சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலைதாரிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்…

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட தற்கொலைதாரிகளின் 100 கோடி ரூபாய் சொத்துக்கள் மற்றும் 13 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் இளைய சகோதரர் றில்வானின் மாமாவின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில், அவர்களது உறவினர்கள் மீது சந்தேகம் நிலவுவதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரானின் இளைய சகோதரர் றில்வானின் மனைவியின் தந்தையும், தாயும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆரையம்பதியில் உள்ள அவர்களது வீட்டின் கதவை நேற்று முன்தினம் இரவு உடைத்து அங்கிருந்த தொலைகாட்சிப் பெட்டி, எரிவாயு கொள்கலன்கள், கைத்தொலைபேசி, மின்னழுத்தி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான காத்தான்குடி காவல்துறையிடம் எமது செய்திச்சேவை வினவியபோது, பதிலளித்த காவல்துறை பொறுப்பதிகாரி, அவர்களின் உறவினர்கள் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டார்.

ஏனெனில், குறித்த வீட்டை சூழவுள்ள பகுதியில் அவர்களின், உறவினர்களே உள்ளனர் என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Share:

Author: theneeweb