கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தில் பயன்படுத்தப்படாது 24 இலட்சங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி நிதியத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் 24 இலட்சத்து 49 ஆயிரத்து 533 ரூபா நிதி காணப்படுகிறது.

1994ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த நிதியத்திற்கு அன்பளிப்புக்கள் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் மாவட்ட கல்வி அபிவிருத்தி தேவைகளுக்கு மட்டுமே குறித்த நிதி பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கேட்கப்பட்ட விபரங்களுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் 2009 க்கு பின் குறித்த நிதி கிளிநொச்சி மாவட்டத்தில் எந்த வகையான கல்வி அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

ஒரு சில பாடசாலைகள் மாவட்டச் செயலகத்திடம் குறித்த நிதியிலிருந்து தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகள் பல்வேறு சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக மாணவர்களின் கற்றல் மற்றும் இணைபாட விதானச் செயற்பாடுகளுக்காக மாகாண, தேசிய மட்டங்களுக்குச் செல்கின்ற போது அவர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமைகள் தொடர்ந்து வருகிறது.

இதனை தவிர குடிநீர் வசதிகள் இன்றியும் சில பாடசாலைகள் காணப்படுகின்றன. எனவும் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளன.

Share:

Author: theneeweb