ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, பொருத்தமான கூட்டணியை உருவாக்குவது என்ற இரண்டும் முக்கியமானவையாகும். ஐக்கிய தேசியக் கட்சி தன்னோடுத்து ஓடக்கூடிய சகாக்களை (குதிரைகளை என்றும் வாசிக்கலாம்) இணைத்துக் கொள்வதில் மும்முரமாக உள்ளது. தற்பொழுது  தமிழ் முற்போக்குக் கூட்டணி, சரத் பொன்சேகாவின் மக்கள் கட்சி, சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, றிஸாத் பதியுதீனின் சிறிலங்கா மக்கள் காங்கிரஸ் உள்ளிட்டவை பச்சைக் கட்சிக்குப் பச்சை காட்டியுள்ளன.

ஐ.தே.க அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் நிச்சயமாக ஐ.தே.கவைத்தான் ஆதரிக்கவுள்ளன என்று கடவுளுக்கும் தெரியும். ஏன் சின்னக் குழந்தைக்குக் கூடப்புரியும். ஆனால், தாம் எந்த முடிவையும் இப்போது எடுக்க முடியாது. தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பார்த்த பிறகே யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியும் என்று சொல்லியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன்.

சம்மந்தனுடைய இந்த அறிவிப்பை மேலோட்டமாகப் பார்க்கின்றவர்கள் அவர் ஒரு தேர்ந்த இராஜதந்திரியாகவும் முதிர்ந்த அரசியல் தலைவராகவும் பேசுகிறார் என்றே தோன்றும். உண்மையாகவே சம்மந்தன் சொல்வதைப்போலச் செயற்படுவாராக இருந்தால், நாம் மேற்சொன்னவாறு அவரைப் பாராட்டலாம்.

ஆனால், அப்படி அவர் நிச்சயமாகச் செய்யப்போவதில்லை. ஐ.தே.கவுக்கு இனிக்கும் வகையிலேயே அவர் முடிவை எடுப்பார். அதிலும் ரணிலுக்கு இசைவானதாக. இந்த முடிவை இப்போதே அறிவித்தால் கூட்டமைப்பின் மீது சனங்களுக்கிருக்கும் கோபம் மேலும் கூடும் என்பதால் கொஞ்சம் மாற்றித் தந்திரமாக இப்படி வாசிக்கிறார். அவ்வளவுதான்.

ஏறக்குறைய கூட்டமைப்பைப்போலவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொள்கிறது. ஆனால், ஹக்கீம் சம்மந்தனை விடக் கொஞ்சம் நேர்மையாக நடந்து கொள்கிறார். அவருடைய நிலைப்பாடு ஐ.தே.க கூட்டுக்கு ஆதரவு என்பதே. ஆனால், அதில் ஒரு சிறிய இறுக்கம். யார் வேட்பாளர் என்று தெரிவித்த பிறகே தம்முடைய நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்று கூறுகிறார் ஹக்கீம். அதிலும் சஜித்துக்கே தம்முடைய ஆதரவு என்கிறார்.

அடிப்படையில் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் ஒரே குணாம்சமுடையவை என்பது உலகறிந்தது. அதனால்தான் இரண்டும் ஒரே மாதிரி தாம் நிபந்தனையை விதித்திருப்பதைப்போல, விழிப்புடன் நடப்பதைப்போல, மக்களுக்கு விசுவாசமாக இருப்பதைப்போலச் சனங்களுக்குப் படம் காட்டுகின்றன.

இதுவரையான நிலவரப்படி ஐ.தே.க கூட்டணியானது நெருக்கடி நிலையில்தான் இருக்கிறது. இன்னும் சீரான நிலைப்பாட்டுக்கு வரவில்லை. இதற்கு இரண்டு பெரிய காரணங்கள் பிரச்சினையை உண்டாக்கியுள்ளன. ஒன்று இந்தக் கூட்டணியின் சார்பிலான வேட்பாளர் யார் என்பது. ஒரு தரப்பினர் சஜித் பிரேமதாசவே வேட்பாளர். அவருக்கே செல்வாக்குண்டு  என்று அடித்துச் சொல்கிறார்கள். மாற்றுப் பேச்சுக்கே இடமில்லை என்பது அவர்களுடைய நிலைப்பாடு. மற்றத் தரப்பினர் ரணில் அல்லது கரு ஜெயசூரியவே வேட்பாளர் என்கின்றனர். முன்வரிசைக்காரர்கள் ரணில் – கரு என்று நிற்க, பின்வரிசைக்காரர்கள் சஜித் என்கிறார்கள். இரண்டு வரிசைகளும் ஒவ்வொரு வகையில் பலமானவையே. என்பதால் இது உள்ளுரக் கடுமையான  போட்டி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இவ்வளவு காலத்தையும் விட இப்பொழுதுதான் ரணில் தன்னுடைய தலைமைத்துவத்தில் உண்மையான நெருக்கடியை – கடுமையான சவாலை எதிர்கொள்கிறார்.

