ஒன்பது வயது சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்து சென்ற நபரை நையப்புடைத்த மக்கள்!!

கண்டி – தல்வத்தை பகுதியில் 9 வயதான சிறுமியொருவரை கடத்திச் செல்ல முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் உடதலவின்ன பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த நான்காம் திகதி குறித்த சிறுமி பாடசாலை நிறைவடைந்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, குறித்த நபர், சிறுமியின் தாய் நகரில் இருப்பதாகவும் தாம் அங்கு அழைத்து செல்வதாகவும கூறி அவரை உந்துருளியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

எனினும் சந்தேக நபர் சிறுமியை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட சிறுமி வீதியை நோக்கி ஓடியுள்ளார்.

பின்னர் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தியுள்ள சிறுமி சம்பவம் தொடர்பில் அதன் சாரதிக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி தாயிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், தாய் சம்பவம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காணொளிகளை பரிசோதனை செய்து சந்தேக நபரை இனங்கண்டுள்ளார்.

பின்னர் தனது வீட்டில் கூலி வேலை இருப்பதாக குறித்த நபரை ஏமாற்றி தமது வீட்டுக்கு அழைத்துள்ள சிறுமியின் தாய், அவரை பிரதேசவாசிகளுடன் இணைந்து மடக்கி பிடித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் கண்டி காவல்துறைக்கு அறிவித்து சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.

Share:

Author: theneeweb