ஜனாதிபதி தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தரப்புக்களையே ஆதாிக்கவேண்டும்

ஜனாதிபதி தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தீா்மானங்களுக்கு எதிராகவும், கடந்தகால தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவும் சகல தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சாா்பில் எமது நிலைப்பாட்டை தீா்மானமாக எடுத்து அதனை சா்வதேச சமூகத்திற்கு வழங்கவேண்டும். அதற்கு இணங்கும் தரப்புக்களையே ஆதாிக்கவேண்டும் என ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சி தலையா் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளாா்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும்போதெல்லாம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித நிபந்தைகளையும் விதிக்காது நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட மைத்திரி-ரணில் கூட்டரசுக்கு எவ்வித நிபந்தைகளையும் விதிக்காது அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் அவர்கள் இனவாதிகள் அல்லர் என கூறினர். நல்லாட்சி அரசு உருவகப்பட்டதும் நாம்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மேடை மேடையாக பிரச்சாரம் செய்தனர்.

ஆனால் இப்போது அதே அரசு எம்மை ஏமாற்றி விட்டது என கூறுகின்றனர். இவர்கள் அரசுக்கு எவ்வித நிபந்தைகளையும் விதிக்காது தங்களின் நலன்களுக்காக அரசினை காப்பற்றி விட்டு இப்போது தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் தங்கள் பல்லவியை மாற்றுகின்றனர். கடந்த கால தவறுகளின் அடிப்படையிலாவது இனிவரும் தேர்தல்களில் தமிழ் தரப்புக்களுக்கு அடிப்படையாக என்னென்ன விடயங்கள் தேவை உடனடியாக என்ன விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஆராய்ந்து வியூகம் வகுக்க வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைக்க சிவில் சமூகம் முன்வரவேண்டும்.

சிவில் சமூகங்களின் முயற்சியில் அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் நலன் தொடர்பில் கூடி ஆராய வேண்டும். அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவையாக உள்ள பொதுவான விடயங்களை ஆராய்ந்து ஓர் பொது தீர்மானத்துக்கு வரவேண்டும். அந்த தீர்மானத்தினை அனைத்து இராஜ தந்திரிகளுக்கும் கொடுத்து அதனை யார் நிறைவேற்றுவதாக உங்கள் ஊடாக ஒப்புதல் தருகின்றனரோ அவர்களுக்கு நாம் ஆதரவினை வழங்க முடியும் என தீர்மானிக்கலாம். எனவே சிவில் சமூக அமைப்புக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb