வீடென்பது…. – கருணாகரன்

“வீடென்பது பேறு” என்றால் உடனே நீங்கள் இது ஏதோ ஆன்மீகச் சமாச்சாரம் என்று எண்ணக் கூடும். ஆனால், இது வேறு சங்கதி. வீடில்லாதவர்களுக்குத்தான் தெரியும் வீடு என்பது எத்தனை பெரிய பேறு என்று.

நாங்கள் வீடில்லாமல் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அலைந்திருக்கிறோம். வாடகைக்குக் கூட ஒரு வீடு கிடைக்கவில்லையா என்ற கேள்வி இந்த நேரத்தில் உங்களுக்குள் முளைக்கலாம்.

ஊரே வீடுகளை இழந்து நின்றது அப்போது. அப்படியிருக்கும்போது வாடகை  வீட்டை எங்கே, எப்படித் தேட முடியும்?

என்ன இது? வீடுகளில்லாமல் ஊரா? அது எப்படி வீடுகளில்லாமல் ஊர் இருக்க முடியும்? என்று இன்னுமின்னும் கேள்விகள் எழுக்கூடும் உங்களுக்கு.

ஒரு ஊரல்ல, அந்த நாட்களில் பல ஊர்கள் வீடுகளில்லாமலேயிருந்தன. யுத்தம் எல்லா வீடுகளையும் தின்று தீர்த்தது. போதாக்குறைக்கு ஊர்களையும் தின்றது. அதனால் எல்லோரும் வீடுகளில்லாமல் இருந்தோம். ஊரை விட்டுப் பெயர்ந்து போய், ஒரு குடிசையைக் கூட அமைத்துக்கொள்வதற்கு வழியில்லாமலிருந்தன ஆயிரக்கணக்கான குடும்பங்கள். ஏராளமானவர்கள் காடுகளிலும் ஆற்றோரங்களிலும் தென்னந்தோப்புகளிலும் கடற்கரையிலும் இருந்தனர். அப்படியிருந்தவர்களுக்கு யு.என்.எச்.சி.ஆர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய “தறப்பாள்” என்ற கூடாரச் சிலையே வீட்டின் கூரையும் சுவரும். சிலபோது அந்தத் “தறப்பாள்” சீலையே நிலத்துக்குத் தரை விரிப்பாக  விரிக்கப்பட்டதுண்டு.

மழைக் காலங்களில் “தறப்பாள்” கூடாரம் கரைந்து விடுமோ என்கிறமாதிரியிருக்கும். பெய்கிற மழையையும் அடிக்கிற காற்றையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தரித்துத் தவிக்கும் கூடாரம். அப்படித் தவித்துக் கொண்டிருக்கும் கூடாரத்துக்குள் குழந்தைகளோடும் சமையலோடும் சாப்பாட்டுப் பொருட்களோடும்…அல்லாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையிருக்கிறதே.. அது சவால்களின் உச்சம். சோதனைகளின் சிகரம். இதற்குள் பாம்புகள், விசப்பூச்சிகள் வேறு சேர்ந்து கொண்டால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். மழை நீங்கினால் சோதனை  நீங்கியது என்றில்லை. கோடைவெயிலில் தறப்பாள் சீலை மெழுகுபோல உருகி ஒழுகுமோ என்று அச்சமேற்படும். அந்தளவுக்குக் கூடாரத்துக்குள் வெக்கையைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. “அனலிடைப் புழு” என்று சொன்ன கவிஞரும் நிச்சயமாக இந்த மாதிரித் தறப்பாள்வாசியாகத்தானிருக்க வேண்டும். ஆனால் வேறு வழியில்லை. இதுதான் விதியும் கதியும்.

