பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள கட்சிகள் வலுவான அரசியற்கூட்டை உருவாக்க வேண்டும் முருகேசு சந்திரகுமார்

 

“நடைமுறையற்ற அரசியல் கதைகளை நிறுத்த வேண்டும். அரசியலை வியாபாரமாக்கும் நிலை மாற வேண்டும். தங்களை விட, தங்களின் கடந்த காலத்தை விட, தங்களுடைய கட்சியை விட மக்கள் மேலானவர்கள். மக்களுடைய பங்களிப்புகள் உயர்ந்தது. அவர்களுடைய கடந்த காலம் பெறுமதியானது என்ற எண்ணமும் உணர்வும் தமிழ்த்தரப்பிலுள்ள அரசியல்வாதிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் வர வேண்டும்.

வரலாற்றிலிருந்தும் கடந்த காலத்திலிருந்தும் எந்தப் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்தும் கற்பனையில் சிறகடிப்பதை நிறுத்த வேண்டும். யதார்த்த நிலை என்ன என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து அறிய வேண்டும். பிராந்திய சக்திகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படுவதை விடுத்து, அவற்றை அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் கையாள முற்பட வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் நேர்மையாக அணுகி அவற்றைக் களைய வேண்டும். மக்களை வைத்து அரசியல் நடத்துவதை விடுத்து, போராளிகளைப் போன்று மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.” எனப் பல வேண்டுகைகளை முன்னிறுத்தி சமகால அரசியல் நிலவரத்தைப்பற்றியும் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப்பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரான முருகேசு சந்திரகுமார்.

தெற்கின் அரசியற் சூழ்நிலை எவ்வாறுள்ளது?

மிகுந்த குழப்பத்துக்குள்ளிருக்கிறது. அடுத்ததாக என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்தளவுக்கு அரசியற் தடுமாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கிறோம். என்றுமே இல்லாத மிக மோசமான நிலை இது. இலங்கையின் அரசியலை இலங்கையர்கள் தீர்மானிக்கும் காலம் போய் வெளிச்சக்திகள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டதால் வந்த வினை இது.

வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை நிறுத்துவது என்று தெரியாமல் ஐ.தே.கவும் சு.கவும் பொதுஜன பெரமுனவும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பிற கட்சிகளின் நிலையும் இப்படித்தான் உள்ளது. யாரை ஆதரிப்பது, எந்தத் தரப்பை ஏற்றுக்கொள்வது என்று தெரியாத நிலையிலேயே ஏனைய கட்சிகளும் இருக்கின்றன. மக்களுடைய நிலைமையும் இதுதான். எதைப்பற்றியும் தீர்மானிக்க முடியாமல், எதையும் ஊகிக்க முடியாமல் அரசியல் அவதானிகளும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் குழப்ப நிலை எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கிறது.

நாடு தன்னுடைய உறுதித்தன்மையை இழந்ததன்வெளிப்பாடே இதெல்லாம். இதிலிருந்து மீளுவதற்கு நிறைய வேலைகளைச் செய்ய வேணும். நாட்டின் மீதும் மக்களின் மீதும் விசுவாசத்தை வைத்துத் தேச பக்தியுடன் செயற்பட்டால் மட்டுமே இலங்கையை மீட்டெடுக்க முடியும். இல்லையென்றால் நவீன அடிமைப்படுத்தலின் கீழ், புதியதொரு கூட்டுக் காலனித்துவத்தின் கீழ் நாமெல்லாம் இப்படி அடிமைப்பட்டுச் சீரழிய வேண்டியதுதான்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தமிழ்த்தரப்புகள் எவ்வாறு செயற்பட வேண்டுமென கருதுகிறீர்கள்?

முதலில் நடைமுறையற்ற அரசியல் கதைகளை நிறுத்த வேண்டும். அரசியலை வியாபாரமாக்கும் நிலை மாற வேண்டும். தங்களை விட, தங்களின் கடந்த காலத்தை விட, தங்களுடைய கட்சியை விட மக்கள் மேலானவர்கள். மக்களுடைய பங்களிப்புகள் உயர்ந்தது. அவர்களுடைய கடந்த காலம் பெறுமதியானது என்ற எண்ணமும் உணர்வும் தமிழ்த்தரப்பிலுள்ள அரசியல்வாதிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் வர வேண்டும்.

வரலாற்றிலிருந்தும் கடந்த காலத்திலிருந்தும் எந்தப் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்தும் கற்பனையில் சிறகடிப்பதை நிறுத்த வேண்டும். யதார்த்த நிலை என்ன என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து அறிய வேண்டும். பிராந்திய சக்திகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படுவதை விடுத்து, அவற்றை அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் கையாள முற்பட வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் நேர்மையாக அணுகி அவற்றைக் களைய வேண்டும். மக்களை வைத்து அரசியல் நடத்துவதை விடுத்து, போராளிகளைப் போன்று மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். உண்மையாக, விசுவாசமாக மக்களையும் தேசத்தையும் நேசிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால் பல விடயங்களிலும் ஆத்மார்த்தமாக ஈடுபட முடியும். இதுவே மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்குமான அடிப்படைகளாகும். இதை ஒரு நிபந்தனையாகவே முன்வைக்கிறேன்.

ஏனென்றால், எமது மக்கள் செய்த தியாகங்களுக்கும் அவர்கள் சந்தித்த இழப்புகளுக்கும் பட்ட கஸ்ரங்களுக்கும் பயன் கிடைக்க வேண்டும். களத்தில் மரணத்த போராளிகளுடைய எண்ணங்களுக்குப் பெறுமானம் கிட்ட வேண்டும்.

இதற்கு மக்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு மக்களுக்கான அரசியலை மேற்கொண்டால் மட்டுமே தமிழ்ச் சமூகத்தின் அரசியற் தீர்வு சாத்தியமாகும். அப்பொழுதுதான் மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

இவ்வாறான பண்புகள் இல்லாத படியால்தான் இவ்வளவு தொகையான கட்சிகளும் தலைவர்களும் இருந்தும் தமிழ் அரசியல் திக்குத் தெரியாத காட்டில், இருளுக்குள் கிடந்து தடுமாறுகிறது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருக்கிறது. மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்கள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என எல்லாவற்றிலும் மக்கள் கூட்டமைப்புக்கே ஆதரவளித்தனர். ஆனால், இன்று என்ன நடந்திருக்கிறது. எமது மக்களுடைய எந்தப் பிரச்சினையுமே தீர்க்கப்படவில்லை. இப்பொழுது இந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் வந்து அரைகுறை அபிவிருத்தியில் நின்ற கலர் காட்டுகிறது. அரசியலமைப்புத் திருத்தத்தைப்பற்றி உஷாராகக் கதைப்பதாகக் காட்டுகிறது. இந்த மாதிரியான ஏமாற்றுகளை விட்டு உண்மையாக அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும்.

தம்மை விட மக்களை மதித்தால், அவர்களை நேசித்தால் நல்ல சக்திகள்  நேர்மையான புள்ளியில் சந்தித்துப் பணியாற்ற முடியும்.

எதிர்வரவுள்ள தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, நிதானமாக முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் நடந்தது என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியம். தமது தனிப்பட்ட நலன், கட்சி நலன்கள் போன்றவற்றுக்காகத் தவறான முறையில் வழிகாட்டும் அரசியல் தலைமைகளின் சொற்களை நம்பாமல் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.

இந்தப் பணியில் நேர்மையான முறையில் (கட்சி மனோபாவத்துடன் செயற்படாமல்) அரசியல் ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் செயற்படுவது அவசியம். நிலைமைகளைக் கூர்மையாக ஆராய்ந்து சரியான பாதையைக் கண்டறிந்து காண்பிப்பது இவர்களுடைய கடமை. இவர்கள் முயற்சித்தால் தவறான திசையில் பயணிக்கும் அரசியல் தலைமைகளை வழிப்படுத்தலாம். அவற்றின் தவறான முடிவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடையாத வகையில் அரசியல் பெறுமானங்களைப் பெறக் கூடிய – அதற்குப் பொருத்தமான தரப்பை ஆதரிக்க முன்வர வேண்டும். மீண்டும் சொல்கிறேன். அரசியலில் நிரந்தர எதிரியோ நிரந்தர நண்பர்களோ இல்லை. நல் வாய்ப்புகளை எவரின் மூலமாகப் பெற முடியும்? யார் எமது அடிப்படைக் கொள்கைக்கும் மக்கள் நலன்களுக்கும் பொருத்தமானவராக இருக்கிறார் என்று பார்த்துச் சிந்திப்பதே நல்லது.

கடந்த காலத்தைப்போல இனியும் ஏமாற முடியாது.

தேர்தலை உங்களுடைய சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு எவ்வாறு சந்திக்கும்?

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என அடுத்தடுத்து மூன்று தேர்தல்களை நாடு சந்திக்கவுள்ளது. இந்த மூன்று தேர்தல்களையும் எமது கட்சியானது எமது மக்களின் நலன், இலங்கைத்தீவின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு விதமான அடிப்படைகளைக் கொண்டது. ஆகவே அந்தந்தத் தேர்தலுக்கு ஏற்றவாறே நாம் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்களுக்கு யார் முன்னேற்றகரமான உத்தரவாதங்களைப் பகிரங்கமாகவும் துணிச்சலாகவும் முன்வைக்கிறார்களோ அவர்களை நாம் ஆதரிக்கக் கூடியதாக இருக்கும்.

பாராளுமன்றத் தேர்தலில் நாம் எமது அடையாளத்தை முன்னிறுத்தித் தனித்துப் போட்டியிடுவோம். அதேவேளை அந்தச் சந்தர்ப்பத்தில் எமது மக்களுடைய எதிர்கால நலனுக்குப் பொருத்தமான நடைமுறைகளை உருவாக்க முன்வரும் பிற கட்சிகளோடும் பிற அரசியற் தரப்புகளோடும் நாம் கூட்டு வைத்துக் கொள்ள முடியும். மக்களுடைய விருப்பமும் கூட்டு ஒன்றின் அவசியமும் அப்படி இருந்தால் அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் அல்லவா.

ஆனால் நிச்சயமாக நாம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்துவதில் கூடுதலாகக் கவனம் எடுப்போம் என்று உறுதியளிக்க விரும்புகிறேன்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்காத சிறிய கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பிலான உடன்பாடு செய்வது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். அதாவது தமது அரசியற் சிந்தனையினாலும் செயற்பாடுகளினாலும் வலுவடைந்திருக்க வேண்டும். ஏனென்றால், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளில் பலவும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் இன்று அவை மக்களிடத்திலே நம்பிக்கையை இழந்து அதிருப்தியைச் சந்தித்துள்ளன. வெறுப்பையும் சம்பாதித்திருக்கின்றன.

இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள கட்சிகள் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான அரசியலை கூரிய அவதானத்துடன் மேற்கொள்ள முடியும். இதற்கு வலுவான அரசியற் கூட்டினை உருவாக்க வேண்டும். அது சாத்தியமானது என்பதே என்னுடைய நம்பிக்கை. ஒவ்வொரு கட்சிக்குமிடையிலும் அரசியல் ரீதியாகவும் சிந்தனை முறையிலும் நடைமுறைகளிலும் பல விதமான முரண்களும் விலகல்களும் இருந்தாலும் தமக்கு முன்னே உள்ள பிழையான  தலைமைகளைத் தோற்கடிப்பதற்கு இது அவசியம் அல்லவா. அந்தப் பிழையான தரப்புகளின் அரசியற் சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தக் கூட்டுக்கள் தேவையே.

நல்ல தரப்புகள் பிரிந்து பிளவுண்டு சிதறிக் கிடந்தால் அதனால் தீய சக்திகளையும் பெரிய கட்சிகள் என்ற தோற்றப்பாட்டில் மக்களை ஏமாற்றும் தரப்புகளையுமே வாழ வைப்பதாக இருக்கும். ஆகவே மக்களுக்கான அரசியலை மேற்கொள்ள விரும்புவோர் அந்த மக்களை முன்னிறுத்தித் தங்கள் காலடிகளை முன்வைக்க வேண்டும். மனக்கதவுகளைத் திறக்க வேண்டும். புதிய அரசியல் பண்பாட்டுக்கும் புதிய அரசியல் வெற்றிக்கும் ஒன்றிணைய வேண்டும். எதையும் சாதிக்க முடியாது என்றில்லை என்பதை மக்களுக்கும் வரலாற்றுக்கும் நிரூபித்துக் காட்டுவோம்.

எழுந்து வருக. மாற்றமொன்றை நிகழ்த்திக் காட்டுவோம். புதிய வரலாற்றைப் படைப்போம்.

00  (நன்றி – தினக்குரல் 28.07.2019)

Share:

Author: theneeweb