கவிஞர் புதுக்காசி”

–          கருணாகரன்——-

வெள்ளத்தில் மூழ்கி முக்குளித்துக்கொண்டிருந்த கிளிநொச்சியில், இனி  என்ன நடக்கப்போகுதோ என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, “என்னண்ணை யோசிக்கிறீங்கள்? என்னை ஆரெண்டு தெரியுதா? எப்பிடி இருக்கிறியள்?” என்று கேட்டுக்கொண்டு வந்தான் அவன்.

யாராயிருக்கும்? வெள்ளத்தில் மூழ்குவோரை மீட்கும் அணியைச் சேர்ந்த ஆளா?

சட்டென்று அவனை அடையாளம் காண முடியவில்லை.

ஆனால் பழகிய முகம்.

கேட்ட குரல்.

தெரிந்த சிரிப்பு.

என்றாலும் கலங்கிக் கொண்டேயிருந்தது நினைவுப்படம்.

நான் நினைவுகளைத் தெளிவாக்குவதற்கிடையில் சிரித்துக் கொண்டே கைகளைப் பிடித்தான்.

அந்தக் கைப்பிடியில், அந்த  நெருக்கத்தில் சட்டென ஒளிகொண்டு வெளித்தது ஞாபகச் சிற்பம்.

“அடேய் புதுக்காசி!” என்று என்னை அறியாமலே கூவினேன்.

சற்றுப் பெருத்திருக்கிறானா வாடியிருக்கிறானா என்று தெரியவில்லை. உடலிலும் முகத்திலும் வயதுக்கு மீறிய முதுமை ஏறியிருந்தது. கண்களில் முந்திய ஒளியில்லை. ஆனாலும் வழமையைப்போலக் கள்ளமில்லாத அப்பாவித்தனத்தோடு எதையோ கேட்பதைப்போலத் தவித்துக்கொண்டிருந்தன அவை.

யுத்தத்துக்குப் பிறகு ஏக்குறையப் பத்து வருசமாக அவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடம் கேட்டாலும் அவனைப் பற்றிய தகவலைத் தெரியாதென்றே கையை விரித்தார்கள்.

அவர்களிலும் தவறில்லை. சண்டை முடிந்து தடுப்பிலிருந்து வந்தவர்களுக்கு அடுத்தது என்ன? இனி என்ன செய்வது? என்று தங்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய தெளிவே இல்லாமலிருக்கும்போது மற்றவர்களைப் பற்றி எப்படிச் சிந்திப்பார்கள்?

இதைவிட முன்னரைப்போல யாரிடமும் யாரைப்பற்றியும் கேட்க முடியாது. பழகவும் முடியாது. அப்படி யாரைப்பற்றியாவது கேட்கும்போது நமது கெட்ட காலத்துக்குச் சம்மந்தப்பட்டவர் ஏதாவது காரணங்களால் படையினரால் கைது செய்யப்பட்டாலோ விசாரணை செய்யப்பட்டாலோ அது வேறு பிரச்சினையாகி விடும்.

எதற்காக வீண்சோலி என்று நான்கூடப் புதுக்காசியைப் பற்றி எல்லோரிடத்திலும் கேட்டதில்லை.

இப்படித் தேடவும் முடியாமல் தேடாமல் விடவும் முடியாமலிருக்கும் போது திடீரென்று மாயாவியைப்போல வெள்ளத்துக்குள் வந்து சிரித்துக்கொண்டு அதிசயப்பிறவியாக நின்றால் திகைப்பும் சந்தோசமும் வராமல் வேறு என்னதான் வரும்?

போராட்டத்தில் – போரில் தப்பிப்பிழைத்திருக்கிறான் புதுக்காசி.

இறுதிப்போரில் புலிகளின் புகழ்பெற்ற தளபதிகளெல்லாம் சத்தம் சலாரில்லாமல் செத்து மடிந்து கொண்டிருந்தார்கள். அந்த நிலையில்  புதுக்காசியினால் என்னதான் செய்திருக்க முடியும்?

ஏதோ ஒரு பலமான விதிரேகை அவனைக் காப்பாற்றி விட்டது. அல்லது நல்லதொரு அதிர்ஸ்ட தேவதை அவனைக் காப்பாற்றியிருக்கிறாள். அவனை மட்டுமல்ல, அவனைப்போலப் பலர் அப்படி அதிசயம், ஆச்சரியமாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் விதியோ அல்லது போர்க்கள யதார்த்தமோ என்னவோ தெரியாது பானு, ஜெயம், பொட்டம்மான், கடாபி, விதுஸா, துர்க்கா, மணிவண்ணன், சூசை எனப் பெரும்பெரும் தளபதிகளெல்லாம் தப்ப முடியாமல் சாவைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது. ஆனால், சாதாரண போராளிகள் தப்பியிருக்கிறார்கள்.

அப்படித் தப்பிய புதுக்காசி 2009 மேயில் யுத்தம் முடிந்த கையோடு படையினரிடம் கைதாகி இரண்டு ஆண்டுகள் புனர்வாழ்வு(?) முகாமிலிருந்திருக்கிறான். தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, வெளியே வெளிக்கிடாமல் இருந்ததாகச் சொன்னான்.

இப்பிடியிருந்தவனை யாரால்தான் கண்டிருக்க முடியும்?

இதை விட அவனைத் தேடுவதற்கும் வலுவான உறவென்று யாரும் இருக்கவில்லை. அம்மாவும் தம்பியும் மட்டுமே உறவு. தம்பி திருமணம் முடித்து வேறாக இருக்கிறான். வயதான அம்மாதான் புதுக்காசியுடன்.

தடுப்பிலிருந்து வந்த பிறகு என்ன செய்வது? என்று யோசித்திருக்கிறான் புதுக்காசி. IOM என்ற தொண்டு அமைப்புக்  கொடுத்த சிறிய உதவியை வைத்துக்கொண்டு அம்மாவுக்கும் தனக்குமான செலவுக்கென கோழி வளர்ப்பு என்று ஒரு சிறிய தொழில் செய்தான்.

இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த வெள்ளம் அதை அடித்துக்கொண்டு போனது.

அதற்குப் பிறகு கையில் காசில்லை. செய்வதற்குத் தொழிலில்லை. சில நாட்கள் மேசன் வேலைக்கு உதவியாளாகப் போயிருக்கிறான். சண்டைக்களத்தில் காயப்பட்ட காலும் கையும் அதுக்குத் தோதுப்படவில்லை. சில நாட்கள் கடையொன்றில் உதவியாளராக வேலை பார்த்தான். ஒருநாள்  ரீ.ஐ.டியினர் வந்து கடையில் வைத்தே அவனை விசாரித்ததோடு அந்த வேலையும் போனது.

கடையில் இதெல்லாம் தேவையில்லாத பிரச்சினைகளைத்தான் கொண்டு  வரும் என்று ஐநூறு ரூபாய் காசைக் கூடக் கொடுத்து ஆளைக் காலி செய்தார் முதலாளி. இதற்கு மேல் அவர்தான் என்ன செய்வார் பாவம்.

போராளிகளாக இருந்தவர்கள் இலகு வட்டியில் கடன் பெறலாம் என்று சொன்னார்கள். ஆனால் அதற்கான விதிமுறைகள், உறுதிப்படுத்தல் கடிதங்கள், நிபந்தனைகள் என்று ஏராளம் படிகளில் ஏற வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் அவற்றில் ஏறிப்பார்த்தான். அவர்கள் கொடுத்த சிறு கடனில் மீளவும் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்பது இலங்கை அரசிடம் சமஸ்டியைப் பெறுவதற்குச் சமனாக இருந்தது.

