க.பொ.த உயர்தர பரீட்சையை முன்னிட்டு விரிவுரைகள், கருத்தரங்குகள், தனியார் வகுப்புகளுக்கு தடை

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு அனைத்து கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை அமுலில் இருக்கும் என கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, பரீட்சை காலப்பகுதியில் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், சொற்பொழிவுகளை நடத்துதல், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துதல், யூகத்தின் அடிப்படையில் கேள்விகளை அச்சிடுதல் மற்றும் பகிர்தல் , சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகளை வெளியிடுதல் அல்லது தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களினூடாக பிரபல்யப்படுத்தல் அல்லது அவற்றை கைவசம் வைத்திருத்தல் என்பவற்று தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறி செயற்படுவோர் கல்விச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கணிக்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Share:

Author: theneeweb