மூதூர் படுகொலை – மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டு

13 வருடங்களுக்கு முன்னர் மூதூரில் 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

பெரிஸை தளமாகக் கொண்டுள்ள ‘பட்டினி ஒழிப்பிற்கான அமைப்பை” சேர்ந்த 17 பணியாளர்கள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கொல்லப்பட்டனர்.

அப்போதைய சட்டமா அதிபர் துரித கதியில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் படி உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை என்பன தொடர்பான இயக்குனர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச சார்பற்ற மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையில் மூதூர் கொலையுடன் தொடர்பு கொண்டவர்கள் இனங்காட்டப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை ஸ்தாபித்து இலங்கையில் இடம்பெற்ற 16 பாரிய மனித உரிமை மீறல் தெடர்பான சம்பவங்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

16 மனித உரிமை மீறல்களில் பட்டினி ஒழிப்பிற்கான அமைப்பு படுகொலை மற்றும் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை என்பனவும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb