ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடும்பங்கள் பாதுகாப்பாக அப்பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் 13 வீடுகளில் புகுந்துள்ளதனால் இந்த வீடுகளில் வாழ்ந்த 66 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களில் 35 ஆண்கள், 31 பெண்கள், 12 பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று வயது நிரம்பிய மூன்று பிள்ளைகள் இருப்பதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவகர் தெரிவித்தார்.

குறித்த குடியிருப்புகளுக்கு மேலாக குளம் ஒன்று அமைந்திருப்பதால் இந்த குளத்தில் நீர் உயர்ந்துள்ளதன் காரணமாகவும், குறித்த குளம் உடைபெடுத்தால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பதனை கருத்தில் கொண்டும் இக்குடும்பங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு பிரதேச இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கிராம சேவகர் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Share:

Author: theneeweb