சமுக சமத்துவத்துக்கான வெகுஜன இயக்கத்தின் அறிமுகத்துக்காக தோழர் வீ.சிவலிங்கம் எழுதிய -வரலாற்றுத்தேவை- கட்டுரையிலிருந்து…..!

சாலையூரான்-

பாகம் – 01

இன்று நாட்டின் அரசியல் நிகழ்வுப்போக்கினை தீர்மானிக்கும் பிரதான அரசியல் கட்சிகள் பலவும் 20ஆம் நூற்றாண்டின் சமுக பொருளாதார கட்டுமானத்தின் அடிப்டையைக் கொண்டே நாட்டின் தேசிய அரசியலில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளன.

இக்கட்சிகள் தமக்கென ஏற்படுத்திக்கொண்டுள்ள ஸ்தாபன வடிவங்கள் அதன்வழி அவை தீர்மானங்களை மேற்கொள்ளும் வழிமுறைகள், இத்தீர்மானங்களை செயற்படுத்த முனையும் அதன் கட்சி தலைவர்களும் இந்த 20ஆம் நூற்றாண்டு எதிர்கொள்ளும் சமுக அரசியலின் அனுபவங்களிலிருந்தே பிரச்சினைகளுக்கு விளக்கம் தர முயல்கின்றனர்.
1972இல் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பு நாட்டை குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அதன் தேசிய பொருளாதாரத்தை சுய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது.

அவ்வாறெனின் அதன்பிறகு 1978இல் அறிமுகமான அரசியல் யாப்பு நாட்டின் சுதேசியத்தை அதன் வழியான அதன் சொந்த இருப்பின் அடையாளங்களை அதன் அரசியல் சமுக பொருளாதாரத்தின் மூலக்கூறுகளை முற்றாக மறுதலிப்பதாக அமைந்துவிட்டிருக்கிறது.
இதன் மூலமான மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளது ஒரு பக்கவிளைவாக 80களில் உருவான தென்பகுதி இளைஞர்களின் கிளர்ச்சிகளை குறிப்பிடலாம்.

இந்த எழுச்சியை ஒடுக்குவதற்காக இராணுவத்திற்கும் அதிகார வர்க்கத்துக்கும் இடையே உருவான நெருக்கமென்பது சுதந்திரத்துக்கு பின்னரான நாட்டின் அரசியல் நெருக்கடியின் புதியதோர் பரிமாணமாக தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது.

இதனை அடுத்து 83க்கு பின்னர் வடக்கே எழுச்சி பெற்ற தமிழ் தேசியவிடுதலை போராட்டத்தை அரசு ஒடுக்குவதிலும் அதற்காக முழு சிங்கள தேசத்தையும் தமிழ் மக்களுக்கெதிராக திருப்பி விடுவதலேயே சென்று முடிந்திருக்கிறது.

இந்த நிலமையானது நாட்டின் பல்தேசிய இனங்களுக்கிடையே இதுவரை காலம் இருந்துவந்த குறைந்தபட்ச பரஸ்பர இன ஒற்றுமைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கே வழியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக அரசு இராணுவமயப்படுதலை நோக்கி நகரவும் அதன் வழி போரைக்கட்டுப்படுத்த சமாதானம் என்கிற போர்வையில் வெளிச்சக்திகள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் அபிவிருத்தியின் பேரால் நாட்டை கடனாளியாக்குவதற்கும் வழிகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நிகழ்வுப்போக்கின் உச்சமாக நாட்டின் தேசிய முலவளங்களை வெளிச்சக்திகள் பங்கு போட்டுக்கொள்வதற்கு அனுமதித்திருப்பதே நமது தேசத்து ஆட்சியாளர்களின் இதுவரையான வரலாறாக இருக்கிறது.

கூடவே இரண்டாவது (1978) குடியரசு அரசியல் யாப்பின் அமுலாக்கமானது நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு கவனத்துக்குரியதாகும்.
மறுபக்கத்தில் தேசத்தின் அரசியல் பொருளாதார கட்டுமானத்தில் அது ஏற்படுத்தியுள்ள பாதகமான மாற்றங்களை கவனம் செலுத்த அதன் பின்வந்த அரசியல் தலைமைத்துவங்கள் தவறிவிட்டன.
மேலும் தேசம் எதிர் கொண்டுள்ள நெருக்கடிகளை கவனத்திலெடுத்து ஒரு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதை நோக்கி மக்களை விழிப்படையச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்ஃ
அதற்காக பொருத்தமான அரசுத் தலைவர்களை மக்கள் தேர்வு செய்வதற்கும். அதற்காக ஒரு ஆரோக்கியமான கட்சி முறை அரசியலை அறிமுகம் செய்வதற்குமான சூழலை உருவாக்கியிருக்க வேண்டும்.

இதற்குப் பதில் குறுங்குழுவாத அடிப்படைவாத அரசிலை தூக்கி நிறுத்தியதன் மூலம் தமக்கான அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வதே இந்த தேசிய அரசியல் கட்சித்தலைமைகளின் பிரதான நோக்கமாக இதுவரை இருந்து வந்திருக்கிறது.

நமது தேசம் எதிர்கொள்ளும் நெருக்கடி அரசியலின் மற்றொரு ஆபத்தான போக்காக நாட்டின் அரசியல் பொருளாதாரத்தின் மீதான அதிகாரத்துவ மேலாண்மையை சிறு குழுவினர் தம்வசம் எடுத்துக்கொண்டிப்பது மற்றொரு அவலமான நிலமையாகும்.

இந்த அதிகாரத்துவ ஒன்றுகுவிப்பை அரசியல் அமைப்பு ரீதியாகவும் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தின் உதவியுடனும் மேற்கொள்ளும் முனைப்புகள் இன்று வலுப்பெற்றுவருவது ஆபத்தான ஒரு நிலமையாகும். .

இந்தப் போக்கு தீவிரம் பெற்றிருப்பதானது அதிகாரத்துக்கு வரும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஊழல், லஞ்சம், குழு ஆதிக்கம், அரசியலில் குடும்ப ஆதிக்கம் என்பன முன் என்றுமில்லாதவாறு தலைதூக்குவதற்கு வழிசமைத்துள்ளன.
போருக்கு பின் தலைதூக்கியுள்ள பிரச்சினைகள்.

ஒருபுறத்தே நாட்டின் ஆட்சி நிர்வாக மட்டத்தில் அதிகாரத்தை ஒன்றுகுவிக்கும் முயற்சிகள் வலுப்பெறும் அதே நேரம் மறுபக்கத்தில் சாமானியக் குடிமக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
போர்ச் சூழலில் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக எதிர் கொண்ட நெருக்கடிகளை விட மோசமான பெரும் வாழ்க்கை நெருக்கடிகளை குறிப்பாக இன்றைய அமைதிச் சூழலில் முழுநாட்டு மக்களுமே எதிர்கொண்டிருப்பது கவனத்துக்குரிய ஒரு பிரச்சினையாகும்.
இதில் போருக்கு பிந்திய தமிழ் சூழலை கட்டியெழுப்புதல் என்பதில் ஆட்சியாளர்களும் கூடவே தமிழ் தலைவர்களும் கொண்டிருந்த அலட்சியப் போக்கென்பது ஒரு மோசமான நடவடிக்கையாகும்.
இந்த நிலமையின் தொடர்ச்சியானது போருக்குப்பிறகும் தமிழ் மக்கள் புலம்பெயர்தலை நோக்கி தம்மிடமுள்ள அனைத்து வாழ்வாதார வளங்களையும் விரயமாக்குவதிலேயே சென்று முடிந்திருக்கிறது.

அதுமட்டுமன்றி போரின் பாதிப்புக்குள்ளான தமிழ் தேசத்தை கட்டியெழுப்புதல் என்கிற அவசியமான பணிக்கு அதிகாரத்திலிருந்த தமிழ் தலைமைகளும் சேர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
உண்மையில் எமது தலைவர்களிடம் தமக்கு வாக்களித்த மக்களின் வாழ்க்கையை கட்யெழுப்புதல் என்பது அவர்களின் தார்மீக அக்கறையாக இருந்;திருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்திருக்குமாயின் உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் இடம்பெயர்த்தப்பட்ட மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான பணிகளில் இத்தலைவர்கள் கவனம் செலுத்தியிருப்பார்கள்.

