கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் சிந்தனையாளர் குழாம் பொலீஸ் அத்தியட்சருக்கிடையே சந்திப்பு

கிளிநொச்சி மாவட்ட சிந்தனையாளர் குழாத்தினர் நேற்று(30) கிளி நாச்சி மாவட்ட பொலீஸ் அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்கவை சந்தித்து மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அன்மையக்காலமமாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாள் வெட்டு, கொள்ளை, கஞ்சா, கசிப்பு, குழுச் சண்டைகள், சட்டவிரோத மணல் அகழ்வு காடுகள் அழிப்பு போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இவ்வாறானச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலீஸ் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றியும் பேசப்பட்டது.

முக்கியமாக பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை பகுதியில் அருட்தந்தை ஒருவரின் மனைவி மற்றும் பெண் கிராம அலுவலர் உட்பட ஐந்து பெண்களிடம் சங்கலி அறுக்கப்பட்ட சம்பவம் பற்றியும் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெறா வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து, மது,புகைத்தல் உள்ளிட்ட அடிப்படை சட்டங்கள் தொடர்பில் வழிப்புணர்வு செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிந்தனையாளர் குழாத்தினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பொலீஸ் அத்தியட்சர் தான் இவ்வருட ஜனவரி முதல் இங்கு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்புடன் வருங்காலத்தில் மேற்படி குற்றச் செயல்களில் ஈடுப்படுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்த அவர் இவ்வாறான கலந்துரையாடலும் பரஸ்பர ஒத்துழைப்பும் பொலீஸ் திணைக்களத்திற்கு அவசியம் எனவும் குறிப்பிட்டார். மேலும் கிளிநொச்சியில் சில பிரதேசங்கள் குற்றச் செயல்கள் அதிகம் உள்ள பிரதேசங்கள் என்றும் அப்பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb