இலக்கியப் போலிகளும் அரசியற் போலிகளும் – கருணாகரன்

சற்று ஊன்றிக் கவனித்தீர்களென்றால் இலக்கியப்போலிகளுக்கும் அரசியல் போலிகளுக்குமிடையில் பெரிய வித்தியாசமெதுமில்லை என்பதைக் கண்டு கொள்வீர்கள். அதோடு இவையிரண்டிலும் மேலும் பல சனவிரோத உள்ளடுக்குகளையும் உங்களால் கண்டு கொள்ள முடியும். இரண்டுமே தங்களைத் தந்திரமாகச் சுத்தமாக்கிக் காட்ட முனைபவை. மற்றவைகளின் மீது எந்த ஆதாரங்களுமில்லாமல், நியாயங்களுமில்லாமல், ஏன் அடிப்படைகளே இல்லாமல் பழித்துரைப்பை மேற்கொள்பவை. இப்படிச் செய்வதன் மூலமாக உண்மையை மறைத்துத் தம்மை மேலுயர்த்தவும் முன்னகர்த்தவும் முயற்சிப்பவை. இதற்குக் காரணம், இரண்டுமே தன்னலன், தம்முதன்மைப்பாடு சார்ந்து இயங்குபவை. இந்தத் தன்னலனே தன்முனைப்பையும் தனக்கான முதன்மைப்பாட்டையும் தேடி முன்னகர வைக்கிறது. என்பதால் இவை  முற்று முழுதாக வணிக அடிப்படையில் இயங்குபவை. வணிகத்தின் நுட்பங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்பவை. இங்கே வணிகம் என்பது தனியே பணத்தை மட்டுமே குறியாகக் கொள்வதில்லை. புகழ், அடையாளம், சமூக மற்றும் வரலாற்று முதன்மைப்பாடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட வணிகம் இது.

இப்படி வணிக லாபத்தைக் குறி வைக்கும்போது அங்கே அறம் காணாமல்போகிறது. அல்லது காணாமலாக்கப்படுகிறது. பதிலாக அது வணிக அடிப்படையை மட்டுமே  பெற்றுவிடுகிறது. அப்படி லாபத்திற் குறி வைக்கப்படும் வணிக முயற்சியானது அடிப்படையில் சன விரோதம், சமூக விரோதம், சூழல் விரோதம், வரலாற்று விரோதம் என அனைத்திலும் விரோதத்தையே தன்னகத்தில் கொள்கிறது. இதையிட்ட கவலையோ, வெட்டமோ, குற்றவுணர்ச்சியோ இவற்றுக்கு ஏற்படுவதில்லை. தன்னையோ தம்மையோ மையப்படுத்திச் சிந்திக்கும்போதே பிறவனைத்தும் பொருட்படத் தவறிவிடுகின்றன. அத்தோடு அவை கீழாக்கவும் படுகின்றன. ஆகவே அறத்தின் வீழ்ச்சியிலேயே இவை உயிர்வாழ்கின்றன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், இதை ஒரு போதுமே இவை ஏற்றுக்கொள்வதில்லை. பதிலாகத் தாமே அறம் உட்பட அனைத்தினதும் காவலர்களென நிறுவ முற்படுகின்றன. மறுவளமாகத்  தமக்கு எதிரான தரப்புகளையே அறவீழ்ச்சிக்குக் காரணமானவை எனக்காட்டி விடவும் முயற்சிக்கின்றன. இது சுத்த அயோக்கியத்தனம், அங்கிடுதத்தித்தனமாகும். இதைப் பலரும் அறிவர். ஏன் நம்மிற் பலருக்கும் கூட இவையெல்லாம் தெரியும். ஆனாலும் நாங்களும் இவற்றைக் குறித்து அதிகமதிகம் கவலைப்படுவதில்லை. “இதற்கெல்லாம் போய்ச் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா?” என்று மெல்ல ஒதுங்கி விடுகிறோம். சேற்றிலிருந்து வரும் பன்றியைக் கண்டால் தூர விலகி விட வேண்டும் என்று யாரோ சொன்னது அப்போது எங்கள் நினைவிலெழுந்து எங்களை விலகி விடச் சொல்கிறது. இதனால் பொய்களில் சவாரி விடுகிறவர்களுக்கு மேலும் வசதியாகிப்போகிறது. கேட்பதற்கு ஆளில்லை என்றால் தம்பி சண்டமாருதன் என்ற மாதிரியே இவர்கள் வெளியெங்கும் கோலோச்ச முற்படுகிறார்கள். இதற்கு அவர்களுக்குத் தாம் சார்ந்த அணிகள், குழுக்கள் போன்றவை மேலும் பலம் சேர்க்கும். இந்தப் பலத்தை வைத்துக் கொண்டே தம்மையும் தமது நோக்கையும் போக்கையும் நியாயமென நிறுவ முயற்சிக்கின்றன. இத்தகைய போக்கே ஈழ இலக்கியத்திலும் எழுத்தாளர்களில் ஒரு தொகுதியினரிடத்திலும் காணப்படுகிறது. இவர்கள் தங்களைச் சுத்தமாகக் காண்பிப்பதற்கு ஏராளமான முறைகளில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். கவனிக்கவும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதில்லை. சுத்தமாகக் காண்பிப்பதற்கே முயற்சிக்கின்றனர் என்பதை.

இந்தக் காண்பித்தல் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்குவதற்காக எழுத்தில் கலை வெளிப்பாட்டின் அவசியம், அழகியலின் அடிப்படைகள் என்றெல்லாம் இலக்கிய நாகரீகத்தையும் இலக்கிய அறிவியலையும் பேசுவர். இன்னொரு வகையில் அரசியலில் இனரீதியான அல்லது மத ரீதியான  சிந்தனைகளையும் அடையாளங்களையும் முன்னிலைப்படுத்துவர். இதற்கும் மேற்சென்று இதை கறுப்பு – வெள்ளை என ஒற்றைப்படையிலேயே முன்வைப்பர். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது.

இவ்வாறு கலை வெளிப்பாட்டின் அடிப்படைகள், அதில் அழகியலின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுக்குச் சொல் வலியுறுத்தல்களை முன்வைப்போர் தமது அணியைச் சேர்ந்தவர்கள் அதில் கோட்டை விட்டுத் தாழ்விறக்கம் கொள்ளும்போது அதைக் கண்டு கொள்வதில்லை. இதற்கு நல்லதொரு அண்மைய உதாரணம், தீபச்செல்வனின் “நடுகல்” நாவல் பற்றிக்  கள்ள மௌனத்தில் பலரும் உறைந்திருப்பதும் மறைந்திருப்பதுமாகும். “தீபச்செல்வனின் தமிழ்த்தேசிய அரசியல்” நோக்கோடு சமனிலை கொள்ளும் யமுனா ராஜேந்திரன் இதை நாவல் எனத் தன்னாற் கொள்ள முடியாதுள்ளது என்று அதற்கான காரணங்களை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். யமுனா ராஜேந்திரன் மட்டுமல்ல, அதனை வாசித்தவர்களிற் பலரும் இத்தகைய கருத்தையே கூறியிருக்கின்றனர். ஆனால் இதனை அழகியல் பற்றியும் இலக்கியப்பிரதியின் அடிப்படைத் தகுதிகளைப்பற்றியும் வரிக்கு வரி அடிக்கோடிட்டும் மேற்கோள்களிட்டும் அடையாளப்படுத்த முற்படுகின்ற அ. யேசுராசா உள்படப் பலரும் பேசாதே இருக்கின்றனர். இதற்குக்காரணம் வேறொன்றுமில்லை. யேசுராசாவும் தீபச்செல்வனும் இன்று ஒத்த நிலைப்பாட்டில் ஓரணி கொண்டிருப்பவர்கள் என்பது மட்டுமே. யேசுராசாவின் அரசியல் நிலைப்பாடும் தீபச்செல்வனின் அரசியல் நிலைப்பாடும் ஒன்றென்பதேயாகும். (இருவருடைய அழகியல் நிலைப்பாடுகள் வேறானவை) இதேபோல ஒத்த அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றாலும் யமுனா விலகி நிற்கிறார். யேசுராசா விலக முடியாமல் கள்ள மௌனத்தில் மறைந்து நிற்கிறார். யேசுராசா மட்டுமல்ல, இந்த அணியோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள பலரும் கூட தங்கள் மௌனத்தின் பின்னே உள்ளொடுங்கிக் கிடக்கின்றனர். இந்தக் கள்ள மௌனம் என்பது வெளிவெளியாகப் பேச முடியாத நிலையின் இயலாமையன்றி வேறென்ன? டானியலின் நாவல்களை அரசியல் பிரச்சார நாவல்கள், ஒற்றைப் படையானவை, வன்முறை மனோபாவத்தைக் கொண்டவை என்று விழித்தால் நடுகல் எதினிலிருந்து வேறுபட்டுயர்கிறது? இதைக்குறித்த பதில்களென்ன?

பதிலே வராது. அப்படி வருமாக இருப்பின் அது தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுச்சேர்க்கும் தகுதியைக் கொண்டிருக்கிறது. என்பதால், ஒடுக்கப்பட்ட இனமொன்றின் ஆன்மக்குரல் எனத் தகுதிப்படுத்தப்படும். இதே நியாயம் பிறருக்கும் பிறவற்றுக்கும் உண்டே. ஆனால் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளார். அப்படியென்றால் நாம் இன்னொன்றை இச் சந்தர்ப்பத்திற் கவனிக்க வேண்டும். இப்படி இவர்கள் பேசுகின்ற, பேச முற்படுகின்ற அரசியலுக்கும் தாம் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் கூட விசுவாசமாக இருப்பதில்லை என்பதை.

இன்று தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் அதனுடைய அரசியலையும் ஆதரிக்கின்ற எழுத்தாளர்கள் மற்றும் கலை வெளிப்பாட்டாளர்களில் எத்தனைபேர் அந்த அரசியலின் வழி மக்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்? (இதில் போராளிகள் விலக்கு)  தொடர்ந்து பங்கேற்கின்றனர்? எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்? எவ்வளவு பேர் மக்களோடிணைந்து எளிய வாழ்க்கையை வாழ்கின்றனர்? மக்கள் சந்தித்த, சந்திக்கும் நெருக்கடிகளில் தம்மையும் இணைத்தவர்கள் யார் யார்? இழப்புகளையும் வலிகளையும் நேரடியாகச் சந்தித்தவர்கள், தாங்கியவர்கள் எத்தனைபேர்? எத்தனைபேர் சமூகப் பிரச்சினைகளிலும் சமூகத்தில் நிலவும் சாதி, பிரதேச வேறுபாடு, பால் நிலை ஆதிக்கம் போன்ற அசமத்துவ நடைமுறைகளுக்கு எதிராகப் போரிடுகின்றனர்?

கேப்பாப்பிலவு, இரணைதீவு, வலி வடக்கு, சம்பூர், வடமராட்சி கிழக்க போன்ற பல இடங்களில் மக்கள் தங்கள் சொந்த நிலத்துக்குச் செல்வதற்காகப் போராடியபோது இவர்களில் ஒருவரைத்தன்னும் நான் கண்டதில்லை. இதைப்போலவே அரசியற் கைதிகள் என்ற சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்கான போராட்டம், குடிநீருக்கான போராட்டம், அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்களின் போராட்டம், மலையகத் தொழிலாளர்களுடைய சம்பள உயர்வுக்கான போராட்டம், சூழற்பாதிப்புக்கெதிரான போராட்டம், மரபுரிமை மீறலுக்கான எதிர்ப்பு என நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற எந்தப் போராட்டத்திலும் இவர்கள் பங்கேற்றதாகச் சரித்திரமே இல்லை. மட்டுமல்ல மீண்டும் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் அல்லது மேற்கிளம்பிக் கொண்டிருக்கும் சாதிய, பால்நிலை, பிரதேச ஒடுக்குமுறைகளைக் குறித்தும் இவர்களில் எவரும் எதுவுமே பேசுவதில்லை.

ஆனால், மேடைகளிலும் எழுத்திலும் தம்மைத் தீவிரப் போராளிகளாகவும் இன மாண்பினை வலியுறுத்துவோராகவும் தமிழ்த்தேசியவாதிகளாகவும் காண்பித்துக் கொள்கின்றனர். களத்தில் நின்று போராடுவதற்குப் பதிலாக, ஏனைய அத்தனை அசமத்துவங்களையும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்துக் கொண்டே அவற்றை மறைப்பதற்காக “தமிழ்த்தேசியம்” என்ற ஒரு பெருந்திரைக்குப் பின்னால் ஒழிந்து கொள்கின்றனர். அதேபோல தேவைப்படும்போது அந்தத் திரைக்கு முன்னே வந்து நின்று தேசியப்பற்றாளராக நாடகமாடுகின்றனர்.