அவ்வாறு அதில் மேலான கவனம் செலுத்தப்பட்டிருக்குமாயின் அதன் மூலம் கிராமங்களில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த உறவுகளும் அவர்களின் கலைகலாசாரமும் அவர்களின் வாழ்விடம் சர்ந்த கிராமிய உணர்வும் சிதைவடையாமல் பாதுகாக்க வழிகள் ஏற்பட்டிருக்கும்.
கூடவே அவர்களின் சுய தேவைப்பூர்த்திக்கான உற்பத்தி முயற்சிகளும் வலுப்பெற்றிருக்கும் என்பதோடு தமது வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்காக தமது சொந்தக்காலில் நிற்றல் என்பதும் சாத்தியமாகி இருக்கும்.

இது தமிழ் தேசத்தின் ஆரோக்கியமான கூட்டுக் குடும்ப உறவை தொடர்ந்து பேணுவதற்கான வழிமூலங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு;த்திருக்கும்.
ஆனால் மேற்கூறப்பட்டவாறு மக்களின் நிலையான வாழ்க்கை முறையொன்றை கட்டியழுப்புவதற்கு பதில் தமது அதிகார கதிரைகளை பாதுகாத்து கொள்வதிலேயே இருதரப்பு இனத்துவ தலைமைகளும் குறியாக இருந்து வந்திருக்கின்றன.

இதற்கு வசதியாக வலிந்து இருதரப்பாலும் இனத்துவ நிலைப்பட்டு சக இனங்களை எதிர்நிலைப்படுத்தும் அரசியலே இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
இதன் வழியாக உருவான பதட்டமான அமைதியற்ற சூழலானது தொடர்ந்தும் புலம்பெயர்வையும் அவ்வாறே தனிமனித அவாவுகளுக்கும் வழிசமைத்தமையானது தமிழ் சூழலின் மரபுவழியான கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலேயே சென்று முடிந்திருக்கிறது.

உதிரிகள் அணியாக மாறிச் செல்லும் தமிழ் சூழல்
போர்ச்சூழலிலும் அதன் பின்னரும் தீவிரம் பெற்றிருக்கும் புலம்பெயர்வின் ஒரு பிரதான பக்கவிளைவாக இதனை குறிப்பிட முடியும்.
உற்பத்தியையும் வருமானத்தையும் அதனூடான வாழ்க்கை முன்னேற்றங்களையும் தமது வாழ்விடச் சூழலில் மக்கள் நேரடியாக தொட்டுணரும் அனுபவத்தை போரின் மூலமான புலம்பெயர்வு இப்போது மறுதலித்துவிட்டிருக்கிறது

இதன் பின் இந்த வாழ்விடச் சூழலில் உழைப்போ அன்றி உற்பத்தியோ எதுவும் நடைபெறாத நிலமைகளிலும்; ஒரு பிரிவினரிடம் குறுகிய காலத்தில் பெரும்தொகை பணப்புழக்கம் அதிகரித்திருப்பதற்கும் இதன் மூலம் வழிகள் ஏற்பட்டிருக்கின்றன.
மறுபக்கத்தில் பெரும் எண்ணிக்கையானோர் தமக்கான அத்தியாவசிய பிழைப்பு சாதனங்களுக்காக பெரும் சவால்களை எதிர்கொள்ளும் புதிய நெருக்கடியான ஒரு சமுக நிலமையையும் இங்குதான் (சமகால தமிழ் சூழலில்) நாம் அவதானி;க்க முடிகிறது.

இந்த நிலமையானது சமுகத்தின் ஒரு பிரிவினர் (சிறுபகுதியினர); மத்தியில் மிகையான வாழ்க்கை திருப்தியை கொடுத்திருக்கிறது என்றால் இந்த வாய்ப்புக்களைக் கொண்டிராத சமுகத்தின் பெரும் எண்ணிக்கையானோரின் வாழ்க்கையில் அது ஜீரணிக்க முடியாத பெரும் பற்றாக்குறையுணர்வை தோற்றுவித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியானது நமது வாழ்விட சூழலில் எத்தகைய ஒரு உழைப்போ உற்பத்தியோ இன்றி ஒருவர் சொத்துக்களின் அதிபதியாக இருப்பதற்கான சமுக அங்கீகாரத்துக்கும் இது வழியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப்போக்கானது கூடவே சட்டத்துக்கு புறம்பானவழிகளில் ஒருவர் திடீர் பணக்காரராவதற்கான வழிமூலங்களுக்கும் சமுக அங்கீகாரத்தை வழங்கும் ஒரு புதிய சூழலை நோக்கி நமது தமிழ் தேசம் நகர்ந்து கொண்டிருப்பதை இங்கே குறித்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளின் மூலம் ஒருவரால் வாழ்க்கையின் மேன் நிலைக்கு செல்ல முடியுமெனில் அதேவழிமுறைகள் பாதமாக அமையும்போது மறுகணமே எதுவுமற்ற ஏதிலியாக வீதிக்கு அவர் இழுத்துவிடப்படலாம்.

அவ்வாறே சட்ட விரோத சொத்து சேர்ப்புக்காக அவர் நீதிமன்றத்தின் கு;ற்றவாழிக் கூண்டில் நிறுத்தப்பட்டு அவர் சிறைக்குள் தள்ளப்படலாம்.
மேலும் இந்த சமுக நிலமையானது தனிமனித அவாவுகளுக்கு வித்திட்டிருப்பதும் அதனை மேலும் வளர்த்து செல்வதற்குமான முனைப்புகளுக்கே வழியை திறந்து விட்டிருக்கிறது.
இத்தகைய போக்க்pனைக் தமிழ் தேசம் கொண்டிருப்பதானது மக்கள் தமது வாழ்விட சூழலில் தம்மை சமுகமாக சிந்திப்பதற்கான வாய்ப்புக்களை பெரிதும் மட்டுப்படுத்தியிருக்கிறது.
தமிழ் கட்சிகளின் உதிரிநிலை நோக்கிய வளர்ச்சிப் போக்குகள்
போரில் பாதிப்புக்குளளான தமிழ் தேசத்தை கட்டியெழுப்புவதே தமது பிரதான பணியாக கூறிக்கொள்ளும் தமிழ் கட்சிகள் அந்த மக்களின் நலனில் இருந்து ஒரு குறைந்த பட்ச உடன்பாட்டுக்காகவேனும் ஒன்றுபட முடியாத நிலையிலிருப்பது ஒரு அவலமான நிலமையாகும்.
கூடவே ஒன்றையொன்று குறைகூறிக்கொள்வதன் மூலமே தம்மை அடையாளப்படுவத்துவதில் குறியாக இருப்பதானது எதிர்காலத்தில் ஒன்றுபட முடியாத ஒரு உதிரி நிலமைக்குள் தமிழ் தேசத்தின் கட்சி அரசியல் சென்று கொண்டிருப்பது கவனத்துக்குரிய மோசமான ஒரு நிலமையாகும்.
மேலும் இக்கட்சிகளின் முனைப்பில் வெளிப்படும் இந்த உதிரித்தன்மையானது தமிழ் சூழலில் செயற்பாட்டிலிருக்கும் கிராமிய பிரதேசமட்ட அமைப்புக்களில் மக்கள் ஒன்றிணைவதையும் அதனூடான அபிவிருத்தி செயற்பாடுகள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
கூடவே தமது வாழ்விடம் சார்ந்து தமக்கான அபிவிருத்தி மேம்பாட்டுக்காக அங்குள்ள பொது அமைப்புக்களில் மக்கள் கூட்டாக இணைந்து சிந்திக்கவும் செயற்படவும் முடியாத ஒரு உதிரி நிலையை இத்தமிழ் கட்சிகள் தோற்றுவித்திருப்பது மற்றொரு பிரச்சினையாகும்.
இந்த மக்கள் அமைப்புக்கள்; தமது கட்சி நலனை மாத்திரம் முன்நிறுத்தி தமது வாக்கு வங்கிக்கான ஆதரவை குறியாக கொண்டிருப்பதானது மக்களை கூறுபடுத்தி உதிரிகளாக்கும் செயற்பாட்டிலேயே சென்று முடிந்திருக்கிறது.