ஏதோ அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஒரு சிறிய தென்னந்தோப்பில் சிறியதொரு குடிசையை அமைத்துக் கொண்டு அங்கேயிருந்தோம். முப்பதுக்கு இருபது அடி நீள் சதுரக் குடிசையில் நான்கு குடும்பங்கள். மொத்தமாகப் பத்தொன்பது பேர். அதற்குள்தான் சமையல். படுக்கை. படிப்பு, புழக்கம் எல்லாமும். குடிநீர் மண்ணாலான கிணற்றில். மலசல கூடம்… அதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்.. திறந்த வெளிப்பற்றைக்காடு. பெண்களுக்குக் குழி.

இந்த முப்பதுக்கு இருபதுக்குள் எப்படி நான்கு குடும்பங்களும் வாழ்ந்து களித்தோம்! எப்படி எல்லாவற்றையும் சமாளித்தோம் என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமே மேலிடும். அதை விட வீடில்லாமல், ஊரில்லாமல்  எப்படி அவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது ஆயுளுக்கும் தீரா வியப்பு.

யுத்தம் நடக்கும்வரையும் இதுதான் நிலைமை. யுத்தம் எல்லா நிரந்தரங்களையும் சிதறடித்து விடும். எல்லா உறுதிப்பாடுகளையும். என்பதால் காற்றிலாடும் துரும்புகளாக அலைந்து கொண்டிருந்தோம்.

யுத்தம் முடிந்த பிறகு ஏதோ ஒரு நம்பிக்கையில் ஊருக்கு மீண்டால்…

அங்கே காடே சடைத்துக் கிடந்தது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த நிலம், மனிதச் சுவடே படிந்திராத பூமியைப்போலிருந்தது. மனித வாழ்வு நிகழ்ந்த சுவடென்றோ எச்சமென்றோ எதுவுமேயில்லை. வாழிடம்தான் இது  என்ற அடையாளத்துக்கு எதைச் சொல்வது? இராணுவம் தங்கியிருந்து விட்டுப்போன எச்சங்கள் மட்டும் அங்குமிங்குமாக மிஞ்சிக் கிடந்தன. வளவாக, வேலியாக நின்ற பூவரசுகளுக்குப் பதிலாக வெள்ளரசு கிளை விட்டு நின்றது. சில ஊர்கள் குற்றுயிரும் குறை உயிரும் என்பதைப்போல இடிந்தது பாதியும் அழிந்தது பாதியும் மிஞ்சியது மீதியுமென்றிருந்தன.

இதையெல்லாம் மீள உயிர்ப்பிப்பது எப்படி என்று யாருக்குமே தெரியவில்லை. கண்ணீருக்குள் வெறுங்கையோடு நிற்கும்போது என்னதோன்றும்? எப்படி நம்பிக்கை துளிர்க்கும்?

ஆனாலும் மானுட ஆற்றல் என்பது அசாதாரணமானதல்லவா. அது சாம்பலிலிருந்தே உயிர்ப்பது. கண்ணீர்க்கடலிலேயே படகோட்டிக் கரையேற முயற்சிப்பது. இந்த ஆற்றலோடு ஊரில், எங்களுடைய வளவிலேயே மீளக் குடியேறியபோதும் அகதிகளாகவே இருந்தோம். அப்படியொரு அந்நியத்தனம். சொந்த நிலம் என்பதைத் தவிர வேறு எதுவுமே அங்கிருக்கவில்லை என்பதால் அப்படியிருக்கலாம். நாங்கள் உருவாக்கிய எதுவுமே அங்கே இல்லை என்றால் வேறு எப்படியிருக்கும்?

