‘சந்திரமண்டலத்தில் பூலோகத்து மனிதன் கால்பதித்த ஐம்பதாண்டு நினைவுவிழா (20.7.1969)’ இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

 

அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ரோங் என்ற பெயர் கொண்ட எங்கள் உலகத்து சாதாரண மனிதன்,இன்னுமொரு கிரகமான சந்திரனில் கால் பதித்து ஐப்பதாண்டு ஆண்டுகள் பறந்துவிட்டன.அந்த மாபெரும் திறமையை ஞாபகப்படுத்த இன்று உலகம் பரந்தவிதத்தில் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பூமியிலிருந்து புறப்பட்டு,மூன்று நாட்கள் பிரயாணத்தின்பின் இன்னுமொரு கிரகத்தில் மனித காலடிகள் பதிந்ததை உலகம் பரந்த கோடிக்கணக்கான மக்கள் 20.7.1969ம் ஆண்டு டிவியில் பார்த்து வியந்தார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த வானுலக விஞ்ஞானிகளாக திரு. நீல் ஆர்ம்ஸ்ரோங், திரு.பஷ் ஆல்ட்ரின்,திரு மைக்கல் கொலின்ஸ் என்பவர்கள் 1958ம் ஆண்டு விண்ணுலக ஆராய்ச்சிகளுக்காக அமைக்கப் பட்ட அமெரிக்காவின் ‘நாசா’ ஸ்தாபனத்தின் முயற்சியால், புலொரிடாவிலுள்ள கேப் கனவரல் விமானத்தளத்திருந்து சந்திரனுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்கள். அவர்கள் இன்னுமொரு கிரகத்தில் கால் வைப்பது சாத்தியமா என்ற ஐயம் பலரிடமிருந்தது. ஆனால் அன்று அமெரிக்கா செய்த அந்த மாபெரும் விஞ்ஞான பரீட்சையால் இன்று கடந்த கோடானு கோடியானவருடங்களாக மனிதர்கள் கற்பனை செய்யமுடியாத விஞ்ஞான வளர்ச்சியால் மனித வாழ்க்கையே பன்முகத்தன்மையாக வளர்ச்சியடைந்து மாறுபட்டிருக்கிறது.

அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதை விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்துகொண்டு போகும் இரஷ்யாவைப் பின்தள்ளும் முயற்சியாக எடுத்துக் கொண்டது. இரண்டாம் உலகப்போரில்,1945ம் ஆண்டு அமெரிக்கா இரஷ்யாவுடன் சோர்ந்து ஹிட்லரை அழித்து உலகத்தை ஹிட்லரின் பாஸிசத்தில் அழிந்து போகாமல் காப்பாற்றியது.ஆனால் கம்யூனிசப் பொதுவுடமைத் தத்துவங்களில் அரசாளும் இரஷ்ய- முதலாளித்துவக் கொள்கைகளையுடைய மேறகத்திய நாடுகளும் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் கோட்பாடுகளின் எதிர்மாறான கொள்கைகளால் ஒருநாளும் எந்த விதத்திலும் ஒன்றுபட்டு உலக வளர்ச்சிக்குச் செயற்பட முடியாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இரு பெரும் சக்திகளிடையேயும் பல சந்தேகங்களும் பிணக்குகளும் வளரத் தொடங்கின.

1946ம் ஆண்டு பிரித்தானிய முதிர்ந்த ராஜதந்திரியான வின்ஸ்டன் சேர்ச்சில், இரஷ்யாவின் கொம்யூனிச அரசியல் கொள்கையையும் இரஷ்யா பலநாடுகளைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதை எதிர்க்கவேண்டும் என்று சொன்னார்.அன்றிலிருந்து உலகின் மாபெரும் சக்திகளுக்கிடையில் ஒரு ‘பனிப்போர்’ வளரத் தொடங்கியது.

இரஷ்யாவின் ஆதிக்கத்தில்,ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் அத்துடன் ,அல்பேல நாடுகளும்; இரஷ்யாவுடன்; இணைக்கப் பட்டன. இதனால் சோவியத் இரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் இதனால் மறைமுகமாப் பல போராட்டங்கள் நடந்தன.இதற்கு உதாரணமாக வட கொரியுத்தத்தையும் கியுபா மிசைல்ஸ் பிரச்சினைiயும் சில உதாரணங்களாகக் காட்டலாம்.

இரஷ்யாவின் கம்யூனிசத் தத்துவ வளர்ச்சி மட்டுமல்லாது ,1950 ஆண்டு தொடக்கம் இரஷ்யாவின்; விஞ்ஞான வளர்ச்சி அமெரிக்காவைத் திக்குமுக்காடப் பண்ணியது.அமெரிக்கா இரஷ்யாவுடன் தொழில் வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியுலும் போட்டி போடும் நிலைக்குத் தள்ளுப் பட்டது.

இரஷ்யா ஏற்கனவே,1957ம் ஆண்டு பூலோகத்தைச் சுற்றி வரும் மனிதரற்ற ‘ஸ்புட்னிக்’ கிரகத்தை அனுப்பியிருந்தது. 3.11.1957ம் ஆண்டு விண்ணுலகைச்; சுற்றிவர ‘லைக்கா’ என்ற நாயை இரஷ்யா அனுப்பியது. அதைத் தொடர்ந்து, 12.4.1961ம் அன்று ‘யூரி காகாரின்’ என்ற இரஷ்ய விமான ஓட்டி பிரபஞ்சத்தைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டார்.

ஆக்கால கட்டத்தில், இரஷ்ய அதிபர் குருஷேவைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி, இருநாடுகளும் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகளைச் செய்யலாமா என்று கேட்டதற்கு குருஷேவ் மறுத்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. இரஷ்யா தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வுகளும் நிகழ்வுகளும்; அமெரிக்காவைத் திகைக்கப் பண்ணியது. இரஷ்யாவின் வானுலக வெற்றி அமெரிக்காவின் பாரதூரமான அழிவுக்குக் காரணமாக அமையப் போகிறது என்று பயந்தார்கள். இரஷ்ய விஞ்ஞானி யூரி ககாரின் விண்ணுலகை வலம் வந்த நிமிடத்திலிருந்து அமெரிக்காவும் தங்கள் மனிதர்களை விண்ணுலகத்திற்கு அனுப்புவது தங்கள் கவுரவத்தைக் காப்பாற்றும் சாவாலாக எடுத்துக் கொண்டார்கள். பல நாடுகளைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் இரஷ்யா விண்ணுலகத்தையும் தங்கள் பிடிக்குள் அமிழ்த்துக் கொள்ள அமெரிக்கா விடப் போவதில்லை என்பதைச் செயலில் பாட்டும் நிர்ப்பந்தம் அமெரிக்கர்களின் தலையில் ஏற்றப் பட்டது.

இரஷ்யாவுடன் போட்டிபோட பிரபஞ்சத்தை வெற்றி கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்து ஜோன் எவ்.கென்னடி அமெரிக்கா உடனடியாக விண்ணுலக ஆராய்சியில் முழுமூச்சாக ஈடுபடவேண்டும் என்று யூரி ககாரின் விண்ணுலகம் சென்று வந்த ஒருமாதத்திற்குள், வைகாசி 1961ல் தனது உரையில் அமெரிக்க விஞ்ஞானிகளை மனமுருக வேண்டிக் கொண்டார்.

ஆனாலும் அமெரிக்காவால் உடனடியாக விண்ணுலகப் போட்டியை அமுல் நடத்த முடியவில்லை. இரஷ்யாவோ, வெறும் விண்ணுலக’ஸ்புட்னிக்’ கலம், ‘லைக்கா’நாயை வைத்த விண்கலம்,அதைத் தொடர்ந்து விமான ‘ஓட்டி யூரிககாரின் என்று பல வித விண்ணுலகப் பிரயாணங்களை மேற் கொண்டதுமட்டுமல்லாமல் 16.6 1963ம் ஆண்டு திருமதி.வலன்ரின் ரெரஸ்கோவா என்ற பெண்ணையும் விண்ணுலகத்தைச் சுற்றிவர அனுப்பியது.