குறித்த அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் வாக்குகளை தமக்கு மாத்திரம் வரிந்து கொள்ள இந்த கட்சிகளுக்குள் நிகழும் முட்டிமோதலானது இவ்விடத்தில் கவனத்துக்குரியது.
கட்சிகளுக்கிடையேயான இந்த முரண்பாடுகள் இந்த அமைப்புக்கள் மூலம் மத்தியில் அரசிடமிருந்து மக்கள் பெறக் கூடிய நன்மைகளை இடைத்தடுப்பதிலேயே சென்று முடிந்திருக்கின்றன.
இந்தகைய போக்கின் தொடர்ச்சியானது இந்த கிராமிய அமைப்புக்களிலும் கட்சிகளால் மக்கள் கூறுபடுத்தப்பட்டு இங்கும் மக்கள் உதிரிநிலைக்குள்ளாகும் அவலம் தொடர்வது இவ்விடத்தில் கவனத்துக்குரிய ஒரு பிரச்சினையாகும்.

மறுபக்கத்தில் தமது சொந்த வாழ்விடங்களில் சொந்த உழைப்பு மூலமான வாழ்க்கை முன்னேற்றம் என்பதிலிருந்து விலகி நாட்டுக்கு வெளியிலிருந்தான வருமானமுறைமையொன்றை இந்த திறந்த பொருளாதாரக் கொள்கை இப்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த வருமான முறைமையானது அவர்களின் வாழ்வாதார முயற்சிகளுக்காக கூட்டாக சிந்திப்பது செயற்படுவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன.
அதனூடாக தம்மை தாம் சமுகமாக சிந்திப்பதற்கான அமைப்புக்களில் தம்மையும் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கான வழிமுறைகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தமது வாழ்க்கை தேவைகளை அடைந்து கொள்வதற்காக கூட்டுக்குடும்பமாக சிந்தித்து செயற்படுவது என்கிற சிந்தனை வழிமுறைக்குப்பதில் உதிரி நிலை நோக்கி நகரும் தனி;த்தனி அலகுகளாக சமகால குடும்ப அமைப்பு மாற்றம்பெற்று வருவது தமிழ் சூழல் எதிர்கொள்ளும் மற்றொரு அவலமான நிலமையாகும்.

அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்கள்
இதுவரை காலம் அரசிடம் இருந்துவந்த அத்தியாவசிய சேவைத்துறைகள் தனியார் துறைக்கு இன்று கைமாறிச் சென்று கொண்டிருப்பது நாட்டின் திறந்த பொருளாதாரக்கொள்கை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பிரதான பாதிப்பாகும்.

குறிப்பாக கல்வி சுகாதாரத்துறைகளில் ஏற்பட்டிருக்கும் தனியார்மயமாக்கலானது இதன் நன்மைகளை சாமானிய மக்கள் பெற முடியாத நிலமையை இப்போது உருவாக்கியிருக்கின்றன.
அவ்வாறே அத்தியாவசிய விநியோகங்கள் தனியாரின் கைகளுக்குமாறியிருப்பது அவற்றின் சந்தைவிலைகளை சீரான முறையில் அரசு பேண முடியாத நிலமையில் இருப்பது ஆகியனவும் கவனத்துக்குரிய விடயங்களாகும்.

இந்த நிலமையின் காரணமாக அதன் நன்மைகளை மக்களுக்கு கிடைக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருப்பதானது மக்களின் இயல்பு வாழ்வில் புதிய நெருக்கடிகளுக்கு வழியை ஏற்படுத்தியிருக்கின்றன.

கூடவே இந்த பொருளாதார முறைமையின் கீழ் மக்கள் தமக்கான அத்தியாவசிய உற்பத்திகளை தாமே உற்பத்திசெய்து நுகர்வதான நிலமையிலிருந்தும் இப்போது அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதற்குப்பதில் அனைத்து நுகர்வுத் தேவைகளையும் வெளியிலிருந்தான இறக்குமதிகள் மூலமே பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது தேசம் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினையாகும்.

கூடவே வெளிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கலில் எமக்கான அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அத்தியாவசியமற்ற ஏற்றுமதிகள் மூலமான வருமானத்தை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு நாடு இப்போது தள்ளப்பட்டிருப்பது நாட்டின் தேசியவருமானத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

காலத்தின் தேவையாக சமுக சமத்துவத்துக்கான இயக்கம்
திறந்த பொருளாதாரத்தின் சமுக அரசியலும் போரின் பாதிப்பும் ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான பிரச்சினை ஏற்;கனவே சமுகத்தில் கல்வி தொழில் பொருளாதாரத்தில் மிகவும் கீழ் நிலையிருந்தோரின் வாழ்க்கை நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாகும்.
யுத்த சூழலில் இனத்துவ நிலைப்பட்டு தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் விடுதலைக்காக இந்த மக்கள் அர்ப்பணித்திருக்கிறார்கள்.

அவ்வாறெனின் போரின் முடிவுக்குப்பிறகு இந்த விடுதலைக்கான போர் எமக்கு எதனை விட்டுச்சென்றிருக்கிறது என தம் தமிழ் தலைவர்களை நோக்கி கேள்விக்குறியுடன் நோக்க இந்த மக்கள் இப்போது தலைப்பட்டிருக்கிறார்கள்.
போருக்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசியத்தின் பேரால் தமிழ் தலைவர்களின் தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்திய பெருமை இந்த மக்களையே சாரும் என்பதையும் இங்கே குறித்துக்கொள்ள வேண்டும்.
நிலமை இவ்வாறிருக்க யாழ்ப்பாண தமிழ் சூழலில் ஒருவரின் மேன்நிலையாக்கமும் அதன்வழியான சமுக அந்தஸ்தும் என்கிற விடயமானது குறிப்பாக சாதியத்துடன் தொடர்புபடுத்தியாகவே அமைந்திருக்கிறது.

கல்வியில் உயர் நிலையை எட்டுவதும் பொருத்தமான அரச நிர்வாக கட்டுமானத்தில் நிறைவேற்றுத்தரத்திலான நியமனமொன்றை பெற்றுக்கொள்வதிலும் சாதிய அடிப்படையிலான வகைதெரிவுகள் எழுதாதவிதியாகவே இருந்துவருகின்றன.
தமிழ் சூழலில் புரையோடிப்போயிருக்கும் இந்த சமுக நிலைப்பட்ட சிந்தனையானது போருக்கு பின்னரான இந்த 10 ஆண்டு காலத்தில் அடிநிலை மக்களின் வாழ்விடங்களுக்கான உட்கட்டுமானங்கள் அடிப்படைவசதிகளை அம்மக்கள் பெற்றுக் கொள்வதில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

இது அம்மக்களின் ஆரோக்கியமான வாழ்விட வசதி போதிய கல்வி வசதிகளை அம்மக்கள் தடையின்றி பெற்றுக்கொள்வதிலும் அதனூடான சமுக மேன்நிலையாக்கத்திலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் தேசியத்தின் பேரால் அடிநிலை மக்கள் வழங்கிவரும் வாக்குகளுக்காக அவர்களின் வாழ்நிலை மேம்பாடு அதனூடான அவர்களின் சமுக அந்தஸ்து குறித்த பிரச்சினைகள் கிடப்பில் போடப்பட்டு வருவது இன்று இம்மக்களுக்கான அரசியலில் கவனத்துக்குரிய பிரச்சினைகளாக மாறியுள்ளன.
சமுக நிலைப்பட்டு இம்மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து இதுவிடயத்தில் தமிழ் தலைமைகள் தொடர்ந்தும் மௌனமாக இருந்துவருவது இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னோடிகள் சமுக அக்கறையாளர்கள் மத்தியில் புதிய விழிப்பை இப்போது ஏற்படுத்தியிருக்கின்றன.

இதற்கென அந்த மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் சமுக மட்ட அமைப்புக்களை எதிர்வரும் தேர்தல்களில் தமக்கான பிரதிநிதிகள் தமது சமுக சூழலில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளன.

இந்த வரலாற்று அவசியம் உணரப்பட்டிருப்பதானது தமக்கான தலைமைத்துவம் குறித்த அடிநிலை மக்களின் சிந்தனை வழிமுறையில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
அது மட்டுமன்றி தமிழ் தேசியத்தின் பேரால் தமக்கான பிரதேச அபிவிருத்தி வாழ்வாதார நலத்திட்டங்கள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி தமிழ் தலைவர்கள் அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் இப்போது எழுந்துள்ளன.
தமிழ் தலைமைகளின் இந்தப் போக்கினை தமது அத்தியாவசிய பிழைப்புச்சாதனங்களை பெறுவதற்கான தமது சிறு உற்பத்தி வழிமூலங்களையும் மறுதலிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அம்மக்கள் நோக்க தலைப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி நீண்ட காலத்தில் அம்மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அதற்காக கவனம் செலுத்த வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அதனூடான அவர்களின் மேன்நிலையாக்கத்தையும் தமிழ் தலைமைகளின்; மறுதலிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அவர்கள் கருதுகின்றனர்.
பிந்தியதாக தமிழ் தேசம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளுக்கு தீர்வாக தமிழ் தலைமைகள் கையிலெடுக்க தவறியுள்ள பிரச்சினைகளும் இப்போது சமுகமட்ட தலைமைகளின் கவனத்துக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.

இதற்கும் மேலாக தமிழ் தலைமைகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவசியம் அணுகித்தீர்க்க வேண்டியுள்ள விடயங்களை கிடப்பில் போடுவதற்கு வசதியாகவே இனத்துவநிலைப்பட்டு சிந்திக்க தாம் தூண்டப்படுவதாக அந்த மக்கள் உணரத்தலைப்படும் புதிய நிலமைகளும் இப்போது உருவாகியுள்ளன.

இந்த விவகாரம் இம்மக்கள் மத்தியில் செயற்பாட்டிலிருக்கும் சமுகமட்ட தலைமைகளின் மேலான கவனத்துக்குரிய விடயமாக இப்போது மாறியிருக்கிறது.
அதுமட்டுமன்றி தமிழ் தேசியம் தமிழ் தேசத்தின் நலனில் இருந்து அவசியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஏன் அக்கறை செலுத்தப்படவில்லை என்ற புதிய கேள்விகளும் இப்போது வெளிக்கிளம்பியுள்ளன.

அவை என்னென்ன என்பது குறித்தும் அவை அரசியல் அரங்கில் பிரதான பேசுபொருளாக்கப்பட வேண்டும் என்பது குறித்த அக்கறைகளும் அடிநிலைமக்களுக்கான அரசியலில் கவனத்துக்குரிய விடயங்களாக இப்போது மாறியிருக்கின்றன.
கூடவே இனத்துவ நிலைப்பட்டு தமிழ் மக்கள் சிந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்ட காலம்தொட்டு தமிழ் தேசத்தினுள் நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் சாதியம் பிரதேசவாதம், படிநிலை ஏற்றத்தாழ்வுகள், ஒரு தரப்பினரின் விருத்தியை மறுதரப்பினர் மறுதலிக்க முனையும் போக்கு என்பனவும் கிடப்பில்போடப்பட்டே வந்திருக்கின்றன.
இவற்றை கேள்விக்குட்படுத்துவதற்கு வசதியாக இனத்துவ நிலைப்பட்டு சிந்திப்பதற்கு பதில் சக இனங்களுடன் இணைந்த பயணத்தின் மூலம் அனைத்து இனங்களுக்கிடையேயும் நல்லிணக்கம், சகவாழ்வுக்கான புதிய சூழலை உருவாக்குவது அவசியமான பணியாக இப்போது உணரப்பட்டிருக்கிறது.

இனங்களுக்கிடையே உருவாகும் சகவாழ்வு;ககான பதிய நிலமைகளின் வழி அந்தந்த இனங்கள் மத்தியில் அவசியம் அணுகித்தீர்க்கப்பட வேண்டிய விடயங்களை வெளிக்கொணர்வதையும் சமத்துவத்துக்கான இயக்கம் தனது பிரதான நோக்கமாக கொண்டிருக்கிறது.
மேலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அணுகுவதற்கான ஏற்பாடாக தமிழ் சூழலில் செயற்பாட்டில் இருக்கும் சக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் மற்றும் சமுகப்பணி நிறுவனங்களுடன் இணைந்த பரந்த முன்னணியொன்றின் அவசியத்தையும் சமத்துவத்துக்கான இயக்கம் வலியுறுத்தி நிற்கின்றது.

Share:

Author: theneeweb