எக்காலத்துக்கும் ஏற்புடையதான சிந்தனைகளை அருளிய பேராசான்

சுவாமி விபுலாநந்தர் அவர்களின் 72 வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ‘வெள்ளை நிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ’ என்ற பாடலை வாசித்ததும் எமது மனம் விபுலானந்த அடிகளாரையே நினைக்கின்றது.48 தமிழ்க் கட்டுரைகளையும், ஏழு ஆங்கிலக் கட்டுரைகளையும், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்களையும், நான்கு செய்யுள் நூல்களையும், யாழ் நூல்,நடராச வடிவம், உமாமகேசுவரம்,கலைச்சொல் அகராதியின் ஒரு பகுதி போன்ற பல நூல்களை அடிகளார் எழுதியுள்ளார்.

இவரைப் பற்றி அறிய விரும்புவோர் இன்று ஏராளம். சாதாரண மாணவர் முதல் புலமையாளர்கள் வரை இவரைப் பற்றியும் இவரது எழுத்துகள் பற்றியும் அறிய முயல்வர்.சுவாமி விபுலானந்தர் தமிழியல் சிந்தனையாளராக விளங்கியவர் என்பதற்கு அவரது பல்வேறு பணிகளும், படைப்புகளும் காரணமாக இருந்தன.

ஆசிரியராக அதிபராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, கண்டுபிடிப்பாளராக, ஆன்மீக வழிகாட்டியாக, பாடசாலை ஸ்தாபகராக, கல்விசார் குழுக்களின் உறுப்பினராக சிறந்த சொற்பொழிவு செய்பவராக, கலைச் சொல் ஆக்கராக, சங்கங்களின் அல்லது பேரவைகளின் தலைவராக பன்முக பரிமாணங்களை தமது பணிகளோடு வெளிப்படுத்தி நின்றவர்.அதுமட்டுமல்ல மொழி, பண்பாடு சமயம் சார்ந்த விடயத்தில் மிகுந்த பற்றுக் கொண்ட இவர், குடும்ப உறவு சார்ந்த விடயத்திலும் மிகவும் அக்கறையாக இருந்தார்.

சுவாமி விபுலானந்த அடிகளாரது தமிழ் ஆக்கங்கள் யாவற்றையும் படித்து அவற்றிலிருந்த சிறந்த கருத்துகளை மணிமொழிகளாக தொகுத்து (220 மணி மொழிகள்) கல்விஅமைச்சின் தமிழ் மொழிப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராகிய கலாநிதி என். நடராசா வெளியிட்டார்.

சுவாமி விபுலானந்தர் கீழைத்தேய சிந்தனை மரபில் மிகவும் வியத்தகு பற்றுடையவராவார். ஒரு துறையில் மட்டுமன்றி பல்வேறுபட்ட துறைகளில் தமது ஆழமான புலமையினை வெளிப்படுத்தியுள்ளார். சிறுவயதில் இருந்தே கணிதம், விஞ்ஞானம், சமயம், தமிழ் இலக்கிய இலக்கணங்கள், வரலாறு, தத்துவம் முதலியவற்றைக் கற்பதில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டியுள்ளார்.

பிற்பட்ட காலங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகள், அவர் எழுதியுள்ள நூல்கள், கவிதைகள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள் குறிப்பாக நிலவும் பொழிலும், நாடும் நகரும், மலையும் கடலும், கவியும் சால்பும், ஐயமும் அழகும், வண்ணமும் வடிவும், விஞ்ஞான தீபம், சூரிய சந்திரோற்பத்தி, வங்கியம், பொருணூற்சிறப்பு, உலகபுராணம், எண்ணளவை, லகரவெழுத்து, மதுரை இயற்றமிழ் மகாநாட்டுத் தலைவர் பேருரை, திருக்குறள் முதலதிகாரமும் திருச்சிவபுரத்துத் திருப்பதிகமும், இமயன் சேர்ந்த காக்கை , உள்ளங்கவர் கள்வன், உணவு, கரந்தை தமிழ்ச் சங்கத்தின் 22 ஆம் விழாவின் அறிமுக உரை, கங்கையில் எழுதியிடப்பட்ட ஓலை, சங்கீத பாரிஜாதம், சங்கீத மகரந்தம், இசைக் கிரமம், பண்ணும் திறனும், எண்ணும் இசையும், எண்ணும் எழுத்தும், சுருதி வீணை குழலும் யாழும், நீர மகளீர் இன்னிசைப் பாடல், இயல் இசை நாடகம், பாலைத்திரிபு போன்ற கட்டுரைகளில் செய்துள்ள விசாரணையை நோக்கும் போது இவரை ஒரு தத்துவ ஞானியாக அடையாளப்படுத்த முடியும்.