இப்படி இரு நிலைப்பட்டுச்  செயற்படுவதை எப்படி, எந்தப் பெயரைக் கொண்டு அழைப்பது? மெய்யாகவே தமிழ்த்தேசிய அரசியலை ஆதரிப்பவர்களாக இருந்தால் அது வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டுக்கும் கோட்பாட்டுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்துப் போராட வேண்டும். அந்தப் போராட்டங்களோடு தங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். அதுவே அழகு. அதுவே நியாயம். அதுவே தகுதியான செயற்பாடு. ஒடுக்குமுறையினாலும் அதற்கெதிரான தமிழ்த்தேசியம் என்ற எண்ணக்கருவுடைய அரசியலின் விளைவுகளாலும் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்ற, பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு தம்மைப் பிணைத்துக் கொள்ளத் தயாரில்லாதபோது அது இழிவன்றி வேறென்ன? ஒரு சிறிய உதாரணம் அல்லது கேள்வி, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய போராட்டத்தில் என்றாவது நீங்கள் அதிதீவிரப் புனிதர்களாகத் தம்மைக் கட்டமைத்துக் கொண்டு தேசியப்பற்றைப் பற்றிப் பேசுவோரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இந்தப்போராட்டமும் இதில் ஈடுபடும் மக்களும்  இவர்களுடைய கண்களுக்குத் தெரிவதில்லையா? அல்லது இவற்றைப் பற்றித் தாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்கிறார்களா? சரி, இதுதான் கிடக்கட்டும். அரச ஒடுக்குமுறைச் செயற்பாடுகள், பௌத்த விரிவாக்கம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, அவசரகாலச்சட்டம், படையாதிக்கம் என இவர்களே வலியுறுத்துகின்ற சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இவர்கள் எங்கும் கிளர்ந்தெழுந்ததாக இல்லையே.

ஆனால், இந்தப் போராட்டங்களிலெல்லாம் மக்களோடு கலந்து கொள்ளும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமுண்டு. தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாக நின்றுகொண்டே அவர்கள் இதைச் செய்கின்றனர். அப்படிக் கலந்துகொள்ளும் இலக்கிய அமைப்புகளுமுண்டு. உதாரணம், தேசியகலை இலக்கியப் பேரவை. எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்றால் க. தணிகாசலம், சோ.தேவராஜா, தனுஜன், ஸ்ரீபிரகாஸ், மு. மயூரன், க. சத்தியசீலன், கிரிஷாந்த், யதார்த்தன், பா. அகிலன், சனாதனன், தமயந்தி,  எனப் பலர் இந்த வரிசையில் வருகின்றனர். இவர்கள் தம்மைச் சூழ நடக்கும் அனைத்து ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுகின்றனர். அனைத்துவகையான மானுட விரோத, சூழல் விரோத, பண்பாட்டு விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தம்மை முன்னிறுத்துகின்றனர். இதுதான் உண்மையில் அழகு. இதுதான் மாண்பு. இதுதான் உண்மையான சிறப்பு. இதுவே மெய். சொல்லுக்கும் செயலுக்குமிடையில் இடைவெளியும் மாறுபடுதலும் இல்லாத, பொய்மையும் போலியுமில்லாத தூய நிலை. எழுத்தின் மாண்பென்பது அதற்கு மாறாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளாமையாகும்.

இவர்களுடைய அரசியல் மக்களின் நன்மையைக் குறித்தது. சூழலின் பாதுகாப்பைக் குறித்தது. பண்பாட்டின் பேணுகையைப் பற்றியது. நீதியையும் ஜனநாயக விழுமியத்தையும் அடிப்படையாகக் கொண்டது. உலகளாவிய இயற்கை நேசிப்பையும் மானுட விருப்பையும் தழுவியது. இதையெல்லாம் அறிவியல் நோக்கிலும் பன்மைத்துவ நோக்கிலும் ஜனநாயக அடிப்படையிலும் நோக்குவது. அத்தகைய நோக்கே இவ்வாறு இவர்களை இந்தப் போராட்டங்களிலும் இந்த மேலான நன்மைகளிலும் பிணைத்துள்ளது எனலாம்.

