முஸ்லிம் இனப்பெருக்க பீதியும் – சிங்கள இனப்பெருக்க இயக்கமும் – என்.சரவணன்

அரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித்தல்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த போக்கின் விளைவாக வரிசையாக பல குற்றச்செயல்களை அச்சமூகத்தின் திட்டமிட்ட செயலாக புனைந்து பரப்பி வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மும்முரமாக வளர்ந்துவிட்டிருப்பதை நாமறிவோம்.
ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னான முஸ்லிம் சமூகத்தின் வாழ்நிலை என்பது சிங்கள பௌத்த சக்திகளால் தீர்மானிக்கின்ற ஒன்றாக பரிமாணம் பெற்றிருக்கின்றது.
புர்கா தடை, ஹலால் எதிர்ப்பு, முஸ்லிம் கடைகள் புறக்கணிப்பு, மதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யும் நிர்ப்பந்தம், மாட்டிறைச்சி தடை என்கிற வரிசையில் முக்கிய ஒன்றாக பரிணமித்திருப்பது “சுய இனப்பெருக்க சதி”, ஏனைய இனங்களை “மலட்டுத்தனத்துக்கு உள்ளாக்கும் சதி” போன்ற ஐதீகங்களே.
டொக்டர் ஷாபி மீது கருத்தடை ஒப்பரேசன் குற்றச்சாட்டுகள் ஆயிரக்கணக்காக சுமத்தப்பட்டபோதும் பொலிஸ் விசாரணையில் அத்தனையும் போலிக் குற்றச்சாட்டுக்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கடையொன்றில்  கொத்துரொட்டியில் மலட்டு மருந்து கலந்திருப்பதாகக் கூறி ஏற்படுத்தப்பட்ட சண்டை வேகமாக பரவி அது பெரும் கலவரமாக உருமாறியது. இதன் நீட்சியாக தற்போது முஸ்லிம்களின் வியாபராத்தைக் குறிப்பாக இலக்கு வைத்து அவர்களின் பொருட்கள் அனைத்திலும் இப்படி கருவுறுவதை தடுக்கும் வழிகள் உள்ளன என்றும் அனைத்தையும் புறக்கணியுங்கள் என்றும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வியாபாரத்தை அழிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் அணியும் பிராக்களிலும், மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகளிலும் கூட ஜெல்கள் மூலம் இந்த கருத்தடை சதிகள் நடப்பதாக வீடியோக்களும் பரவவிடப்பட்டிருந்ததை நாம் கவனித்தோம்.
இதன் விளைவாக சிங்கள பௌத்தர்களால் சந்தேகத்துக்குள்ளாகும் அத்தனை வியாபார நடவடிக்கைகளும் பொலிஸ் முறைப்பாட்டுக்கு உள்ளாகின. அவற்றில் பல நீதிமன்ற வழக்கு விசாரணை வரை கொண்டு செல்லப்படுகின்றன.
இலங்கையில் கருக்கலைப்பு தடை. செய்யப்பட்டிருக்கிறது. எனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக நடத்தும் பல நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால் அப்படியான நிலையங்களை பல சிங்களவர்கள் நடத்திவருகிறபோதும் ஒரு முஸ்லிம் அகப்பட்டுவிட்டால் அது முஸ்லிம் சமூகத்தின் திட்டமிட்ட சதியாக புனையப்பட்டு பெரும் பிரச்சாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுபோலத் தான் போலி மருந்து விற்பனை நிலையங்களும்.
இந்த விளம்பரங்களைப் பாருங்கள். ஒரே நாளில் (13.07.2019) வெளிவந்த அறிவித்தல்கள் இவை. இப்போதெல்லாம் நீதிமன்றங்களே தீர்ப்பின் அங்கமாக குற்றமிழைத்தவர்களை “பொதுமன்னிப்பு அறிவித்தலை” பகிரங்க ஊடகங்களின் வழியாக செய்யும்படி கட்டளையிடுகின்றன. இப்படியான அறிவித்தல்களை சிங்கள சமூகத்தவர் செய்ததாக பார்த்ததில்லை. சில வேளை சிங்கள சமூகத்தவரும் எங்காவது மன்னிப்பு கோரியிருக்கலாம். ஆனால் இப்போது நிகழ்பவை விரிவாக ஆராயப்படவேண்டியவை. குறிப்பாக சமகால நெருக்கடி சூழலில் சிங்கள பௌத்த மனோநிலையை திருப்திபடுத்துவதற்காக; “நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பு” எடுத்துவரும் நடவடிக்கைகளே இவை.
தமிழில் நேற்றைய தினகரன் பத்திரிகையில் வெளிவந்த அறிவித்தல் இது.

2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை சட்டத்தின் 131ஆம் பிரிவின் கீழாக மற்றும் கெளரவ நீதிமன்றத்தின் கட்டளை பிரகாரம், இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பு கோரல் மாத்தறை, சம்போதி மாவத்தை , இலக்கம் 29இல் வதியும் ஏ.எஸ். எம் நிஸார் ஆகிய நான், மாத்தறை, புதிய தங்காலை வீதி, இலக்கம் 238பீ என்ற முகவரியில் அமைந்துள்ள சென்ட்ரல் பாமசி எனப்படும் மருந்து விற்பனை நிலையத்தின் உரிமையாளராவேன். மேற்படி மருந்து விற்பனை நிலையத்தில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதிப் பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளாது, நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) மற்றும் பாலியல் தூண்டிகளை (Sex Stimylants) களஞ்சியப்படுத்திய தவறுக்கு, வழக்கு இலக்கம் 86225 கீழாக தொடரப்பட்ட வழக்கில் நான் குற்றவாளியாகக் காணப்பட்டதால், மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் மூலம் ரூ.100,000.00 அபராதம் விதிக்கப்பட்டு, அதைச் செலுத்தத் தவறினால் 06 மாதகால சிறைத்தண்டனையொன்று விதிக்கப்பட்டுள்ளதாக இத்தால் பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன். இந்த தவறை நான் மீண்டும் இழைக்க மாட்டேன் என உறுதியளிப்பதோடு, குற்றம் புரிந்தமை தொடர்பில் இலங்கை பொது மக்களிடம் மன்னிப்பும் கோருகின்றேன்.

இதே அறிவித்தல் நேற்றைய தினம் வெளியான சிங்கள தினமின பத்திரிகையிலும், ஆங்கில டெயிலி நியூஸ் பத்திரிகையிலும்  வெளிவந்திருக்கிறது. அதே சிங்களப் பத்திரிகையில் மேலும் சிங்களத்தில் மொஹமத் சாலி மொஹமத் என்கிற ஒருவர் “கருத்தடை” மருந்துகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததற்காக ஐம்பதினாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மன்னிப்பு கோரும் ஒரு அறிவித்தலும் வெளியாகியிருக்கிறது.
சிங்கள செய்திகளை காணும் போது இதுபோன்ற வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாக அறிய முடிகிறது. எனவே இனி வரும் நாட்களில் இப்படி பொது மன்னிப்பு அறிவித்தல்கள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாக வாய்ப்புகள் உண்டு.
இப்படியான அறிவித்தல்கள் இன்னொருபுறம் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்கள் பற்றிய புனைவுகளை உறுதிபடுத்தும் ஒன்றாகவே அமையப்போகின்றன என்பது உறுதி. குற்றம் செயம் அனைத்துக் குற்றவாளிகளும் நீதிமன்றங்களால் இப்படித்தான் ஊடகங்களில் பொதுமன்னிப்பு அறிவிப்பை செய்யும்படி கட்டளையிடப்படுகின்றனவா? ஏன் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஏன் குறிப்பிட்ட குற்றசெயல்கள் மட்டும் இந்த இலக்குக்கு ஆளாகின்றன.
இன்னொன்றையும் கவனியுங்கள் சிங்களத்தில் மாத்திரம் ஏனையவற்றைப் போல ஒரு சாதாரண அறிவித்தலாக இல்லாமல் வடிவைக்கப்பட்டு பெயரையும், குற்றத்தையும் தனியாக பெரிய எழுத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். தினமின பத்திரிகையில் வெளியான ஏனைய பொது அறிவித்தல்களுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பக்கலாம்.
இனப்பெருக்க இயக்கம்
முஸ்லிம்கள் திட்டமிட்டு தம்மினத்தை பெருக்குவதும் ஏனைய இனங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் திட்டமிட்ட சதியில் இறங்கியிருக்கிறது என்கிற பிரச்சாரம் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் கணிசமான அளவுவெற்றி பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்தப் பிரச்சாரங்களை முடுக்கிவிடுவதில் ஊடகங்கள், சிவில் அமைப்புகள், பௌத்த நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பரந்துபட்ட சக்திகள் கருமமாற்றி வருகின்றன. இன்று இந்த கருத்தாக்கம் நிருவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் வேடிக்கையான நீட்சி என்னவென்றால் இப்போது சிங்களவர்கள் தமது இனப்பெருக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்கிற ஒரு பிரச்சாரமும், அதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. “சிங்கள தறுவன் வவமு” (சிங்கள குழந்தைகளை உருவாக்குவோம்) என்கிற ஒரு இயக்கமே இதற்காக இப்போது தொடக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கென இணையத்தளம் (http://sinhaldaruwan.com), முகநூல் பக்கம் (https://www.facebook.com/SinhalaDaruwan/ ) எல்லாம் இருக்கிறது.
சிங்கள குடும்பமொன்றில் பிறக்கும் நான்காவது குழந்தைக்கு 50,000 ரூபாயும், ஐந்தாவது குழைந்தைக்கு 100,000 ரூபா பணமும் வெகுமதியாக வழங்கப்படுகிறது. இப்படி சிங்கள இனத்தைப் பெருக்கும் குடும்பங்களுக்கு இந்த வெகுமதியை வழங்க சிங்கள பௌத்த தனவந்தர்களை முன்வரும்படியும் தாம் ஒரு எற்பாட்டாளர்களே என்றும் அவ்வமைப்பு தமது பிரச்சாரங்களில் வெளியிட்டு வருகிறது. உதவி கோருவோர் இணையத்தளத்திலேயே விண்ணப்பிக்கும் வசதிகளை செய்திருக்கிறார்கள்.
இந்த அமைப்பு குறித்து கடந்த யூலை 14 ஞாயிறு அன்று திவயின பத்திரிகையில் வெளியான கட்டுரையில்

“சிங்கள இனத்தை காக்க சிங்களவர்கள் கைகொடுக்காமல் உலகில் வேறெவர் கைகொடுக்கப் போகிறார்கள். ஒரு இனம் என்கிற வகையில் ஏற்கெனவே நாம் அதிகம் தாமதித்திருக்கிறோம். இப்போதாவது சரியான நடவடிக்கையில் இறங்காவிட்டால் இந்த நிலைமையை சரி செய்ய முடியாமல் போய்விடும். இல்லையென்றால் நாம் பிறந்த நாட்டில் எமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய பெரிய இனம்; சிறுபான்மை இனமாகிவிடும். ஜிஹாத் எனப்படுவது வெறுமனே குண்டு வைப்பது மட்டுமல்ல…. முன்னரெல்லாம் ஒரு சிங்கள குடும்பத்தில் குறைந்தது ஐவர் இருந்தனர். அளவான குடும்பமே பொன்னான குடும்பம் என்கிற கருத்தாக்கத்தை விதைத்து நமது குடும்ப அலகை சிதைத்து விட்டார்கள். நாட்டின் பெரும்பான்மை இனம் “அளவான” குடும்பத்தை அமைக்கும்போது ஏனைய இனங்கள் ஐந்தாறு பேரைக்கொண்ட குடும்ப கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்கள். அதிவேகமாக அவர்களின் இனத்தை பெருக்கித் தள்ளினார்கள். இதைத் தான் நவீன ஆக்கிரமிப்பு என்கிறோம்…. இப்போதிருந்தே அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால் தான் எதிர்காலத்தில் இன விகிதாசாரத்தின் சமநிலையை நாங்கள் பேண முடியும்.”

நிறுவனமயப்பட்ட பேரினவாதம் இனப்பெருக்கம் குறித்த பீதியில் தமக்கான சவக்குழியை தாமே தோண்டிக்கொண்டிருக்கிறது. இனப்பெருக்கத்தை செயற்கையாக திட்டமிட்டு பெருக்குமுன் உலக ஜனப்பெருக்க வேகத்துக்கு ஈடுகொக்கமுடியாமல் உலகின் வளப்பற்றாகுறையை அதற்கேற்ப சரி செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கும் உலகப் போக்கைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் வெறும் “இனத்துவ” போபியா (phobia) மனநிலையிலிருந்து முடிவுகளை எடுக்கிறது பேரினவாதம்.

நன்றி  – அரங்கம்

நமது மலையகம்
Share:

Author: theneeweb