வீட்டுக்குப் பதிலாக மறுபடியும் சிறிய குடிசைகளே தொடக்கமாகியது.  எல்லாம் முதலிலிருந்தே ஆரம்பமானது. இந்தக் குடிசைகளில் இருந்தபோது, போரில் அழிந்த வீடுகளுக்கு ஈடாகப் புதிய வீடுகளைக் கட்டித் தருகிறோம் என்று சொன்னது அரசாங்கம். இதற்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இந்தியா, சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் முன்வந்தன. செஞ்சிலுவைச் சங்கம், கியுடெக் போன்ற தொண்டு நிறுவனங்களும் இதற்காக அரசுடன் இணைந்து கொண்டன.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி எல்லாம் நடக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முதலாக நிபந்தனைகள் வந்தன. வீடில்லாதவர்களுக்கு மட்டுமே வீடு என்றார்கள். எல்லோருக்கும்தான் வீடில்லையே என்றபோது, போரிலே இறந்தவர்கள், காயப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை என்றார்கள். கூடவே ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள், மாற்றுவலுவுடையோர், ஆண் துணையிழந்த – பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், வயோதிபரைக் கொண்ட குடும்பங்கள் இந்த முதற் தெரிவில் உள்ளடங்கும் என்றனர். இதற்கெனப் புள்ளியிடல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படியான தகுதிகள் இருப்போர் கூடுதல் புள்ளிகளைப் பெற்று வீட்டுத்திட்டத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையோராகினர். இப்படியே நிபந்தனைகள் நீண்டன.

இங்கே நான் எழுதுவதைப்போலவோ நீங்கள் இலகுவாகப் படிப்பதைப்போலவோ இதெல்லாம் மிகச் சாதாரணமாக நடப்பதில்லை. பெரிய போராட்டத்தின் மத்தியில்தான் இதெல்லாம் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. வீட்டுத்திட்டத்துக்குத் தெரிவாகுவது என்பது அதிர்ஸ்ட தேவதை கடைக்கண்ணைத் திறப்பதைப்போன்றது. அப்படி அதிர்ஸ்ட லக்சுமி கண் திறந்தாலும் அதற்கிடையில் சனீஸ்வரப் பெருமாள் எப்படியோ உள் நுழைந்து நிபந்தனையாகக் குந்தி விடுவார்.

வீட்டுத்திட்டத்தில் தெரிவாகியோருக்கு காணிப் பத்திரங்கள் சரியாக இருக்க வேணும். இல்லையென்றால் கையில் கிடைத்தது வாயில் சேராமல் போனதாகி விடும். அப்படி வாய்ப்புகளை இழந்தவர்கள் ஏராளமுண்டு. உறுதிக்காணியோ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரக் காணியோ எதுவென்றாலும் அவரவர் பெயரில் இருக்க வேணும். இல்லையென்றால் வீடு காலி.

வன்னியில் காணிப்பத்திரப் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. முப்பது, நாற்பது வருசமாக யுத்தம் நடந்து கொண்டிருந்தால், இருபது, இருபத்தைந்து வருசமாக அகதியாக ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தால் யாரிடம்தான் காணிப்பத்திரங்கள் பாதுகாப்பாக இருக்கும்? அதுவும் போர்க்கால முள்ளிவாய்க்காலைக் கடந்தவரிடம்? அவர்களிடம்  உயிரைத் தவிர வேறு என்னதான் மிஞ்சியது? ஆவணங்கள் இருந்தாலும் அதில் ஏகப்பட்ட பிரச்சினைகள். புலிகளின் ஆட்சிக்காலத்தில் விற்ற காணிகளைச் சிலர் மீள அடாத்துப் பண்ணினார்கள். காசை வாங்கிக் கொண்டு காணியை விற்றவர்களிற் பலரும் புலிகள் மிரட்டியதால்தான் தாங்கள் அப்படிக் காணியை விட்டுச் செல்ல வேண்டியதாக இருந்தது என்றனர்.  அல்லது புலிகளுக்கும் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது என்று கதை விட்டனர். புலிகளின் முன்னால் நாங்கள் மறுத்துப் பேச முடிந்ததில்லை என்றனர். இப்படிச் சொல்லிக் கொண்டே விற்ற காணிக்கு மீளுரித்துக் கொண்டாடியபோது இது வழக்கு, பிணக்கு என்று மிகுந்த சிக்கலடைந்தது.