நீண்டகாலமாகவே உட்புகைச்சலாக இருந்து வந்த சஜித் – ரணில் தலைமைத்துவப் போட்டி இப்பொழுது வெளிவெளியாக வெளிப்பட்டுள்ளது. பிரேமதாசாவின் எழுச்சியின்போதும் இதே போன்ற நெருக்கடி நிலை இருந்தது. அதை மிக நுட்பமாகக் கையாண்டு வந்தார் ஜே.ஆர். ஆனாலும் அது மிகக் கடினமாகவே இருந்தது ஜே.ஆருக்கு.

பிரேமதாசவைக் Counter பண்ணுவதற்காக அவர் காமினி திஸநாயக்கவையும் அத்துலத் முதலியையும் மாற்றுக்கையாள்கை முறைமையில் வளர்த்தார். ஆனாலும் ஒரு கட்டத்தில் ஜே.ஆரினால் பிரேமதாசவைத் தவிர்க்கவே முடியவில்லை. ஏறக்குறைய அவ்வாறானதொரு நிலையே இப்பொழுதும். அன்று பிரேமதாச. இன்று அவருடைய மகன் சஜித். அன்று ஜே.ஆர். இன்று ரணில். வரலாற்றுச் சக்கரம் ஒரே மாதிரியே சுற்றுகிறது.

வேட்பாளர் விவகாரம் இப்படிச் சர்ச்கைகளில் சிக்கியிருக்கிறது என்றால், கூட்டணியை உருவாக்குவதிலும் இழுபறிகள் உள்ளன. இணையும் கட்சிகளிடத்திலே மென்போக்கினைக் கடைப்பிடித்து குறைந்த பட்ச ஜனநாயகத்தன்மையை வெளிப்படுத்துவது அவசியம் என்பது ரணிலின் வாதம். தாராளவாத முகத்தைக் காட்டி பிறரைக் கவர்வதும் அரவணைப்பதும் ரணிலின் அணுமுறை. இதனால்தான் அவர் ஒப்பீட்டளவில் உச்சமான ஜனநாயகவாதி. தாராளவாதி என்று அடையாளப்படுத்தப்படுகிறார். ஆனால், ரணில் இந்த அணுகுமுறையே கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார்கள் ஐ.தே.கவின் ஏனைய தரப்பினர். இதனால் அவர்கள் கூட்டணி விசயத்தில் சற்று இறுக்கமாக நிற்கிறார்கள். இதன்படி அவர்கள் ஐ.தே.கவுக்கு கூட்டணியில் தலைமைப் பாத்திரம் வேண்டும் என்கிறார்கள். இது ஏனைய கட்சிகளுக்குச் சற்றுச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதிய கூட்டணியாக மலரவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி முழு வடிவம் கொள்வதில் தாமதங்களைக் கொண்டிருக்கிறது.

இது ஐ.தே.க மற்றும் அதனுடைய ஆதரவுத்தரப்பின் பக்கமென்றால் பொதுஜன பெரமுன (மகிந்த ராஜபக்ஸ) சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மைத்திரி) தரப்பின் பக்கம் இன்னொரு விதமாக உள்ளது. அங்கும் ஏகப்பட்ட சிக்கல்களும் முடிச்சுகளும் நிரம்பியே கிடக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ஸவை தாம் விரும்பவில்லை என்று வாசுதேவ உள்பட இடதுசாரிகள் சொல்கிறார்கள். துணை ஜனாதிபதி பதவி அல்லது துணைப்பிரதமர் பதவி மைத்திரிக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறது சுதந்திரக் கட்சி. கோத்தபாயவை நிறுத்தினால் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் ஐ.தே.கவுக்கு எதிரான தமிழ்த்தரப்புகள். குறிப்பாக ஈ.பி.டி.பி மற்றும் பிள்ளையான் போன்ற தரப்புகள். கோத்தபாய ராஜபக்ஸவுக்குப் பதிலாக வேறொரு மென்முகத்தை அறிமுகப்படுத்தினால் ஐ.தே.க + தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சவாலடியாக அந்த முகத்தைத் தம்மால் ஆதரிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, புதிய மாக்ஸிஸ ஜனநாயகக் கட்சி, விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி போன்றவை உள்ளதாக இவற்றின் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

எல்லாவற்றுக்கும் முதல், சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும். அப்படி இவை வந்தால்தான் இவற்றை ஆதரிக்கும் ஏனைய கட்சிகள் இவற்றுடன் இணைவதும் இந்தக் கூட்டுக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமாகும்.

ஆகவே முன்னாயத்த நடவடிக்கைகளே மிகுந்த சிக்கலானதாகவுள்ளது. இதற்குக் காரணம் கடந்த காலத்தில் ஐ.தே.கவும் சரி சு.க மற்றும் பொது ஜன பெரமுனவும் சரி விட்டுக்கொண்ட தவறுகளே இந்த நெருக்கடிகளுக்குக் காரணம். ஆனாலும் இதை அவை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. புரிந்து கொள்ளப்போதுமில்லை. இதை மாற்றப்போவதுமில்லை. எப்படியாவது இந்த நிலைமையைச் சமாளித்துக் கொண்டு ஓடுவோம் என்றே எண்ணிக்கொண்டிருக்கின்றன.

