நீதிபதி இளஞ்செழியன் குற்றவாளி ஒருவருக்கு விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் கொலைக்குற்றவாளி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட மரண தண்டனை சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பறிக்கை திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பை குற்றவாளிக்கு அறிவிப்பதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி அவரை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால், கண்டி போகம்பறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – முள்ளிபொத்தானை பகுதியில் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த இவருக்கு 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனைக்கு எதிராகக் குற்றவாளி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Share:

Author: theneeweb