அதைப் பார்த்த கென்னடி அவமானத்தால் துடித்திருக்கவேண்டும். அமெரிக்கா எப்படியும் இந்தப் பத்து வருடங்களுக்குள் விண்ணுலகத்தை ஆளுமை கொள்ளும் தகுதியைப் பெறவேண்டும் என்று கென்னடி மிகவும் உருக்கமாக அவர் இறப்பதற்குச் சிலமாதங்களுக்கு முன் வேண்டிக் கொண்டார்.அமெரிக்கா விண்ணுலக ஆய்வு நிறுவனம் இரவுபகலாகக் கடுமையாக உழைத்தது. வியட்நாம் போரில் போராளியாகக் கடமையாற்றிய நீல் ஆர்ம்ஸரோங் ‘அப்போலோ 11ன் கப்டனாகத் தெரிவு செய்யப் பட்டுப் பயிற்சியளிக்கப் பட்டார்.அவருடன் பஷ் ஆல்ட்ரின்,மைக்கல் கொலின்ஸ் என்ற இருவரும் தெரிவு செய்யப் பட்டார்கள்.

கொம்யுட்டர்களின் வளர்ச்சி மிகக் குறைவாக இருந்த அக்கால கட்டத்தில் ‘நாசா’ நிறுவனத்தினர் இரவு பகலாகக் கடும் பரிசோதனைகளைச் செய்து விண்ணுலகத்திற்கு மனிதனைக் கொண்டு செல்லும் பணியைத் திறமாகவும் கவனமாகவும் செய்யத் தேவையான கொம்யுட்டரைத் தயாரித்தார்கள்.

விண்ணுலக ஆய்வுகளில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைக்கும் முயற்சிகள் மிகவும் கவனமாக மேற்கொள்ளப் பட்டன.விண்ணுலக விஞ்ஞானிகளுக்கான கொம்பியுட்டரால் டிசைன் பண்ணப் பட்ட விசேட உடையை இரு பெண்களும் ஒரு ஆணும்; தங்கள் கைகளால் தயாரித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.

அப்போலோ 11 என்ற நாசாவின் விண்கலம் 17.7.1969ம் ஆண்டு இவ்வுலகை விட்டு விண்கலம் நோக்கிய தனது மூன்று நாள் பிராயணத்தை மிகவும் வெற்றியாக முடித்து மனித இனம் இதுவரை கற்பனை செய்யாத மேலுலகத்தைத் தாண்டி 20.7.1969ம் ஆண்டுசந்திரனிற் கால்பதித்து,மனித இனத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றியது.

