வன்முறையைத் தூண்டும் காட்சிகள் வேண்டாம்: இயக்குநர் பாரதிராஜா

பார்வையாளர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் அளவுக்கு சினிமாக்களில் காட்சிகள் கூடாது என இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுறுத்தியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “கென்னடி கிளப்’. கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இசை  வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெற்றது.  இயக்குநர்கள் அகத்தியன், எஸ்.டி. சபா, எழில், லெனின்பாரதி, ராம்பிரகாஷ், தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:

நல்ல கலைஞர்களை, வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி நான் ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான்  ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு ஏற்கெனவே இயக்குநர்  சுசீந்திரன் இயக்கிய ஒரு படத்தில் நடித்தேன். இந்தப் படமும் அது போல் நல்ல அனுபவம். நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.  சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள்.  அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்தப் பெண்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்த ஜென்மத்திலும்….: சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு  அவரது தந்தை நல்லுசாமி கொடுத்து வைத்தவர். இது சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுச்சாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுச்சாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன். அம்பானிபோல் வசதியாக வாழ விருப்பமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன்.

இப்படத்தை தொழில் சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது கலைஞர்களுக்குப் பொறுப்பு வேண்டும். வன்முறை என்பது சமூகத்தையும்,  தனி மனிதனையும் பாதிக்கக்கூடாது. சண்டைக் காட்சிகள் என்பது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும். அதுவும் அளவோடு இருக்க வேண்டும். சண்டைக் காட்சிகள் தனி மனிதனை தூண்டக்  கூடாது. அப்படி செய்தால் அது சமூகத்தை எங்கோ கொண்டு சென்று விடும் என்றார் பாரதிராஜா.

Share:

Author: theneeweb