ஆர்.ரி. ஐக்கு பொய்யான தகவலை வழங்கியதா கிளிநொச்சி மாவட்டச் செயலகம்?

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் தகவல் அறியும் சட்டமூலம் கோரப்பட்ட தகவல் ஒன்றுக்கு பொய்யான தகவலை வழங்கியமை அச் சட்டத்தின் மூலமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆதாவது 21-03-2019 அன்று தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் கிளிநொச்சியிலிருந்து றோல் போல் விளையாட்டுக்காக இந்தியா சென்ற இரண்டு வீராங்கனைகளுக்கு போக்குவரத்துக்காக வழங்கப்பட்ட நிதி எந்த நிதி, எப்போது வழங்கப்பட்டது என்ற விபரம் கோரப்பட்டிருந்தது.

இதற்கு 10-04-2019 திகதியில் பதிலளித்த கிளிநொச்சி மாவட்டச் செயலகம் குறித்த நிதியானது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிகழச்சி திட்ட ஒதுக்கீட்டுக்கு அமைவாக மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தின் நிதியின் ஊடாக 20.02.2019 திகதியன்று வழங்கப்பட்டது என தகவல் வழங்கியிருந்தது.

ஆனால் கடந்த மாதம் கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு பற்றிய கூட்டம் ஒன்றில் மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்திற்கு றோல் போல் வீராங்கனைகளுக்கு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்திருந்தார். எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கோரிய தகவலின் படி

ஆதாவது கரைச்சி பிரதேச செயலகத்திடம் கடந்த 26.06.2019 அன்று றோல் போல் விளையாட்டுக்காக இந்தியா சென்ற இரண்டு வீராங்கனைகளுக்கு எந்த நிதியிலிருந்து எப்பொழுது எவ்வளவு வழங்கப்பட்டது என்ற தகவல் கோரப்பட்டிருந்தது. இதற்கு 18-07-2019 அன்று பதிலளித்த கரைச்சி பிரதேச செயலகம்

2019 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களினால் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அனுமதி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனகள் அமைச்சினால் கிடைக்கப்பெற்றதும் நிதி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்டுள்ளது.

எனவே பிரதேச செயலகத்தின் தகவலின் படி பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதிக்கு இன்னமும் மேற்படி அமைச்சினால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே பிரதேச செயலகத்தினால் 18.07.2019 வரை நிதி விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாவட்டச்செயலகம் வழங்கிய தகவலில் 20.02.2019 அன்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தகவலை வழங்கியுள்ளது. இதன் படி கிளிநொச்சி மாவட்டச் செயலகம் பாராளுமன்ற உறுப்பினருக்கு மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியிலிருந்து கடன் வழங்கியிருக்க வேண்டும் அல்லது பொய்யான தகவலை தகவலை வெளியிட்டிருக்க வேண்டும்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி திரவப் பணமாக எந்தவொரு செலவும் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நடைமுறைகளுக்கு மாறாக பாராளுமன்ற உறுப்பினருக்கு கடனாக பணம் வழங்கியதா? கிடைக்காத நிதியை வழங்கியதாக ஏன் தகவல் வழங்க வேண்டும் போன்ற கேள்விகள் எழுகின்றன

Share:

Author: theneeweb