சிறைக்குள் நான் – • பிறவ்ஸ்

 
{ ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சந்தேகத்தில் கைதாகி கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவரின் சிறை அனுபவங்கள் }

• பிறவ்ஸ்

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பலர் அற்ப காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டனர். முஸ்லிம் பெயர்தாங்கிய சிறிய கும்பலொன்று செய்த ஈனச் செயலுக்காக அப்பாவிகள் பலர் சிறைகளில் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டவர்களில், தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒருவர் சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து விபரிக்கிறார்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் என்னை கைதுசெய்தனர். பொருளொன்றை வைத்திருந்ததாகக்கூறி என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கேகாலை சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக தடுத்துவைத்தனர். கைதிகள் தடுத்துவைக்கப்படும் சிறைக்கு அப்பால், விசாரணைக் கைதிகள் அனைவரும் முதல்நாள் இரவு ஒன்றாக தங்கவைக்கப்பட்டோம்.

அந்த இடத்துக்கு குண்டர்கள் மூவர் வந்தனர். வெள்ளை நிற ஆடையணிந்த அவர்களின் உடம்பில் பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமானவர்களாகத் தோற்றமளித்தனர். கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களின் சந்தேநபர்களான அவர்கள், பிணைகோரி மேன்முறையீடு செய்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. சிறைக்குள் தங்களை டான்களாக காண்பித்த அவர்கள், எங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிக்க ஆரம்பித்தனர்.

விசாரிக்கப்படுபவர்கள் முஸ்லிமாக இருந்தால், நீ ஐ.எஸ். பயங்கரவாதியா? அடுத்து எங்கு தாக்குதல் நடத்தப் போகிறாய்? என்று அதட்டிக் கேட்டனர். பயத்தில் ஒழுங்காக பதிலளிக்காதவர்களின் கன்னத்தில் அறைந்தனர். தூஷண வார்த்தைகளிலால் திட்டினார்கள். நீங்கள் வெளியில் போனால் என்ன நடக்குமென்று தெரியுமா என்று மிரட்டினார்கள். அங்கிருந்தவர்களை கிட்டத்தட்ட அடிமைகளாக நடாத்தினார்கள்.

இந்த சிறைக்கூடத்துக்குள் எங்களுடன் இருந்தால், உங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். அதைவிடுத்து அடுத்த சிறைக்கூடத்துக்குச் சென்றால், நிறைய சித்திரவதைகளை அனுபவிப்பீர்கள் என்று பயம்காட்டினார்கள். நீங்கள் எங்களுடன் இருக்க விரும்பினால், அதற்கு ஒருதொகைப் பணம் செலுத்தவேண்டும். சிறை அதிகாரிக்கு அந்தப் பணத்தை கொடுத்தால்தான், நீங்கள் இந்த சிறைக்கூடத்தில் இருக்கமுடியும் என்று கூறினார்கள்.

அவர்களது பேச்சைக் கேளாமல், அடுத்த சிறைக்கூடத்துக்குச் சென்ற விசாரணைக் கைதிகள் சிலர் திட்டமிட்டு தாக்கப்பட்டனர். இதனால், அவர்களுடன் இந்த சிறைக்கூடத்துக்குள்ளேயே இருப்பதற்கு நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டோம். விபத்து உள்ளிட்ட சாதாரண குற்றங்களில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் சுமார் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபா என பணம் அறவிடப்பட்டது. ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்களிடம் இலட்சக் கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது.

இந்தப் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர்களிடம் தொடர்பாடல் முறையொன்று காணப்பட்டது. அவர்கள் தம்வசம் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்தனர். சிறையில் இருக்கும் ஒருவரை அவர்களது சிறைக்கூடத்தில் வைத்திருப்பதற்கு ஒரு இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டால், தொலைபேசி மூலம் தடுப்பிலுள்ளவரின் உறவினருக்கு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். அவர் தனது உறவினரிடம் நிலைமைகளை எடுத்துக்கூறி, பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறுவார்கள்.

பின்னர், வெளியிலுள்ள தனது அடியாட்களிடம் விபரத்தைக் கூறுவார்கள். பணம் கொடுப்பவர் மற்றும் பணம் பெறுபவரின் அடையாளங்கள் தொலைபேசி ஊடாக பரிமாறப்படும். பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால், அந்த விசாரணைக் கைதியிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். மச்சான்… மச்சான்… என்று அவர்களுடன் இரக்கம் காட்டுவார்கள். ஆனால், பணம் இல்லாதவர்கள் அவர்களிடம் அடிவாங்கிக்கொண்டே இருந்தார்கள்.

பொலிஸ் மேலதிகாரிக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது சிறைக்குள் இருந்தால், அவர்கள் குண்டர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு கெளரவமாக நடத்தப்படுவார்கள். இவர்களது செயற்பாடுகளை சிறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல நடந்துகொண்டனர். குறித்த குண்டர்களுக்கும் பொலிஸ் மேலதிகாரிக்கும் தொடர்பிருப்பது நிறையப் பேருக்கு தெரியும். ஆனால், அதனை யாரும் வெளியில் சொல்லவில்லை.

அதிக தொகைப் பணம் கொடுத்தவர்களுக்கு அறையின் ஓரத்தில் தூங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். ஏனையவர்கள் விறகுக் கட்டுகள்போல அடுக்கடுக்காக தூங்குவார்கள். நாங்கள் பெட்சீட்டை சுற்றி, தலையில் வைத்துக்கெண்டு தூங்கினோம். தூங்கிய பின்னர் கழிவறைக்குச் செல்வதென்றால், ஆட்களுக்கு மேலால்தான் கடந்து செல்லவேண்டும். மிகவும் நெருக்கடிக்கு மத்தியில்தான் எங்களது இரவுகளை கழித்துக் கொண்டிருந்தோம்.

விசாரணைக் கைதிகளால் சிறை நிரம்பிவழிந்தபோது, இரவுநேரங்களில் யாராது புதிய கைதிகள் வந்தால் அவர்கள் கழிவறைக்குள் தங்கவைக்கப்படுவார்கள். அன்றைய இரவு முழுவதையும் கழிவறைக்குள் நின்றுகொண்டே கழிப்பார்கள். தரையில் இருக்கவும் முடியாமல், தொடர்ந்து நிற்கவும் முடியாமல் எப்போது விடியும் என்று காத்திருப்பார்கள்.

நாங்கள் எங்களது உறவினர்களுடன் பேசவிரும்பினால், தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி தருவார்கள். இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த அழைப்புகளின் மூலம், ஓரிரு நிமிடங்கள் மாத்திரமே பேசமுடியும். ஆனால், அதற்குப் பகரமாக 500 ரூபா, 1000 ரூபா என ரீலோட் செய்யவேண்டும். வெளியிலுள்ள உறவினர்கள் நிர்ணயிக்கப்படும் குறித்த தொகையை ரீலோட் செய்வார்கள்.

இதுதவிர, இன்னும் சில வசதிகள் சிறைக்குள் கிடைக்கும். நமக்குத் தேவையான சவர்க்காரம், சவரக்கத்தி மற்றும் உணவுப் பொருட்களை வாங்கலாம். அத்துடன் அங்கு போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வியாபாரம் பண்டமாற்று பொருளாதார முறையிலேயே நடக்கின்றன. குறிப்பாக புகையிலைதான் இங்கு பணமாக பாவிக்கப்படுகிறது. நம்மிடம் புகையிலை இருந்தால், அதைக் கொடுத்துவிட்டு விரும்பியதை சிறைக்குள் இருந்தவாறே வாங்கலாம்.

போதைக்கு அடிமையானவர்கள் பலர் புகையிலையை உட்கொள்வதால் சிறைக்குள் அதற்கு கிராக்கி காணப்பட்டது. ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால், அதற்கு பகரமாக ஒரு துண்டு புகையிலையை கொடுக்கவேண்டும். சிறைக்குள் ஒரு துண்டு புகையிலை வாங்கவேண்டும் என்றால், அவர்களின் தொலைபேசி இலக்கத்துக்கு பணப்பரிமாற்றல் சேவை (eZ Cash) மூலம் 1500 ரூபா அனுப்பவேண்டும். பணம் கிடைத்தவுடன், ஒரு துண்டு புகையிலை தருவார்கள். அதைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருட்களை வாங்கமுடியும்.