இலங்கையின் அரசியல் மரபு இப்படித்தான் உருவாக்கி வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கப்பாலான மீறல்களுக்குரிய வாய்ப்புகளை – புதிய தேர்வுகளை, புதிய அணிகளை நமது மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அதில் பலருக்கும் நம்பிக்கையுமில்லை.

உண்மையில் இந்த இரண்டு தரப்புகளுக்கும் அப்பால் இவற்றின் பலவீனமான நிலையில் மூன்றாவது சக்தி அல்லது நான்காவது தரப்பு எழுச்சியடைய வேண்டும். அதற்குரிய தளத்தை அதற்குரிய கட்சிகள் உருவாக்க வேண்டும். அதை ஊடகங்களும் மாற்றங்களை விரும்புவோரும் ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் வரவேற்று மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால், இதற்குரிய தெளிவும் துணிவும் எவரிடத்திலும் இல்லை என்பதே இந்த நாட்டின் (இலங்கையின்) சோகம். ஓடுமோ ஓடாதோ இழுக்குமோ இழுக்காதோ எல்லோருக்கும் பழகிய குதிரைகளே தேவை. புதியனவற்றில் நம்பிக்கையே இல்லை. அதிகம் ஏன், தங்களிடத்திலேயே பல தரப்புகளுக்கு நம்பிக்கை இல்லை. இதனால்தான் நம்முடைய அரசியல் குதிரைகள் சுற்றிச் சுற்றி ஒரே வளையத்துக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரே வளையத்துக்குள் ஓடும் குதிரைகளால் கால விரயமன்றி வேறேது விளையும்?

என்பதாற்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப்போல இவருக்குப் பதில் அவர் என தேர்தற் போட்டிக்குக் கவர்ச்சிகரமான வேட்பாளரும் கவர்ச்சியான கூட்டணியும் முக்கியம் என்று கருதப்படுகிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தைப்போல தனித்து நின்று ஒரு கட்சி ஜனாதித் தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் இன்றில்லை. அப்படியான ஒரு கட்சி அதிகாரமும் செல்வாக்கும் இல்லாமலாகி விட்டது.

இது ஒரு முன்னேற்றகரமான விசயமே. பல கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியில் குறைந்த பட்சம் ஓரளவுக்காவது அதிகார வரையறைகளிருக்கும். ஜனநாயத்துக்கான இடைவெளிகள் சிறிய அளவிலேனும் ஏற்படும். இதனால் கூட்டணி அமைத்துக் கொண்டு அரசியலை முன்னெடுப்பதும் தேர்தலை எதிர்கொள்வதும் ஓரளவுக்கு நல்லதே. அதில் ஒரு பன்மைத்துவத்துக்கான இடமும் பண்புமுண்டு. இதனால்தான் நாம் கூட்டணிகளைக் குறித்து வரவேற்புடன் சிந்திக்க  வேண்டும். இது ஒரு கட்சி ஆதிக்கத்தைக் குறைத்து பல கட்சிகளின் பங்கேற்புக்கு இடமளிக்கிறது. ஆனால், இந்த வாய்ப்பை கூட்டணி சேர்கின்ற ஏனைய கட்சிகள் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படுவதில்லை என்பது மிகப் பெரிய துயரம். மட்டுமல்ல கொடுமையான சூழலும் கூட.

கூட்டணி என்பது பல தரப்புகளின் பங்கேற்பு – கூட்டுச் செயற்பாட்டுக்கான களம். இதை அதற்குரிய அர்த்தத்துடன் அணுகுவதற்குப் பதிலாக, நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, இது ஏதோ தமக்கு வழங்கப்பட்ட தயவு, வாய்ப்பு, கொடை, ஆதரவு, சலுகை என்கிற மாதிரியே பல கட்சிகளும் செயற்படுவதைக் காண்கிறோம். இதனால்தான் ரெலோ, புளொட், (முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்ற கட்சிகள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு முன்னால் தம்முடைய சுயத்தையும் ஆற்றலையும் இழந்து கைகட்டிக் கொண்டு நிற்கின்றன. இவ்வாறே ஐக்கிய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற – அதற்கு ஆதரவளிக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை மக்கள் கட்சி போன்றவை எல்லாம் ரணில் – ஐ.தே.கவின் முன்னால் பவ்வியம் கொள்கின்றன. இப்படிக் கையைக் கட்டி, வாயைப் பொத்திப் பவ்வியம் கொள்வதற்கு ஏன் தனிக்கட்சி என்ற அடையாளங்கள்? கட்சித் தலைமை என்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டும்தானா?

எப்படியோ ஜனாதிபதித் தேர்தல் என்பது இந்த நாட்டுக்குப் பெரும் சோதனைகளோடும் சவால்களோடும்தான் ஆரம்பமாகின்றது.

Share:

Author: theneeweb