பிரிட்டன் அமைச்சர் பிரீதி படேலை இனவெறியுடன் விமர்சித்தவருக்கு சிறை

பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருக்கும் இந்திய வம்சாவளியினரான பிரீதி படேலை இனவெறி ரீதியில் விமர்சித்த நபருக்கு 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யும், பிரிட்டன் உள்துறை அமைச்சருமான பிரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ஆம் ஆண்டில் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, ஜெரார்ட் ட்ரெய்னர் (55) என்பவரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து,  நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ஜெரார்ட் ட்ரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெரார்ட் ட்ரெய்னரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த “டெமாகிரடிக் யூனியனிஸ்ட்’ கட்சித் தலைவர் ஆர்லின் ஃபாஸ்டரையும் வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சித்திருந்தது தெரிய வந்தது.

Share:

Author: theneeweb