புலனடக்கம் என்பது முக்கியமான ஒன்றாகும்.அந்த வகையில் சுவாமி விபுலாநந்தரும் தனது சிந்தனைகளில் புலன்கள், புலனடக்கம் பற்றி மிக ஆழமாக கருத்துகளை கூறியுள்ளார். அகராதியில் புலனடக்கம் என்பதை தன்னடக்கம் என்பர்.புலனடக்கம் பற்றிச் சிந்தித்த சிந்தனையாளர்களுள் சுவாமிகளும் முக்கியமானவராவார். சுவாமிகளின் படைப்புகளில் குறிப்பாக கட்டுரைகள், கவிதைகள், நூல்களில் புலனடக்கத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

விபுலானந்தரின் நூல்களில் விபுலானந்தர் உள்ளம், விபுலானந்த அமுதம் ஆகிய இரு கட்டுரைத் தொகுதிகளிலமைந்துள்ள பல கட்டுரைகள் மிகவும் முக்கியமானவையாகும்.

விபுலாநந்தர் அவரது குறுகிய காலத்திற்குள் மாபெரும் சாதனைகளைச் செய்வதற்கு அடிப்படைக் கருவியாக அமைந்தது அவரது புலனடக்கமும் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஒன்றிணைந்த வாழ்க்கையாகும். இவர் இந்திய சிந்தனை மரபோடு ஒருமித்த வகையில் செயற்பட்டுள்ளார். வாழ்க்கையே தத்துவம், தத்துவமே வாழ்க்கை என்ற இந்திய சிந்தனையைத் தழுவிய வகையில் வாழ்ந்தவர் அவர். மனிதன் மனிதனாக வாழ்வதற்கு புலனடக்கம் கட்டாயம் தேவை எனக் கூறும் சுவாமிகள், புலன்களை ஒன்றுபடுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது என்பது இலகுவான காரியம் அல்ல என்றார்.

இளமையிலிருந்தே மனவடக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒருவன் சிறந்த மனசக்தியை பெறுவான் என்றும் சுவாமி கூறுகின்றார். இதனாலேயே விவேகானந்தரும் தனது கருத்துக்களில் வீரதீரமே தத்துவத்திற்கு அடிப்படையானது என்றார். வீரமில்லாதவனிடத்து ஞானம் உதிப்பதில்லை என்றார். இவ்விடயத்தில் உடன்பாடு கொண்ட சுவாமி விபுலானந்தர் தியானத்தின் மூலமாக கருத்தியல் சார்ந்த விடயத்தை ஒருவன் புரிந்து கொண்டு ஆற்றலையும் பக்குவத்தையும் பெறுகின்றான். அப்படிப்பட்டவர்களிடம் ஆன்மீக சக்தி அதிகரிக்கும். அவனே தெளிவடைந்தவன் என்கின்றார்.

விபுலானந்த சுவாமிகள் புலனடக்கம் முக்கியமானவை எனக் கூறினாலும் புலன்களை அடக்கி துறவறம் பூண வேண்டும் என்றோ அது கட்டாயம் என்றோ கூறவில்லை.மனிதன் மனிதனாக அறம் நிறைந்து வாழ்வதற்கு புலனடக்கத்தை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்என்கிறார்.

அத்தோடு மட்டுமல்லாது ஒருவர் தனது நோக்கில் அல்லது மனம் போன போக்கில் வாழ்நாளை வீணாக்காது ஒருமனிதன் தனது வாழ்நாளில் புலன்களை அடிப்படையாக கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி தான் விரும்பிய பல காரியங்களை இலகுவாக முடிக்கலாம் என சுவாமி அவர்கள் கூறுவது கவனிக்கத்தக்கதாகும். ஏன்எனின் உலகில் பலர் தனது விரும்பியபடி வாழமுயற்சிப்பதையும் அதனால் பல இன்னல்களை அனுபவிப்பதையும் நாம் காண்கின்றோம். இதனால் தான் கீழைத்தேய சிந்தனை மரபில் முனிவர்கள், ஞானிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் தாம் ஐம்புலன்களை அடக்காததால் அடைந்த இன்னல்களையும், அடக்கியதால் கண்ட நன்மைகளையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

சுருக்கமாகப் பார்க்கும் போது சுவாமி விபுலாநந்தரின் சிந்தனைகளின் ஆழமும், தெளிவும் இவரை ஒரு சிறந்த தத்துவவாதியாக பரிணமிக்க செய்கின்றன. அவரது விஞ்ஞான அறிவு, சமயப்பற்று, இலக்கிய உணர்வு, இரசனையியல் விபரிப்பு, கடமை உணர்வு அவரை என்றும் மறவாத கடந்த கால, சமகால தத்துவவாதியாக அடையாளப்படுத்துகின்றன. அவரை என்றும் ஞாபகப்படுத்துவது மானிடப் பணியாகும்.

கலாநிதி
க.கணேசராஜா,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

Share:

Author: theneeweb