எது தேசியம்? – அறுமுகுட்டிபோடி

(மட்டக்களப்பில்  இருந்து வெளியாகும் வாராந்த பத்திரிகையான ‘அரங்க’த்தில் அறுமக்குட்டி என்பவரால் எழுதப்பட்டு வெளியான காத்திரமான கட்டுரை தேனீ வாசகர்களுக்காக நன்றியுடன் )

‘தமிழீழத்துக்கான போராட்டம்  தேசிய விடுதலை   போராட்டமாகும்’.

‘அதற்காக ஆயுதமேந்தியோர் தேசியத்துக்காக போராடுவோராகும்’

‘எமது  தேசிய தலைவர்  பிரபாகரன் ஆகும்’

‘பிரபாகரனை எதிர்ப்பவர்கள் தமிழ் தேசிய துரோகிகளாகும்’

‘தேசியத்துக்கு எதிராக நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம்’

‘கருணா தேசியத்தை காட்டிக்கொடுத்தார்’

‘அமல் எம்பி தேசியத்துக்கு துரோகம் செய்து விட்டார்’ என்றவாறாக நாம் தினம் தினம் தேசியம் பற்றிய வீர வசனங்களை கடந்த நாற்பதாண்டுகாலமாக கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.


ஆனால் இந்த தேசியம் என்பது என்ன என்று கேட்டால் அதுபற்றிய குறைந்த பட்ச புரிதலாவது  எம்மிடையே இருக்கின்றதா? தேசியம் என்பது பற்றி இரசிய புரட்சியாளன்  லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக்  ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள கடந்த முப்பது வருடகால யுத்த சூழல் அனுமதிக்கவில்லை என்பது ஒரு தத்துவார்த்த  சோகமாகும். 


எவ்வாறாயினும் இவர்கள்   அனைவரது கருத்தையும் கோட்பாடுகளையும்  ஒருமித்து நோக்குமிடத்து ஒரு இனம் பேசுகின்ற மொழியும், பின்பற்றுகின்ற கலாசாரமும், வாழுகின்ற நிலமும், கொண்டிருக்கும் பொருளாதாரமும் இணைகின்ற போது அதுவே ஒரு தேசிய இனத்தின் வரையறைகளாகின்றன. அதாவது இவற்றை பேணி பாதுகாத்து அவற்றினடிப்படையில் தலைநிமிர்ந்து வாழுகின்ற உரிமையையே ‘சுயநிர்ணயம்’  என நாம் பொருள் கொள்ளலாம்.


நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும்  உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே   அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும்   மனதளவிலும் செயலளவிலும் இருக்கின்ற உணர்வே தேசிய உணர்வாகும். ஆனால் நாமோ செல்வநாயகம் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று என்கிறோம், ஆனால் அது செயலளவில் இருக்கவில்லை, தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து யாரும் மேலெள கூடாதென்று கட்சி நடாத்தினோம். இடையிலே இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே விட்டோம்,  2002 ல்  தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ?  என்று கேட்ட கருணாம்மானை மட்டுமன்றி மட்டக்களப்பார் எல்லோரும்  தமிழ் தேசிய துரோகிகளே  என்றோம். 


இப்பொது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளுக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றோம். திருமண விளம்பரங்களில் இன்றுவரை  மணமகனையும் மணமகளையும்  அந்தந்த சாதிக்குள் தேடுகின்றோம். இவையெல்லாம் தேசியமல்ல.தேசிய உணர்வை இப்படி வெளித்தள்ளுகின்ற முறையில்(exclusive nationalism)உருவாக்க முடியாது.  தத்தமது சாதிக்குள்ளேயே மணம் முடிக்கின்ற அகமணமுறையை இன்றுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் சாதிக் சமூகம்   தமிழராய் திரள்வது எப்படி? என்று கேட்பாரில்லை.  

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கின்ற முறைதான் தேசியமாகும் அனைவரையும் உள்ளீர்த்து (inclusive nationalism) எல்லோருக்கும் இடமுண்டு என்கின்ற முறையிலும்  எல்லோருக்குமான தனித்துவங்களுடன் பொதுவான உணர்வினையும்  உருவாக்குகின்ற விதத்திலும் இருந்தால் மட்டுமே தேசியம் சாத்தியமாகும். ஆனால் நாமோ மனோ கணேசன் இலங்கை முழுவதற்கும் அமைச்சராயிருந்த போதிலும் வடக்கு கிழக்கில் இவருக்கென்ன வேலை ‘மலையாகத்தான் எங்களுக்கு பணியாற்றுமளவுக்கு நாம் மானம் கெட்டு விடவில்லை’   என்கிற விதத்தில் நடந்து கொண்டோம். நான் இனிமேல் வடக்கு கிழக்கு விடயங்களில் தலையிடமாட்டேன் என்று அவர் அறிக்கை விடுமளவுக்கு அவரை நச்சரித்தவர்கள் யார்? இதுவல்ல தமிழ் தேசியம். இன்றுவரை மலையக மக்களை முழுத்தமிழர்களாக ஏற்றுக்கொள்ளமுடியாது கொக்கரிக்கின்ற யாழ்பாணத்து சனாதன மனநிலை ஒருபோதும் தமிழ் தேசியத்தின் வெற்றிக்கு வழிகாட்டாது.


இவையொரு புறமிருக்க நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனையை  நாம் ஆட்சியாளர்களை அடையாளமிட்டு சுருக்கி கொண்டோம். சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும்  வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பியுள்ளோம்.   ஆளுவதற்கான  உரிமைக்காகவே  மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட  கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிந்துள்ளது. 


  தமிழர்களே ஆண்டாலும் கூட நமக்கான இயற்கைவளங்களை நமது தேவைகளுக்கு அப்பால் வியாபாரமாக்குவதை ஆதரிப்பது ஒருபோதும் தமிழ் தேசியமாகாது. அது இல்மனைட் தொழிற்சாலையாக இருக்கலாம் கும்புறுமூலை எதனோல் தொழிற்சாலையாக இருக்கலாம். அதேபோல  ஆற்று மண்ணை அகழ்ந்தெடுத்து ஏற்றுமதி செய்கின்ற பேமிட் ஒப்பந்தக்காரர்களாக இருக்கலாம். இவற்றையெல்லாம் ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும்? கண்டும் காணாமல் இருப்பதும் தேசியத்துக்கு எதிரானதே. 


இன்று மட்டக்களப்பில் இருந்து தினம் தினம் கொழும்பு நோக்கி பயணிக்கின்ற பார ஊர்திகளை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள். ஓரிரவு பயணத்தில் கொழும்பு செல்லும்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான மண் லொறிகள் முக்கி முனகிக்கொண்டு  உங்களை தாண்டி சென்றுகொண்டேயிருக்கின்றதே! அவையனைத்தும் ஆற்றுமண்ணால் நிரப்பியிருக்கின்றதே! அவையெல்லாம் எமது ஊத்துச்சேனை போன்ற வடமுனையின் குக்கிராமங்களில் இருந்து அள்ளியெடுக்கப்படும் ஆற்று மண் என்பதை எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்? மாலைதீவுக்கும் சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்வதற்கென்று எமது மண்வளம் திருடப்படுவதற்கு அரசியல்வாதிகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்கின்ற  பேமிட் ஒன்றே போதுமானதாயிருக்கின்றது. இவையனைத்தும் எமது தமிழ் தேசியத்தின்  எதிரிகள்  என்று சொல்லப்படுகின்ற சிங்களவரால் செய்யப்படுவதல்ல. எமது தமிழ் தேசிய எம்பிக்களும்   முன்னாள்  மாகாண சபை உறுப்பினர்களும் வைத்திருக்கின்ற பினாமிகளே  இந்த துரோகங்களை செய்கின்றனர். இதுதானா தமிழ் தேசியம்? இதுதானா  தேசியத்தை காப்பாற்றுகின்ற லட்ஷணம்? 


எனவேதான் அதிகாரம் கைமாறுவதால் மட்டும் தேசியம் வென்றுவிடாது. சுழற்சிமுறையில் வேறு தலைவர்களும் அவர்களையண்டிய வேறு சில சில ஒப்பந்தக்காரர்களும்  வருவார்களேயன்றி இந்த களவாணித்தனமும் எமது தேசிய வளங்களை சூறையாடுகின்ற பன்னாட்டு கம்பெனிகளின் அடாவடித்தனங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.எமது மக்கள் இந்த வளச் சுரண்டல்கள் குறித்து எவ்வித பிரஞையுமின்றி வாளாதிருக்கும் வரை இந்த கூட்டுக்களவு நடந்துகொண்டேயிருக்கும். ரணில் அரசாங்கம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் பெயரில் இப்போது லண்டனில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் வைத்திய சாலைக்கழிவுகள் கொட்டுகின்ற குப்பைமேடாக எமது தேசம் இன்று மாறியுள்ளது. இவற்றில் மண்ணிலே புதைக்ககூடாத மருந்துக்கழிவுகளும் இரசாயன பொருட்களும் ஏன் மனித உடல்களின் எச்சங்களும் கூட இலங்கையில் கொட்டப்படுவதற்காக  வந்து சேருகின்றன. இவை எத்தனை தூரம் எமது மண்வளத்தை பாதிக்கும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. 

இன்று  தென்னிலங்கையில் கொட்டப்படுகின்ற இந்த கழிவுகள் விரைவில்  கிழக்கு மாகாணத்தின் எல்லை பிரதேசங்களை நோக்கி வந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதையும் ஐக்கிய தேசிய  கட்சி பெயரால் ஏற்றுக்கொண்டு கள்ள மெளனம் காப்பர் என்பது மட்டும் உறுதி.ஏற்கனவே ஓட்டமாவடியை தாண்டியதும் பொலநறுவை மாவட்ட  எல்லை வரை உள்ள கொழும்பு வீதியிலே இருமருங்கிலும் பலவிதமான குப்பைகளும் கொட்டப்  பட்டுக்கொண்டிருக்கின்றன. அது யாரால் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றது? என்பதையிட்டு எமது எம்பிமாரோ  அதிகாரிகளோ எண்ணிப்பார்த்ததுண்டா? இப்படியாக பொலித்தீன்களும் தகரங்களும் இன்னபிற  இத்துப்போகமாட்டாத கழிவுப்பொருட்களும்  இந்த காடுகளுக்குள் கொட்டப்படுவதால் அந்த மண்ணும் வனமும் எதிர்காலத்தில் அழிந்து போக நேரிடும். பின்னர் மழை  எங்கிருந்து வரும், தண்ணீர் எங்கிருந்து வரும்? இயற்கையை அழித்துவிட்டு அமெரிக்கன் தண்ணீர்ப்போத்தல்களிடம் தஞ்சமடைவது ஒன்றே நடந்துவருகின்றது.

ஆகவே இந்த மண்ணை நேசிக்கின்ற அதனை வளப்படுத்த துடிக்கின்ற இளந்தலைமைகளே எமது தேவை. எமது இயற்கை வளங்களை சுரண்டுகின்ற பன்னாட்டு கம்பெனிகளைக் கண்டு வெகுண்டெழுகின்ற தலைமைகளே தமிழ் தேசியத்தை காப்பாற்ற முடியும். வளத்தில் சம பங்கீட்டையும் வாழ்வாதாரங்களில் சமூகநீதியையும் உறுதி செய்கின்றவர்களே தேசியத்தின் காப்பாளர்களாகும்.வாகரையிலே குழந்தை போராளிகள் இருந்த காலத்தில் மட்டும் மனித உரிமை மீறப்படவில்லை, இன்று வாகரைக்  குழந்தைகள் வீதியிலே நின்று பழங்கள் விற்கின்ற கையறு நிலையும் மனித உரிமைமீறல்தான். ‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை’ என்பார் ஒளவையார். இன்று வெருகலிலும்  வாகரையிலும் கதிரவெளியிலும் பனிச்சங்கேணியிலும்  சிறார்களுக்கு மறுக்கப்படுகின்ற கல்விக்கு யார் பொறுப்பு? இந்த சமூகப்பொறுப்பை நழுவ விட்டுக்கொண்டு தேசியம் பேசுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. யுத்தம் முடிந்து பத்துவருடங்களாகின்றது.எத்தனை பாடசாலைகளை தரமுயர்த்தியுள்ளோம்? எத்தனை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை உறுதி செய்துள்ளோம்? எத்தனை கல்வி வலையங்களை உருவாக்கியுள்ளோம்? எத்தனை குளங்களை புனரமைத்துள்ளோம்? இவற்றையிட்டு அக்கறை கொள்வதுதான் தேசியம். மாறாக ஆமியே வெளியேறு என்று அறிக்கைகள் விடுவதும் தீர்வு தீர்வு என்று மக்களை ஏமாற்றுவதும் தமிழ் தேசியமல்ல. தப்பி பிழைத்து கிடக்கும் மாவீரர் குடும்பங்களை பிச்சை எடுக்க வைத்துவிட்டு மாவீரர் சமாதிகளில் வருடாவருடம்  தீபமேற்றுவதும்  தமிழ் தேசியமல்ல.


அறுமுகுட்டிபோடி 01/08/2019

Share:

Author: theneeweb