எழுத்தாளரும் கலைஞர்களும் கட்டாயம் போராடித்தான் ஆக வேண்டுமா? போராட்ட இயக்கங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமா? இது கட்டாய விதியா? என்று யாரும் கேட்கக் கூடும். கட்டாயமில்லைத்தான். ஆனால், தாம் வலியுறுத்தும் தாம் நேசிக்கும் அரசியலோடு தம்மை இணைத்துக் கொள்ள முடியாதென்பதும் அதற்கு மக்களும் பிறருமே பொறுப்பு, அவர்களே போராட வேண்டும் என்று கருவதும் அதிகார நிலைப்பட்ட மனோபாவமேயாகும். தாம் கருத்துரைப்பவர் மட்டுமே.  அந்தத் தளத்தில் நின்று ஆதரவளிப்பவர் மட்டுமே. தெருவிலிறங்கிப் போராடுவது தமது வேலை அல்ல என்பது மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து விலகியிருப்பதாகும்.

இது போராடும் மக்களைக் கீழிறக்கி விலக்கம் செய்வதாகும். மக்களுடைய அலைச்சல்கள், போராட்டத்தில் செலவிடும் அவர்களுடைய உழைப்பு போன்றவற்றுக்கு நிகராகத் தம்மையும் தமது உழைப்பையும் செலுத்தத் தயாரில்லாத நிலை இரண்டகமானது.  சனங்கள் வேறு. தாம் வேறு என்ற பிரிகோட்டின் பாற்பட்டது. இந்த வேறுபாட்டையே எமது அரசியல்வாதிகளிற் பலரும் இன்று கொள்கின்றனர். இதனால்தான் எமது அரசியல் முன்னகர முடியாமற் தேக்கங்கண்டுள்ளது. ஆகவேதான் எமது சூழலில் “இலக்கியப் போலிகளும் அரசியல் போலிகளும்” என இரண்டு தரப்பையும் ஒன்றெனக்காணவும் சமப்படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

இலக்கியத்தில் எப்போதும் சர்ச்சைகளிருப்பதற்குப் பிரதான காரணம், அது கருத்து நிலைப்பட்டிருப்பதேயாகும். வலியுறுத்தப்படும் கருத்தியலுக்கும் அது கோரும் செயற்பாட்டுக்கும் அதன் வழி ஒழுகும் வாழ்க்கை முறைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கொள்ளும்போது சர்ச்சை உருவாகிறது. அரசியல் மயப்பட்ட எழுத்தாக இருந்தாலும் சரி, மிகக்கவனமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்தாக இருந்தாலும் சரி இரண்டுமே ஏதாவதொரு கருத்து நிலைப்பட்டேயிருக்கும். ஆனால், இதைச் சந்தர்ப்பங்களில் மழுப்பித் தப்பித்துக்கொள்ளவே சிலர் (எல்லோருமல்ல) அழகியல் முதற்கொண்டு இன, மத, தேசிய அடையாளங்களை வலியுறுத்தி அவற்றிற் சரணாகதி அடைவதும் அதைக் கவசமாக்கிக் கொள்வதுமாகும்.

வரலாற்றில் இதுவொன்றும் புதியதல்ல. ஒவ்வொரு போகத்துக்கும் முளைத்துச் சடைக்கின்ற களைகளைப்போல ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தப் போலிப் பதர்கள் முளைத்துச் சடைப்பது வழமை. ஆனால், வரலாறும் மக்கள் வாழ்க்கையும் இதற்கு அப்பாலானது. அது மக்களாலும் மக்கள் நேயச் சக்திகளாலும் உருவாக்கப்படுவது. அதுவே நிலைத்திருப்பது. இத்தனை ஒடுக்குறைகள், அதிகாரத்துவங்கள் அனைத்திற்குள்ளும் நின்று நிலைத்திருப்பது மக்களுடைய காலடிச் சுவடுகளே. அவர்கள் உருவாக்கிய வரலாறும் படைப்புகளும் வாழ்வுமே.

Share:

Author: theneeweb