இதில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது “முன்னாள் போராளிகள்” என்ற செல்லப் பெயரால் குறிப்பிடப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே. தேச விடுதலை வேண்டும் என்போரெல்லாம் அதற்காகப் போராடியவர்களுக்குக் காசுக்கு விற்ற காணியை மிகத் தந்திரமாக மீள எடுத்துக் கொண்டனர். காசையும் கொடுத்து வாங்கிய காணியையும் இழந்தவர்கள் பலருண்டு. சிலரே வென்றனர். போரிற் தோற்றதை விடப் பெரிய தோல்வி அண்ணை இது என்று கண்ணீர் விட்டழுத பலர் எங்கள் அயலைச் சுற்றியிருக்கிறார்கள். என்ன செய்வது? யாரிடம் இதற்கான நீதியைக் கோருவது?

எல்லாத் தோல்விகளும் எங்களுக்குத்தானா என்று சொல்லிக் கவலைப்படுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழிகளில்லை. வழிகளெல்லாம் அடைபட்ட கடவுளர்கள். காலம் கை விட்ட அருளாளர்கள்.

எங்களுக்கு அதிர்ஸ்டவசமாக நான்கு சுவர்கள் மட்டும் மிஞ்சியிருந்தன. அதனால் வீட்டுத்திட்டம் இல்லை என்றார்கள். சுவர்களே இல்லாமலிருப்போருக்குத்தான் வீடுகள். மற்றவர்களுக்குப் பின்னொரு போது பார்க்கலாம் என்ற அறிவிப்பு வந்தது.

கூரையில்லாமல் மிஞ்சிய சுவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? இந்த நான்கு சுவர்களும் மிஞ்சியிருக்கவே வேண்டியதில்லை என்றாள் வசந்தி. அதிர்ஸ்டவசமாக மிஞ்சிய சுவர்கள் கிடைக்கவிருந்த அதிர்ஸ்டத்தை அப்படியே தள்ளிக் கொண்டு போனது. வேறு வழியில்லை என்றபோது அந்தச் சுவர்களுக்குக் கூரையை ஏற்றிக் கொண்டு அதற்குள் குடியேறினோம்.

வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் போகக் கிடைத்தவர்கள் ஏதோ கொடுப்பினைக்குரியவர்கள் என்று நீங்கள் எண்ணக் கூடும். அதுதான் இல்லை. வீட்டுத்திட்டம் கிடைத்தாலும் அது ஏராளம் நிபந்தனைகளுக்குட்பட்டது. இந்த அளவுக்குள்தான் வீடு கட்டப்பட வேணும். இந்த அமைப்பு அல்லது வடிவத்தில்தான் கட்டாயமாக இருக்க வேணும். இந்தக் கால எல்லைக்குள் கட்டப்பட வேணும். அதுவும் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு கால நிர்ணயம். இதையெல்லாம் சீராகச் செய்தால்தான் காசுக் கொடுப்பனவுக்கு அனுமதியுண்டு. இல்லையென்றால் கொடுப்பனவு கிடையாது. கையிலே காசில்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக நிற்போர் என்னதான் செய்ய முடியும்?

கடன்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. கடன்படுவதற்கும் இடம் வேணுமே. ஆட்கள் வேணுமே. ஆளுக்காள் பிணை வைத்து வங்கிகளில் கடன்பட்டனர் பலர். சிறுகடன், நுண்கடன் திட்டங்களில் கைநீட்டினர் இன்னும் பலர். மிஞ்சிக்கிடந்த பொருட்களையோ நகைகளையோ  விற்றனர் வேறு சிலர். தெரிந்தவர், அறிந்தவர்களிடம் கைக்கடனாக வாங்கிக் கொண்டு அல்லற்பட்டவர் சிலர். கிடைத்த வீட்டுத்திட்டத்தை ஒப்பேற்றுவதற்காக இப்படிப் படாத பாடுகளையெல்லாம் பட்ட சனங்களின் வாயில் “இதை விட இந்த வீடே கிடைக்காமல் போயிருக்கலாம்….” “… இந்தக் கண்டறியாத வீட்டுத்திட்டமொண்டு கிடைச்சு மனிசர் படுகிற பாடு… ச்சீ.. ஆட்களைக் கடனாளியளாக்கினதுதான் மிச்சம்….” என்ற  வார்த்தைகளே வந்தன. இன்னும் இதுதான் நிலைமை.

