ஒரே கேள்வி ! ஒரே கேள்வி ! எந்தன் நெஞ்சிலே -சக்தி சக்திதாசன்

கடுகதி வேகத்தில் காற்றைப்போல பறந்து செல்கிறது காலம். இக்காலக்காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அகப்பட்டு அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தகைய ஒரு சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும் வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும், அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை.

இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்ற பொறுப்புக்களில் அந்நதந்தப் பகுதிகளில் அரசியல் நடத்தும் தலைவர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் தம்பக்க பிரச்சாரங்களுக்குள் மக்களை மூழ்கடிக்கும் நோக்கத்தோடு செயலாற்றும் நிலை.

பசி, பஞ்சம், பட்டினி, மரணம் என்பன எப்படி ஜாதி, மத, இன, நிற வேறுபாடு காட்டுவதில்லையோ அதேபோல செல்வம் மகிழ்ச்சி, வாழ்வு, ஆடம்பரம் என்பனவும் இவ்வேறுபாடுகளைக் காட்டுவதில்லை. இருப்பினும் இன்றைய உலகில் இப்படி, பஞ்சம், பட்டினி அகால மரணங்கள், தேவையற்ற யுத்தங்கள் என்பன வசதி குறைந்த, பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த Developing countries அதாவது முன்னேற்றமடைந்து வரும் நாடுகள் என்று அழகாகக் குறிப்பிடப்படும் நாடுகளிலேயே நிகழ்கிறது.

முன்னேற்றமடைந்துவரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு உதவுகிறோம் என்று அதற்கொரு கொள்கையையும், அக்கொள்கையைச் செயற்படுத்துவதற்கென்று அமைச்சர்களையும், வாரியத்தையும் நியமித்து செயற்படுகிறது தம்மை முன்னேற்றமடைந்து விட்ட நாடுகள் கூறும் மேற்குலக வல்லரசு நாடுகள். ஆயினும் இவர்களின் முன்னேற்றமடையாத நாடுகளுக்கான உதவிகளின் அடிப்படையில் தான் இவர்களது பொருளாதர வீரியம் தங்கியுள்ளது என்பது உண்மையே. எந்தநாடும் தமது நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டுதான் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும். அதுவே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும், யதார்த்தமும் கூட. ஆனால் அனைத்துக்கும் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல் லாபங்களின் உண்மை வடிவங்கள் சாதாரண மக்களுக்கு காட்டப்படுவதில்லை.

வசதி குறைந்த நாடுகளுக்கு உதவுவது மனித தர்மமே , ஆனால் உதவி எனும் பெயரில் தமது ஆதிக்கத்தை, தாம் எவ்வழியில் அந்நாடு போகவேண்டும் என்று எண்ணும் வழியில் அந்நாடு நடக்கவேண்டும் என்று எண்ணி அந்நாட்டிற்கு ஏற்புடையதல்லாத வழியில் போகவைக்க எத்தனிப்பது உண்மையான உதவியாகுமா? என்பது இன்றைய உலகின் ஒரு முக்கியமான கேள்வியாகிறது.

இத்தகைய வழியில் ஒரு வல்லமை கூடிய நாடு உதவி எனும் பெயரில் மற்றொரு நாட்டினை மறைமுக ஆதிக்கத்துக்குள்ளாக்குவதற்கு அவ்வல்லமை மிக்க நாடு மட்டும் தான் காரணமா? இல்லை ! அவர்களிடம் உதவியை ஏற்றுக் கொள்ளும் அவ்வசதி குறைந்த நாட்டினை வழி நடத்துகிறோம் என்றுகூறி அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலமைகளின் சுயநலமான மனப்போக்கே காரணமாகிறது. முன்னேற்றமடைந்துவரும் நாடுகளை முன்னேற்றமடையவிடாத நிலையில் வைத்திருப்பதனால் தமக்கு இலாபம் எனும் கணக்கீட்டினால் அரசியல் வியாபாரகி விட்ட ஒரு சூழலே இதற்கு மூலகாரணமாகிறது.

இத்தகைய மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் நடத்துவோரால் தான் இன்று இனவிரோத மனப்பான்மையை நியாயப்படுத்தி அதனை பாப்பியூலசிம் எனும் உணர்ச்சி மிக்க தீவிரவாத அரசியல் நிலைப்பாடாகக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கான ஆதரவு மேற்குலக நாடுகளில் பெருகி வருவதைக் காண்கிறோம். சோசலிஸம், கப்பிட்டிலஸம், கம்யூனிசம் எனும் வகை அரசியல் முறைகளை பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வந்தன. அவற்றி;ல் பல அவ்வகை அரசியலினால் தமது பொருளாதாரவளத்தைப் பெருக்கிக் கொண்டன. சுற்றிவரும் ராட்டினத்தில் மேலிருக்கும் பகுதி கீழே வருவதும், கீழிருக்கும் பகுதி மேலே போவதும் சகஜம். அதேபோல் இப்பொருளாதார மேம்பாடு கண்டவர்களின் வாழ்வாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதும் அதற்குக் காரணமாக இலகுவாக கண்முன்னே தோன்றுவது வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவவர்களே! அதுவும் அவர்கள் வேற்றினத்து, வேறுநிறத்துடையவரானால் அது இன்னமும் வெளிப்படையாகத் தோன்றும். இப்பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாதத் துவேஷங்களை விளக்கமாக்கும் யுக்தியைக் கையாளுவதே பல அரசியல்வாதிகளுக்கு இலகுவான காரியமாகத் தென்பட்டது.

விளைவு !

இன்றைய மேற்குலக நாடுகளில், அதாவது வெள்ளை இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில், வேற்றினத்து குறிப்பாக கறுப்பின மக்களின் மீதான வெறுப்புணர்வின் பலத்தில் தமது அரசியல்கோட்டைகளைக் கட்டிக்கொள்ளப் பலர் முனைவதைக் காண்கிறோம். இதற்கு பற்பல காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நடவடிக்கைகளும் துணை போகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையே ! நாம் புலம்பெயர்ந்து வந்தபோது எம்மை அரவணைத்து, எமக்கான வாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டை வாடகை வீடு போன்றும், எந்தநாட்டில் வாழமுடியாமல் விட்டு ஓடி வந்தோமோ அந்நாட்டினைச் சொந்த வீடு போன்றும் கருதும் மனப்பான்மையினால் கூறப்படும் கருத்துக்கள், செயற்படுத்தும் நடவடிக்கைகள் எமக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது சகஜமே !

புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகளில் , அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு அதன் அங்கங்களாகச் செயற்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை அவர் இனத்தினைச் சேர்ந்தவர்களே எதோ தமது இனத்துக்கு துரோகம் செய்வோர்கள் என்பது போன்ற மனப்பான்மையில் பார்ப்பது கூட சில இடங்களில் நடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இங்கேதான் தாய்நாடு” , “தாய்மொழிஎன்பதன் அர்த்தங்களின் புரிதல்களின் வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் புலனாகின்றன. அந்நியமொழியைக் கற்று அதனில் புலமை பெறுவதென்பது தாய்மொழியினை மறப்பதன்று எனும் உண்மை பலருக்கு கசப்பாக இருக்கிறது என்பது வியப்புக்குரியதொன்றாக இருக்கிறது. அவ்வகையில் தாம் அந்நியமொழியில் பெற்ற புலமையின் பலத்தால் தன்னை ஈன்றெடுத்த தாய் பேசும் மொழியின் சிறப்பான இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து தமது தாய்மொழியின் சிறப்பினை அந்நியமொழி பேசுவோருக்கும் புலப்படுத்துவது கூட ஒரு சிறப்பான தாய்மொழிப் பற்று என்பதனை மறந்து விடுக்கிறோம்.

மதம் என்பது ஒரு மனிதனின் அணிகலனே அன்றி ஆடையாகாது. அம்மதத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட நல்வாழ்வுக்குரிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது தவறாகாது. ஆனால் மதத்தின் மீது கொண்ட பற்று எனும் காரணம் நாம் மனிதனாக வாழ்வில் முன்னேறும் படிகளில் தடைக்கற்களாக்கிக் கொள்வது தவறு. இன்றைய பிரிட்டன் ஒரு பல்லினமக்களைக் கொண்ட ஒரு பலகலாச்சார நாடாகும். மத வேறுபாடுகளைக் கடந்து, நிற வேறுபாடுகளைக் கடந்து மனொதரென்னும் அடிப்படையில் அடுத்தவரின் உரிமைகளை மதிப்பது ஒன்றே இந்நாட்டின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகும்.

இன்றைய பிரிட்டன் அமைச்சரவையில் கிறீஸ்தவர், யூதர், இந்து, இஸ்லாம் என பல்வேறு மதப்பின்னனிகளைக் கொண்டவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முக்கிய அமைச்சர்கள் இருவர் ஆசியப் பின்னனியைக் கொண்டவர்கள். இவர்கள் வெறும் ஆசியர்கள் எனும் காரணத்தினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக இன்றைய பிரதமரையும், அரசினையும் எதிர்க்கும் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல பல ஆசியர்களுமே ஆங்காங்கே முனகுவதைக் காண்கிறேன்.

மக்களே ! உங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டிய முக்கிய கேள்வி இதுதான், இவைகள் எல்லாவற்றையும் கடந்து ஏன் அவர்கள், அவர்களின் திறமையின் அடிப்படியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது? புலம் பெயர்ந்து வந்து இம்மண்ணிலே தமது திறமையை நிலைநாட்டியவர்கள்அவர்கள் என்பதில், நாமும் புலம் பெயர்ந்தவர்கள் எனும் அடிப்படியில் நாம் பெருமை கொள்ளக்கூடாதா? பதவியலமர்த்தப்பட்டு சில தினங்களே ஆகிறது அதுக்குள்ளாகவே நாம் அவர்களின் செயற்பாடுகளின் நீதிபதிகளாவது முறையாகுமா?

ஒரே கேள்வி ! ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே

Share:

Author: theneeweb