நோன்பு காலம் என்பதால் சிறைக்குள் எங்களது நாட்களை கழிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. எங்கே, ரமழானின் அருளைப் பெறமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் எங்களிடம் லேலோங்கிக் காணப்பட்டது. எத்தனை சோதனைகள் வந்தாலும், எங்களது ஈமானை கைவிடாமல் புனித நோன்புகளை நோற்று கடமைகளை நிறைவேற்றினோம்.

நாங்கள் விசாரணைக் கைதிகள் என்பதால், காலையிலும் மாலையிலும் எங்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டன. மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்கான (இப்தார்) உணவுகளுடன் நோன்பு நோற்பதற்கான (சஹர்) உணவுகளும் உறவினர்களால் கொண்டுவரப்படும். நேரம்சென்று சாப்பிடுவதால் அதிகமாக பொறித்த உணவு வகைகளே கொண்டுவரப்பட்டன. அந்த உணவுகளை நாங்கள் எங்களுக்குள் பகிர்ந்துகொண்டோம்.

ஒரு தடவையில் மூன்று பேர் மாத்திரமே எங்களை பார்வையிட முடியும். ஒரு நாளில் வருகைதந்த ஒருவர் அதேநாளில் மீண்டும் வரமுடியாது. இவ்வாறு பல கட்டுப்பாடுகள் காணப்பட்டதால் யார் எந்த நேரத்தில் வரவேண்டும், யார் என்ன சாப்பாடு கொண்டுவர வேண்டும் என்பதை நாங்கள் எங்களுக்குள் திட்டமிட்டுக் கொண்டோம். இதன்மூலம், நோன்பு காலத்தில் எங்களுக்குத் தேவைப்படும் உணவுகளை சிரமமின்றி பெற்றுக்கொண்டோம்.

நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு வழமைக்கு மாறாக விசேட நேரங்களி சிறைக்குள் உணவுகள் வழங்கப்பட்டன. அதிகாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் சிறை அதிகாரிகளினால் இந்த உணவுகள் வழங்கப்பட்டன. எனினும், உறவினர்கள் கொண்டுவரும் உணவுகளை வைத்தே நாங்கள் நோன்புகளை நோற்றோம். கேகாலை ஜும்ஆ பள்ளிவாசல் மூலம் தினமும் எங்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

குண்டுவெடிப்பு நடந்து முதல் இரு வாரங்களுக்கு ஜும்ஆ தொழுகை நடாத்துவதற்கு இமாம் வரவில்லை. அதன்பின்னர் கேகாலை ஜும்ஆ பள்ளிவாசலிருந்து இமாம் ஒருவர் வந்து, சிறைச்சாலைக்குள் ஜும்ஆ தொழுகையை நடாத்தினார். அதேபோன்று நோன்பு பெருநாள் தொழுகையும் அங்கு நடாத்தப்பட்டது. உறவினர்கள் கொண்டுவந்த புத்தாடைகளை அணிந்திருந்தாலும் உண்மையில் அது எங்களுக்கு பெருநாளாகத் தெரியவில்லை.

சிறைக்குள் இருக்கும்போது எதைக் கொண்டுவந்து கொடுத்தாலும் குடும்பத்துடன் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கம்தான் என்னை வாட்டியது. எவனோ செய்த குற்றத்துக்காக, எதுவுமே செய்யாத நாங்கள் ஏன் சிறைகளில் வாடவேண்டும். செய்யாத குற்றத்துக்காக தண்டனை அனுபவிப்பது என்பது கொடுமையிலும் மிகக் கொடுமை.

பிந்திக் கிடைத்த தகவலின்படி, சிறைச்சாலைக்குள் இவ்வளவு அட்டூழியங்களும் நடப்பதற்கு காரணமாகவிருந்த பொலிஸ் மேலதிகாரி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள பொலிஸ் மேலதிகாரி முறைகேடுகள் அனைத்தையும் சீர்செய்துள்ளதாகவும், தற்போது சிறைச்சாலைக்குள் சுமூகமான நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

(நன்றி: விடிவெள்ளி 26.07.2019)

Share:

Author: theneeweb