இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 80 ஆவது ஆண்டு பூர்த்தி இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 80 ஆவது ஆண்டு பூர்த்தி இன்றாகும்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளிலும் தலைநகர் கொழும்பிலும் வாழ்ந்த மலையகத் தமிழர்களின் பாதுகாப்புக்கான ஓர் அரசியல் அரணாக இந்தியாவின் தலையீட்டுடன் 1939 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானது.

இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்கள் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டதால் இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்த விவகாரத்தில் நேரில் தலையிட்டது.

மகாத்மா காந்தியும், நேருவும் தீவிரமாக செயற்பட்டு 5 நிபந்தனைகளுடன் வெற்றிகரமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கை – இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவராக லக்ஷ்மன் செட்டியார் தெரிவுசெய்யப்பட்டார்.

முதலாவது மாநாட்டை செப்டம்பரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், முரண்பாடுகள் காரணமாக அது நடைபெறவில்லை.

1940 ஆம் ஆண்டு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர். கே. இராஜலிங்கவும் இணைந்து காங்கிரஸின் முதலாவது மாநாட்டை கம்பளையில் நடத்தினர்.
நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.

இதன்படி தலைவராக தொண்டமானும், பொதுச்செயலாளராக ராஜலிங்கவும் செயற்பட்டனர்.

காலப்போக்கில் இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது.

மிக முக்கிய தொழிற்சங்க தளபதிகளான, தொழிற்சங்க துறவி என போற்றப்படும் வெள்ளையன், வீடற்றவன் நாவல் தந்த சி.வி. வேலுபிள்ளை, அசீஸ் போன்றவர்களால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வளர்ச்சி கண்டது.

இலங்கை, இந்திய காங்கிரஸின் இரண்டாவது மாநாடும், இலங்கை – இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் முதலாவது மாநாடும் 1942 இல் கண்டியில் நடைபெற்றபோது இரு அமைப்புகளுக்கும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர் பதவிக்கு அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானும், அஸீசும் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பின்மூலமே தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அஸீசுக்கு ஆதரவாக 31 பேரும், தொண்டமானுக்கு ஆதரவாக 19 பேரும் வாக்களித்தனர்.

இதன்படி மேலதிக 12 வாக்குகளால் அஸீஸ் தலைவரானார்.

வாக்கெடுப்பு முடிவு தொண்டமானுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

அன்றிலிருந்தே இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஆரம்பித்தன.

எனினும், 1954 ஆம் ஆண்டு ஹட்டனில் நடைபெற்ற இலங்கை, இந்திய காங்கிரஸின் மாநாட்டின்போது தான் முரண்பாடு பகிரங்கமானது.

தலைவராக இருந்த அஸீஸ், இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சி.வி. வேலுபிள்ளையை ஆதரித்தார்.

குமாரவேலுவுக்கு சார்பாக தொண்டமான் அணி பிரசாரம் செய்தது.

ஒருகட்டத்தில் கட்சி – தொழிற்சங்கத்துக்குள் அஸீஸின் கையோ ஓங்கியிருந்தது.

பின்னர் முரண்பாடு காரணமாக அஸீஸ் வெளியேறினார்.

இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தையும் உருவாக்கினார்.

தொண்டமான் அணியிலிருந்த அமரர். வெள்ளையனும் கொள்கை ரீதியிலான முரண்பாடு காரணமாக பிரிந்து சென்று, தொழிலாளர் தேசிய சங்கத்தை அமைத்தார்.

சி.வி. வேலுபிள்ளையும் அதில் இணைந்தார்.

முக்கிய புள்ளிகளின் வெளியேற்றத்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு தளர்வடைந்திருந்தாலும், தொண்டமான், இராஜலிங்கம் உட்பட மேலும் பல தலைவர்கள் புத்துயிர் கொடுத்தனர்.

மலையக மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்த பெருமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையே சாரும்.

Share:

Author: theneeweb