வெலிக்கடைப் படுகொலையும் தமிழர்களின் விடுதலையும்

வெலிக்கடைச் சிறைப் படுகொலையும் அதன் போது 53 தமிழ் விசாரணைக் கைதிகள் கொல்லப்பட்டதுமான சம்பவம் இடம்பெற்று இன்று 36 ஆண்டுகள் ஆகின்றன. வருடந்தோறும் தமிழர்கள் நினைவு கூரும் ‘கறுப்பு யூலை’நேரங்களில்(கொண்டாட்டங்களில்) ஒரு சிலரின் பெயர்கள் மட்டும் சுவரொட்டிகளில், கட்டுரைகளில் அல்லது மேடை உரைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஏனைய கைதிகளின் பெயர்களோ அவர்களது விபரங்களோ எதுவுமே இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. கொல்லப்பட்ட அனைவருமே ‘தமிழர்களுக்காக அவர்களது விடுதலைக்காக’ என்ற ஒரு அடிப்படைச் சிந்தனை காரணமாக, அவர்களது வழியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கைதானவர்களே. எனினும் இந்நாள் வரை அவர்களின் பெயர்களைத் தவிர வேறு எந்தவிதத் தகவல்களும் அவர்களைப் பற்றி எமக்குத் தெரியாது. நாமும் அதனைத் தேடவில்லை. தேடவேண்டும் என்ற சிந்தனையும் ஏற்படவில்லை.
ஆனால் அந்த “வெலிக்கடைப் படுகொலையில் கொல்லப்பட்ட” இளைஞர்களை மூலதனமாகப் போட்டுத்தான் எமது ஆயுதப் போராட்டம் வளர்ந்ததும், தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டதும் யதார்த்தமான உண்மையாகும். இருந்தும் நாம் ‘எங்களுக்காக இராணுவ முகாம்களிலும் விசாரணை நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும் விபரிக்க முடியாத சித்திரைவதைகளை, தாங்கமுடியாத துயரங்களை அனுபவித்துப் பின்னர் தங்கள் உயிர்களையும் தியாகம் செய்த அந்த தியாகிகளை’ கணக்கில் கொள்ளவில்லை. வீர சாகசங்களுக்கும், வெற்றி(வெற்று) விளம்பரங்களுக்கும் கொடுத்த முக்கியத்தவத்தை, பிரதியுபகாரம் எதனையுமே கருதாது தமது சுயவாழ்வை மறந்து மற்றவர்கள் சுதந்திரமாக வாழவேண்டி தங்கள் உயிரைப் பலி கொடுத்த போராளிகளுக்கு வழங்கத் தவறிவிட்டோம். அதனால் தான் என்னவோ இன்று நாம் ‘உள்ளதையும் இழந்தான் கொள்ளிக் கண்ணன்’ என்ற நிலையில் வந்து நிற்கிறோம். இதனைத் தான் அன்றே வள்ளுவன்,
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு” என எழுதி வைத்து விட்டான் போலும்.
2015ம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் சிங்கள, ஆங்கில நாளிதழ்களில் அடிக்கடி “வெலிக்கடைச் சிறைப் படுகொலை” என்ற தலைப்பிட்டு செய்தி ஒன்று வந்த வண்ணம் உள்ளது. அது   தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடைச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 27 கைதிகள்  9ம் திகதி நவம்பர் 2012ல்,  திட்டமிடப்பட்ட வகையில் ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்று வரும் வழக்கு விசாரணை பற்றிய செய்தியாகும். அந்த வழக்கைத் தாக்கல் செய்தவர் அந்தப் படுகொலையை நேரில் பார்த்த, ‘பயங்கரவாத தடைச் சட்டத்தின்’ கீழ் கைதாகிச் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு விசாரணைக் கைதியாகும். அரசாங்கத்தினால் அவருக்கு எதிரான வழக்கைத் தொடர முடியாத காரணத்தினால் 2015ல் விடுதலையாகி பின்னர் கொல்லப்பட்டவர்களுக்காக நியாயம் வேண்டி அந்த வழக்கை கொலை அச்சுறுத்தல், கொலை முயற்சிகள் மத்தியிலும் அவர் அந்த வழக்கைத் தொடர்கிறார்.
ஆனால் 2009ல் வன்னிப் பேரழிவின் பின்னர் ‘போர்க் குற்றம்’ தொடர்பாக கடந்த பத்து வருடங்களாக பல கோடி ரூபாய்கள் செலவில் கொடி பிடிப்பவர்கள் எவரும் இதுவரை தமிழர்களின் அரசியல் வானத்தில் என்றென்றும் “தாரகைகளாக மின்னும் அந்த 53 போராளிகள்” தொடர்பாக மறந்தும் ஒரு வார்த்தை குறிப்பிட்டது கிடையாது. சட்டத்தரணிகளை நாடி நரம்பாகக் கொண்டு இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட அந்த 53 போராளிகளுக்காக நியாயம் கோரத் துணியவில்லை.
ஆகவே ஒட்டு மொத்தத்தில் ‘தமிழர்களின் அரசியல்(விடுதலைப்) போராட்டம்’ என்பது ஒரு சில அரசியல் தரகர்கள் தங்களது பிழைப்புக்காக சுயநலத்திற்காகப் பிறரைப் பலிகொடுக்க வைத்து அரசியல் வியாபாரத்தில் அதனை ஒரு மூலதனமாக்கி தங்களைக் கோடீஸ்வரர்கள் ஆக்கும் ஒரு நடைமுறைத் தந்திரோபாயமே.
இலங்கையில் நீதித்துறை என்பது சுதந்திரமான செயற்பாட்டில் இல்லை என்பது சாதாரணமாக யாவரும் அறிந்த ஒன்று. நீதி சுதந்திரமாக இயங்க முடியாத ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது. ஒரு பொலிஸ்காரன் தான் நினைத்தபடி ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி கைதிற்கான காரணமாக ஒரு சட்டத்தைக் குறிப்பிட்டவுடன் அதனை ஆராய்ந்து பாராமல் அவரை சிறைக்குள் அனுப்பும் நீதிபதிகள் உள்ள நாட்டில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகும்.
ஆனால் இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என கூறியபடி உலக நாடுகள் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த லட்சணத்தில் சர்வதேச சமூகம் எமக்கு நியாயம் பெற்றுத் தரும் என்று பிதற்றுவோரை நாம் எமது பிரதிநிதிகளாக அனுப்பிக் கொண்டிருந்தால் இனப் பிரச்சனை என்பது மதப்பிரச்சனை வடிவமாக மாறும். அது ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் ஆரம்பமாகி விட்டது. அதன் அறிகுறி தான் இன்று இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து நிற்கும் பௌத்த சமய தீவிரவாத சக்திகளுடன் தமிழர்கள் என மார் தட்டுவோர் கை கோர்த்தபடி அணி சேர்ந்துள்ளனர்.
25-27 யூலை1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை இலங்கை அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. ‘போர்க் குற்றம்’ தொடர்பாக கோடி ரூபாய்கள் செலவழிப்போர் இப் படுகொலை சம்பந்தமாக முதலில் நீதி கோரினால் தான் இலங்கைத் தமிழர்கள் போராட்டம் ஒரு நியாயமான, அர்த்தம் உள்ள, நீதிக்கான விடுதலைப் போராட்டம் என்பதை வரலாற்று பதிவு செய்யும்.
“குடாநாடான்”
Share:

Author: theneeweb