கிளிநொச்சியில் 4000 வீட்டுத்திட்டப் பயனாளிகள் நெருக்கடியில்

கிளிநொச்சி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் 4018 பேர் வீடுகளை அமைக்க முடியாது நெருக்கடிக்குள் காணப்படுகின்றனர்.

வீட்டுத்திட்டங்களுக்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஏனைய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து வீடுகளை அமைக்க முடியாது தெரிவு செய்யப்பட்டுள்ள வீட்டுத்திட்டப் பயனாளிகள் நெருக்கடிக்குள் காணப்படுகின்றனர். என வீட்டுத்திட்டப் பயனாளிகள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் ஆரம்பம் முதல் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஓடி ஓடி வீட்டுத்திட்டங்களுக்கு அடிக்கல் வைத்து மக்களுக்கு நம்பிக்கையளித்து வந்தனர். ஆனால் அந்த நம்பிக்கைக்கு அமைவாக வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. 1405 கொத்தனி வீடுகளும்,2613 வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஏனைய வீடுகளுமாக 4018 வீடுகள் அமைப்பதற்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன் கொடுப்பனவுகளை வழங்கி வீடுகளை புனரமைக்க உதவுமாறு தெரிவு செய்யப்பட்டுளள வீட்டுத்திட்டப் பயனாளிகள் கோரியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் ரி. சுபாஸ்கரனை தொடர்பு கொண்டு வினவிய போது தலைமை அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையே பயனாளிகளுக்கு கட்டம் கட்டமாக நிதியினை வழங்க முடியாதுள்ளது. இருப்பினும் இருபது மில்லியன் நிதி விரைவில் தருவதாக தெரிவித்துள்ளனர் எனவே குறித்த நிதி கிடைக்கப்பெற்றதும் பயனாளிகளுக்கு படிப்படியாக வழங்குவோம் என்றார்.

Share:

Author: theneeweb