிப் போயிருந்த காலகட்டத்தில், அவரால் ஏற்படுத்தப்பட்ட புதிய சிந்தனை, புதிய கலாசாரம் என்பன வேகமாகப் பரவியதுடன், வர்க்க பேதமற்ற, ஏற்றத் தாழ்வில்லாத ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டுமென்னும் கருத்து தீவிரமாகப் பரவியது.
இதேவேளை தோழர் கார்த்திகேசன் யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும் கடமையாற்றினார். அவர் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிப்பதில் சிறந்து விளங்கியமையால், மாணவர்களும், ஆசிரியர்களும் அவரைச் சுற்றியே வலம்வரும் சூழ்நிலை உருவாகியது. ஒரேசமயம் மக்கள் மத்தியிலும், கல்லூரியில் மாணவர்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது.
கல்லூரி மாணவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல், எந்நேரத்திலும் அவரை அணுகி பிரச்சினைகளையும், சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளுமளவுக்கு அவரது எளிமையான அணுகுமுறை அமைந்திருந்தது. அவரிடம் கல்வி கற்ற மாணவர்களில் கணிசமானவர்கள் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாகவும், கம்யூனிஸ்ட்
6
கட்சியின் உறுப்பினர்களாகவும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் வாழ்ந்துவரும் மூவின மக்கள் மத்தியில் நிலவும் இனமுரண்பாடுகள் குறித்து, அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் முரண்பாடு குறித்துப் பேசப்படும் இன்றைய சூழ்நிலையில், தோழர் கார்த்திகேசனின் அந்நாளைய செயற்பாடு எல்லோராலும் பாராட்டப்பட்டது. 1955ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் தோழர் கார்த்திகேசன் வெற்றி பெற்றபோது, அன்றைய யாழ் நகரச் சனத்தொகையில் எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையினராக இருந்த முஸ்லீம்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எம்.எம்.சுல்தானை யாழ் நகர மேயராக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள் மக்கள் மத்தியில் இனவாதப் பிரசாரங்களை விதைத்துவந்த காலகட்டத்தில், முஸ்லிம் ஒருவரை மேயராக்குவதில் தோழர் கார்த்திகேசனின் அயராத உழைப்பும், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்குமே முக்கிய காரணமாக இருந்தது. எக்;காலத்திலும் இன, மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த
7
கம்யூனிஸ்ட்டாக அவரது வாழ்வும் நடைமுறையும் அமைந்திருந்தது.
1966ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடபகுதியில் தீண்டாமைக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய சமயம், அப் போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்கள் பெரும்பாலும் தோழர் கார்த்திகேசனின் அரசியல் மாணவர்களாகவே இருந்தார்கள். அவரால் ஊட்டி வளர்க்கப்பட்ட கருத்துக்களும், கொள்கைகளும், நிலப் பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சமாக இருந்த சாதியமைப்பைத் தகர்த்தெறியும் வீரியம் மிக்க சக்தியாக மேலெழுந்தது. ஆலயங்கள், தேனீர்க்கடைகள் மற்றும் பொது இடங்களில் சாதியின் பெயரால் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிராக, சகல சாதிகளையும் சேர்;ந்த முற்போக்காளர்களும் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து இன, மத அடையாளமின்றி ஒன்றுபட்டுநின்று போராடினார்கள். இந்தப் போராட்டங்களின் வெற்றியில் அவரது அர்ப்பணிப்பாலும், அயராத உழைப்பாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது.
8
தோழர் கார்த்திகேசன், அக்காலத்தில் தான் கற்ற கல்வியைக் கொண்டு அரசின் உயர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், மாணவப் பருவத்திலேயே ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக வாழ்வின் இறுதிவரை ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கொள்கைகளை விதைத்து வந்தார். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடியவர். ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியபோதிலும், இறுதிவரை தனக்கென ஒரு சொந்த வீடு கூட இல்லாது வாழ்ந்து மறைந்த உன்னத தலைவர். எளிமையான உடை, நடை, பாவனை கொண்ட அவரை கட்சித் தோழர்களும், சாதாரண மக்களும் எந்நேரமும் அணுகக்கூடிய ஒருவராகவே வாழ்ந்தார். அவர் தனது துவிச்சக்கர வண்டியில் கட்சிக் காரியாலயத்திற்கோ, நண்பர்களிடத்திற்கோ செல்லும் சமயங்களில், அவரை மக்கள் உரிமையோடு வழிமறித்து, தமக்குள்ள குறைபாடுகள், தேவைகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதித் தருமாறு கேட்பதும் வழக்கமான ஒன்றாகும். தனது துவிச்சக்கர வண்டியின் சீற்றில் வைத்து அவர்களது கோரிக்கைக் கடிதத்தினை எழுதிக்
9
கொடுப்பது அவர் வாழ்ந்த காலத்தில் நாளாந்த நிகழ்வுகளாகியிருந்தன. தோழர் கார்த்திகேசன் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களினதும், தொழிலாளி, விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், தோழனாகவும் விளங்கினார்.
பாடசாலை விடுமுறை காலங்களில் பின்தங்கிய கிராமங்களுக்கு குடும்பத்துடன் சென்று அங்குள்ள வீடுகளில் பல நாட்கள் தங்கியிருந்து கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு தொடர்ச்சியான அரசியல் வகுப்புகளை மேற்கொள்வதை வழமையாகக் கொண்டிருந்தார். இந்த வகுப்புகளின் மூலம் கிராமத்திலுள்ள உழைப்பாளி மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும், பொதுவுடமைக் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும், ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரிகளின் உயர் வகுப்பு மாணவர் மன்றங்களின் இராப்போசன விருந்து வைபவக் கூட்டங்களுக்கு சிறப்புச் சொற்பொழிவாளராக தோழர்; கார்த்திகேசனையே பெரும்பாலும் அழைப்பார்கள். அவரது பேச்சில் அவரால் முன்வைக்கப்படும் ஆணித்தரமான கருத்துக்களும், அதிலும் தனக்கேயுரிய பாணியில்
10
நகைச்சுவையோடு கலந்து பேசும் அவரது ஆற்றல் பிரசித்தமானது. தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். நகைச்சுவை, கேலி, கிண்டல் என்பன கலந்த பேச்சாற்றலைக் கொண்டு விளங்கினார்.
தோழர் கார்த்திகேசனின் நூற்றாண்டு தின நிகழ்வுகள் நடைபெறும் இக்காலப் பகுதியில் அவரால் அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்ட பலர் சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும், துறைசார் வல்லுனர்களாகவும் விளங்குவதைக் காணமுடிகின்றது. புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்பவர்கள் பலர், தோழர் கார்த்திகேசனின் மாணவர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகின்றனர்.
இதேபோன்று தற்போதும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடதுசாரிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் அரசியலில் ஈடுபட்டு வருபவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் மாணவர்களாகவே இருப்பதும் அவரது அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்கு சிறப்புச் சேர்ப்பதாகவே அமைகின்றது.
– கே.சுப்பையா –

Share:

Author: theneeweb