வீட்டுக்குக் காசு கொடுப்பது என்பது புண்ணியமோ கடமையோ என்பதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். அதென்ன ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்? கடனைக்கொடுக்கும்போதும் இனாமைக் கொடுக்கும்போதும் இப்பொழுதெல்லாம் நிபந்தனைகளை விதிப்பது உலக நியதியாகி விட்டது. கையேந்த வேண்டியிருந்தால் கட்டளைக்கும் நிபந்தனைக்கும் கட்டுப்பட்டுத்தானாக வேண்டும் என்பதும் உலக நியதியாகிற்று. இப்படி நிபந்தனை விதிக்கப்பட்டதால்தான் போருக்குப் பிந்திய வன்னியின் வீடுகள் எல்லாம் விதியை மீற முடியாமல் தீப்பெட்டியைப்போலச் சிறியவையாகச் சுருங்கிக் கிடக்கின்றன. உண்மையில் வீடென்பது சூழலுக்கு அமைவாக இருக்க வேணும். மனதுக்கேற்றதாக அமைய வேணும். தேவைக்கும் வசதிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் அமையும்போதே அது வீடாக இருக்கும். வீடென்பது மகிழிடம். அதுவே நம்முடைய பண்பாட்டு அடையாளமாகவும் இருக்கும். வீடென்பது வாழிடம் மட்டுமல்ல. அது நமது அகமும் கூட. பண்பாட்டின் முகமுமாகும்.

போர் நடந்த நிலத்தின் வாழ்வை உணர்வதற்கும் அறிவதற்கும் அங்கிருக்கும் இந்த வீடுகளே சாட்சி. கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை. நிபந்தனைக்குட்பட்ட வாழ்க்கை. இயல்பற்ற வாழ்க்கை. போதாமைகளில் சிக்கிய வாழ்க்கை. இன்னும் போரின் முன்னே நிறுத்தப்பட்ட வாழ்க்கை….. வறுமைக்கும் சிறுமைக்கும் அடையாளமான வாழ்க்கைச் சின்னங்கள் இவை.

ஆனால், இதையெல்லாம் கடந்தும் பல வீடுகள் எழுகின்றன. அது புலம்பெயர்ந்தோரினால் எழுப்பப்படும் வீடுகள். அவற்றின் உயரமும் அகலமும் பெரிது. அவற்றின் விசாலமும் அதிகம். அவற்றுக்கான வேர்களும் நீரோட்டமும் வேறு. நிபந்தனைகளுக்குட்படாதவை அவை. அதனால் அவற்றின் சிகரம் மிக மிக உயரம்.

போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்னும் வீட்டுத்திட்டம் கிடைக்காமலிருப்போர் ஆயிரக்கணக்கிலுண்டு. அதேவேளை இப்பொழுதும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. நிபந்தனைகளும் தாராளமாக விதிக்கப்படுகின்றன. இவ்வளவுக்கும் வீடொன்றுக்குக் கொடுக்கும் காசோ பாதி வேலையை முடிப்பதற்குப் போதாது. இருந்தும் கடன் பட்டு மிகுதி வேலையை முடிக்கும்போதும் சுய விருப்பத்துக்கு நாம் ஒரு வீட்டைக் கட்டி விட முடியாது.

இதுவும் ஒரு போர்தான். இதையெல்லாம் எடுத்துப் பேசுவதற்கும் நிலைமையை மாற்றுவதற்கும் யாருளர் நமக்கு?

00  எதிரொலி (ஓகஸ்ற்) 2019

Share:

Author: theneeweb