சுந்திர மண்டலத்தில் முதலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ரோங் என்ற விண்ணுலக விஞ்ஞானி தூரத்தில் ஒரு சிறு பந்தாகத் தெரிந்த எங்கள் பூவலகத்தைப் பார்த்து வியந்ததாகச் சொல்லப் படுகிறது. அவர் காலடி எடுத்து வைத்ததை ‘மிகப் பிரமாண்டான மாற்றத்திற்கான சிறு காலடி’ என்ற விபரித்ததாகச் சொல்லப் படுகிறது.இந்தப் பிரமாண்டமான பிரபஞசத்தில் பூமி ஒரு வெறும் சிறு பந்து-மிகவும் பலவீனமான நிலையுடன் உருண்டு கொண்டிருக்கும் ஒரு கிரகம் என்ற உண்மை அவருக்குத் தெரிந்ததாகச் சொல்லப் படுகிறது. அப்போலோ 11 தரையிறங்கிச் சில வினாடிகள் நீல் ஆர்ம்ஸரோங்கிடமிருந்து எந்த விதமான ஒலியும் வரவில்லை என்கிறார்கள். விண்ணுலகம் வந்து விட்டேனா என்ற அதிர்ச்சியோ யார் கண்டார்கள?அவர் காலடி எடுத்து வைத்த காட்சியை உலகின் பல பாகங்களிலுமிருந்து பல கோடி மக்கள் வியந்து பார்த்தார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் விண்ணுலகப் பிரயாணக் கனவு நனவானது. ஆனால் அதைக் காணக் கொடுத்துவைக்காமல் கென்னடி 1963ம் ஆண்டு கொலை செய்யப் பட்டு விட்டார். விண்ணுலகிலிருந்து வந்தவர்களை வரவேற்க அன்றைய ஜனாதிபதி நிக்சனின் தலைமையில் அமெரிக்கா திரண்டது.விஞ்ஞான வளர்ச்சியில் இரஷ்யாவைத் தோற்கடித்த அமெரிக்கா அகில உலகத்தாலும் மதிக்கப் படும் மகா சக்தியாக உருவெடுத்தது.

அன்றிலிருந்து 1972ம் ஆண்டு வரை அமெரிக்கா தனது விண்ணுலக நடவடிக்கைகளைத் தொடந்தது. ஆனால் நீல் ஆர்ம்ஸ்ரோங் எதிலும் ஈடுபடாமல் தனது வீட்டோடு ஜக்கியமனார். அப்போலோ 11 சந்திரனில் இறங்கிய பெருமை பற்றியோ அல்லது அந்தப் பிரயாணம் சார்ந்த எந்த விடயம் பற்றியும் நீல் ஆர்ம்ஸ்ரோங் அவர் இறக்கும்வரை யாருடனும் பேசிக் கொள்ளவில்லையாம்.அவரின் குழந்தைகள் இருமகன்களும்; விண்ணுலக ஆய்வுகளில் அக்கறை காட்டவில்லை.

1972ம் ஆண்டு அமெரிக்காவின் விண்ணுலக முயற்சிகள் ஜனாதிபதி நிக்ஸனால் நிறுத்தப் பட்டது. ஆனால் இந்தியா உட்படப் பல நாடுகள் இன்று விண் வெளியில் ஆயிரக் கணக்கான விண்கலங்களைப் பலகாரணங்களுக்காக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சைனா சந்திரனின் அடுத்த பக்கத்தில் தனது கலத்தை இறக்கியிருக்கிறது. 2030ம் ஆண்டளவில் மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்புவதாகச் சீனா சொல்கிறது. சில காலத்தில் மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு கோடி டொலர் செலவில் உல்லாசப் பிரயாணிகளாகச் சந்திரனில் இறங்கும் சந்தர்ப்பமிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஜம்பதாண்டுகளுக்கு முன் நடந்த இந்த அற்புத நிகழ்ச்சியின்பின் மனிதர் கற்பனை செய்ய முடியாத விதத்தில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. மனிதர்களின் அறிவு பல விதத்திலும் பரவியிருக்கிறது. நாங்கள் வாழும் பூமி என்பது எப்போதும் சாஸ்வதாமான நிலையில் இருக்கப் போவதில்லை என்ற உண்மை தெரிகிறது. இப்போது பல நாடுகளும் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கும் முயற்சிகளை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். செவ்வாயில் ஒருகாலத்தில் உயிரினம் வாழ்ந்த தடயங்கள் இருக்கின்றனவா என்ற தேடுகிறார்கள்.அத்துடன் அங்கு கிடைக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களில் பல நாடுகளும் தங்கள் பார்வையைத் திருப்புகின்றன என்பதும் தெரிகிறது. எப்படியிருந்தாலும் சந்திரனில் கால் பதித்த மானுடம் செவ்வாய்க்கும் செல்லலாம்.

செவ்வாய் தோசம் உள்ள தமிழர்கள் போவார்களா தெரியாது!

Share:

Author: theneeweb