வேறு என்ன செய்யலாம் என்றால், பதினேழு வயதில் பள்ளிக்கூடத்திலிருந்தே இயக்கத்தில் சேர்ந்தவனுக்கு துப்பாக்கியைச் சிறப்பாக இயக்கத் தெரியும். குறிபார்த்தால் அச்சுப் பிசகாமல் (அருச்சுனனைப்போல இலக்குத் தவறாமல்) சுடத்தெரியும். படையை வேவு பார்க்க முடியும். இயக்கம் சொல்கிறபடி போராட்டத்துக்கான அரசியல் பணிகளைச் செய்யத் தெரியும். அந்த நாட்களில் பல சண்டைக்களங்களில் வீரத்தையும் வித்தைகளையும் காட்டித் தளபதிகளாலும் தலைவராலும் பாராட்டப்பட்ட பேர்வழி. ஒரு சண்டையில் ஒரு கால்கூட பலமாக உடைந்திருந்தது. அதனால் இப்போதும்கூட மெல்லிய கெந்தலாகத்தான் நடக்கிறான்.

இப்படிச் சிறப்புத் தகுதியெல்லாம் இருந்தாலும் இதையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் இன்று மதிப்பென்ன? இவற்றையெல்லாம் இப்பொழுது செய்ய முடியுமா?

இதனால் தனக்கு வெளியே வெளிக்கிட்டுத்திரிவதற்கே மனசு வரவில்லை என்றான் புதுக்காசி.

ஒருகட்டத்தில் பேசாமல் எங்காவது தூரந்தொலைவுக்கு நாட்டை விட்டே போய் விடுவோமா என்று கூட யோசித்திருக்கிறான். ஆனால் அதற்கும் காசு வேணுமே! யாரிடமாவது கடன்பட்டு அரபு நாடுகளுக்கு (மத்திய கிழக்கிற்கு) போய்விடலாம் என்று முடிவெடுத்தால் அதற்கும் தொழில் அனுபவம், தொழில் தகமை என்று கேட்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் தவறில்லை. காசு கொடுப்பவர்கள் அல்லவா, அதற்கான பயனை எதிர்பார்க்கத்தான் செய்வார்கள்.

புதுக்காசியிடமுள்ள தொழில்தகமை என்ன?

துப்பாக்கியால் பிசகாமல் குறிபார்த்துச் சுடத்தெரியும். எந்தப் படைமுகாமிற்குள்ளும் புகுந்து வேவு பார்க்க முடியும்… களைப்போ சோர்வோ இல்லாமல் இரவு பகலாக இயக்க வேலைகளைச் செய்யத் தெரியும்…

இதெல்லாம் இப்பொழுது யாருக்குத்தான் வேணும்? இது அங்கே எதற்கு?

இவற்றை விட இன்னொரு தகுதியும் அவனுக்கிருந்தது. அதுதான் இயக்கத்துக்காக – போராட்டத்துக்காகப் பாடல்களை எழுதுவது, கவிதைகளை யாப்பது.

இது கூட அங்கே உதவாது. அங்கு மட்டுமல்ல இங்கும், இந்தப் போராட்டம் நடந்த மண்ணிலும் உதவாது.

புதுக்காசி எனக்கு அறிமுகமானதே அவனுடைய கவிதைகளின் வழியாகத்தான்.

அப்பொழுது நான் இலக்கிய இதழொன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். தினமும் அல்லது வாரத்துக்கு ஐந்தோ ஆறு கவிதைகள் தபாலில் எனக்கு வரும். சிலவேளை ஒரு பயிற்சிப் புத்தகத்தில் ஐம்பதோ அறுபதோ கவிதைகள் என்று எழுதி யாராவது போராளிகளிடம் கொடுத்து அனுப்பியிருப்பான். எழுதியவரை எனக்கு அறிமுகமில்லை. பெயர் மட்டும் “புதுக்காசி” என்றிருந்தது. புதுமைப்பித்தன், புதுமைலோலன், புதுயுகன் போல இதுவும் ஒரு புதுமை விரும்பியின் பெயராக்கும் என்று விட்டுவிட்டேன்.

இலக்கியப் பத்திரிகைகளில் வேலை செய்கின்றவர்களுக்குக் கிடைக்கின்ற கொடை இது.

“என்ன விளையாட்டா காட்டுகிறாய்?” என்ற மாதிரி ஒருநாள் ஆளே நேரில் வந்து முன்னே நின்றான்.

அன்றைக்கும் இதே கேள்விகள்தான். “எப்பிடி இருக்கிறியள் அண்ணை? என்ன யோசிக்கிறீங்கள்? என்னை ஆரெண்டு தெரியுதா?”

வந்திருக்கிறது சோதனை என்று புரிந்தது.

பேசிக்கொண்டிருக்கும்போது அவனுடைய பெயர் என்ன என்று கேட்டேன்.

போராளிகளுக்கு இயக்கப் பெயர் என்று ஒரு பெயர் இருப்பதுண்டு. அதை விட பெற்றோர் சூட்டிய பெயர், செல்லப்பெயர் என்று வேறு பெயர்களும் இருக்கும். இந்த மாதிரிக் கவிதை, கலை என்று வந்து விட்டால் தாங்களாகவே தங்களுக்கு வைத்துக்கொள்ளும் பெயரும் தனியாக வந்து சேரும்.

இதில் “புதுக்காசி” எந்த வகையானது என்று தெரியவில்லை.

“அது எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயரண்ணை. புதுவை அண்ணையையும் காசி அண்ணையையும் எனக்குப் பிடிக்கும். ரண்டு பேருந்தான் என்ரை ஆதர்சக் கவிஞர்கள். அதால, புதுவை இரத்தினதுரையிடமிருந்து “புது”  எண்டதை எடுத்தன். காசி ஆனந்தனிடமிருந்து “காசி” யை எடுத்தன். ரண்டையும் சேர்த்துப் “புதுக்காசி” எண்டு ஆக்கினேன்” என்றான்.

நான் புருவங்களை உயர்த்தினேன்.

போர்க்களத்தில் மட்டுமல்ல, புலி, கவிதைக்களத்திலும் கலக்கத்தான் போகிறது போல என்று தோன்றியது.

பிறகு சண்டைக்களங்களில் ஓய்வு கிடைக்கும்போது அல்லது களத்திலிருந்து பின்தளத்திற்கு வரும்போது இன்னும் ஒரு தொகுதிக் கவிதைகளோடு என்னிடம் வருவான். பாடல்கள் வேறாக இரண்டு மூன்று புத்தகங்களில் இருக்கும். அவ்வளவு கவிதைகளையும் தனிப்புத்தகங்களாகத்தான் போட முடியும்.

“அடேயப்பா, எதிரியோட நீ பாட்டாலும் கவிதையாலும்தான் சண்டை பிடிக்கிறாயா?” என்று ஒருநாள் கேட்டேன். “இதே கேள்வியை ஏற்கனவே தன்னோடு கூட நிற்கும் போராளிகள் கேட்டுவிட்டார்கள்” என்றான்.

புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரிடமிருந்து பெயரைக் கடன் வாங்கியிருந்தாலும் அவர்களிடமிருந்து புதுக்காசியினால் கவிதைகளை வாங்க முடியவில்லை. அவனாலும் கவிதைகளை உருவாக்க முடியவில்லை. ஆனால், கள்ளமற்ற வெள்ளை உள்ளத்தை மட்டும் வைத்திருந்தான்.

அதை வைத்துக் கொண்டு இப்பொழுது என்னதான் செய்ய முடியும்?

அவன் கவிதை எழுதினால்கூட அதை வெளியிடுவதற்கு என்னாலும் முடியாது. என்னிடம் இலக்கிய இதழும் இல்லை.

எல்லோரையும் எல்லாவற்றையும் மூடி நிற்கிறது வெள்ளம். இந்த வெள்ளம் இலகுவில் வடிந்து விடக்கூடிய வெள்ளமல்ல.

புதுக்காசியின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது….. “…………………………”

Share:

Author: theneeweb