சுனில் சாந்த விளக்கமறியலில் இருந்து தப்பிச் செல்ல உதவிய சந்தேக நபர் கைது

முன்னணி ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படும் சுனில் சாந்த என்பவர் கொழும்பு விளக்கமறியல் சிறையில் இருந்து தப்பிச் செல்ல உதவிய பிரதான சந்தேகநபர் லுனுகம்வெஹேர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் இன்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் 17 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளை போன்று வேடமிட்ட சிலரால் சுனில் சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கொழும்பு விளக்கமறியல் சிறைதுறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து இரகசியமாக அழைத்துச்செல்லப்பட்டார்.

வழக்கு விசாரணை ஒன்றுக்காக களுத்துறை சிறையில் இருந்து கேகாலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு கொண்டு செல்லும் பொருட்டு, களுத்துறை சிறைச்சாலை பேருந்துக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளை போன்று வேடமிட்டு வந்தவர்களின் உதவியுடன் சுனில் சாந்த தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் அவர் கண்டி – மீமுரே பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், சுனில் சாந்தவுக்கு உதவிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் லுனுகம்வெஹேர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb