யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்தில், கிராம சக்தி மீளாய்வு குழு கூட்டம் 01/08/2019 இன்று காலை இடம்பெற்றது.

யாழ் கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

இவ் கூட்டத்தில் கிராம சக்தி கிராம சங்கங்களின் நிர்வாகத்திடம் தமது சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஆராய்ந்திருந்தார்.

சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது சங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதுடன் தமது சங்கங்களின் தேவைகளாக, பனைசார் கைபணி உற்பத்தி பொருட்கள், மிளகாய் செய்கை மற்றும் பதனிடல், பால் விற்பனை, கால் நடைகளுக்கான புல் வளர்த்தல், கடலட்டை பண்ணை ஆகியவற்றோடு கடற்தொழில், விவசாயம், கைத்தொழில் செயற்பாடுகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசேடமாக ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தக் கூடிய சொட்டு நீர்பாசன முறைமை மூலமான வெங்காய செய்கை, மற்றும் உருளைகிழங்கு மானியம் தொடர்பாகவும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டது.

வேலணை பிரதேச செயலாளர் அ.சோதிநாதன் , கிராம சக்தி செயற்திட்ட மாவட்ட இணைப்பாளர் வன்னியசிங்கம் கபிலன், நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பு செயலாளர் குலேந்திரன் சிவராம் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள்  கலந்து கொண்டிருந்தனர்

 

Share:

Author: theneeweb