காஷ்மீர் விவகாரம்: பெரியாரும் அண்ணாவும் சொன்னது என்ன?

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை நீக்குவதற்கான மசோதாக்களை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. இதனை ஆதரிக்க, தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியாரும் சி.என். அண்ணாதுரையும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக என்ன கருதினார்கள்?

இந்த வாரத் துவக்கத்தில் காஷ்மீர் விவகாரம் பற்றியெரியத் துவங்கியபோது, காஷ்மீர் குறித்து பெரியார் கூறியதாக சில வாக்கியங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன.

அதாவது, “காஷ்மீர் விவகாரத்தைப் பற்றிப் பேசுவதற்கு நீங்கள் யார்? பாகிஸ்தானும் இந்தியாவும் யார்?

காஷ்மீரிகள் தங்களைப் பற்றித் தாங்களே முடிவெடுத்துக் கொள்வார்கள். தங்கள் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க நாம் அவர்களை விட்டுவிட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தை காஷ்மீரிகளின் கையில் விட்டுவிட வேண்டும். காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்பு முழுவதும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதுதான் காஷ்மீரிகளுக்கு நியாயம் வழங்குவதாக அமையும்” என காஷ்மீர் குறித்துப் பெரியார் கூறியதாக சொல்லப்பட்டது.

உண்மையில் காஷ்மீர் குறித்து பெரியார் என்ன கூறினார்?

காஷ்மீர் தொடர்பாக பெரியார் தனியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், வேறொரு விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது – அதாவது அம்பேத்கரின் பதவி விலகல் விவகாரம் பற்றிப் பேசும்போது – காஷ்மீர் குறித்து பெரியார் நடத்திவந்த ‘விடுதலை’ நாளேடு தன் நிலைப்பாட்டை முன்வைக்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான டாக்டர் பி.ஆர். அம்பேதகர் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த இந்து சட்டத் தொகுப்பு மசோதாவுக்கு அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அந்த மசோதாவை நிறைவேற்றாமல் ஒத்திவைப்பதென பிரதமர் ஜவஹர்லால் நேரு முடிவுசெய்தார். இதன் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் தனது பதவியை துறப்பதாக அம்பேத்கர் அறிவித்தார்.

இது தொடர்பாக 12.10.1951ல் பெரியாரின் விடுதலையில் தலையங்கம் ஒன்று வெளியானது. அதில் பதவி விலகலுக்கு அம்பேத்கர் கூறிய நான்கு காரணங்கள் பட்டியலிடப்பட்டன.

1. அரசாங்கத்தின் கொள்கைகளை வெளிநாட்டுக் கமிட்டி, உள்நாட்டுக் கமிட்டி போன்ற கமிட்டிகள்தான் உருவாக்குகின்றன. அதில் என்னைச் சேர்த்துக்கொள்வதில்லை. கொள்கைகளை உருவாக்குவதில் பங்கெடுத்துக் கொள்ளாமல், நிர்வாகத்தில் மாத்திரம் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது.

விடுதலை
Image caption விடுதலை

2. இந்து சட்டத் தொகுப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது எனக்கு இடி விழுந்தது போலாயிற்று. மசோதாவை முதல் மந்திரி ஆதரித்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஊக்கமும் உறுதியும் அவருக்கு இல்லை.

3. காஷ்மீர் பிரச்சனையில் நாம் சக்தி அனைத்தையும் வீணாக்கி வருகிறோம். காஷ்மீரை பிரிவினை செய்வதே சரியான தீர்வு என்பதே எனது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்து மற்றும் புத்த மதத்தினர் வாழும் பகுதியை இந்தியாவுக்கும் முஸ்லிம்கள் வாழும் பகுதியை காஷ்மீருக்கும் கொடுங்கள்.

விடுதலை
Image caption விடுலை: அந்த வரிகள்….

4. அமெரிக்காவின் உதவியை இந்தியா பெறுவதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தடையாக இருக்கிறது.

இதில் முதல் இரண்டு காரணங்களை ஏற்றுக்கொண்ட ‘விடுதலை’ அடுத்த இரண்டு காரணங்களை ஏற்கவில்லை. அமெரிக்க விவகாரத்தைப் பொறுத்தவரை, “கீழ்த் திசை நாடுகளை அடிமைப்படுத்த விரும்பும் அமெரிக்காவுக்கு சலுகை காட்டுவோமானால் அது இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பதாகவே முடியும்” என்று கூறியது.

பெரியார் படத்தின் காப்புரிமை FACEBOOK/DRAVIDARKAZHAGAM

காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, “அடுத்ததாக காஷ்மீரைப் பற்றி அவர் சொல்லும் யோசனையையும் நாம் ஒப்புக்கொள்ள முடியாது. காஷ்மீரைப் பற்றி முடிவுசெய்யும் விஷயத்தை காஷ்மீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காஷ்மீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும். பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு நீதி செய்வதாகும்” என்கிறது விடுதலை.

இதுதான் காஷ்மீர் விவகாரம் குறித்து திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு. ஆனால், இந்தத் தலையங்கம் பெரியாரால் எழுதப்படவில்லை. தலையங்கத்தை எழுதியவர் குத்தூசி சா. குருசாமி என்கிறது எஸ்.வி. ராஜதுரை தொகுத்த ‘பெரியார்: ஆகஸ்ட்’ 15 புத்தகம். இதைத் தவிர்த்து, காஷ்மீர் குறித்து பெரியார் தனியாக கூறிய கருத்துகள் எதையும் கண்டடைய முடியவில்லை.

அண்ணாவின் நிலைப்பாடு என்ன?

காஷ்மீர் விவகாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது திராவிடர் கழகத்தில் இருந்த சி.என்.அண்ணாதுரை, தான் நடத்திவந்த திராவிட நாடு இதழில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதினார். 1948 அக்டோபர் 17ஆம் தேதி ‘காஷ்மீரில் புதிய போர்’ என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரை, திராவிட நாடு இதழில் சுமார் மூன்றரை பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது.

திராவிட நாடு

அந்தக் கட்டுரை, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் என். கோபாலசாமி அய்யங்கார் காஷ்மீரின் திவானாக இருந்த காலகட்டத்தில் துவங்குகிறது. அந்த காலகட்டத்தில் காஷ்மீரின் ராஜாவாக இருந்த ஹரி சிங் மக்களைத் துன்புறுத்தியதாகவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி போராட்டம் நடத்தும்படி ஜவஹர்லால் நேரு ஷேக் அப்துல்லாவை வலியுறுத்துவதாகவும் கூறும் ஒரு கற்பனை உரையாடலில் இருந்து இந்தக் கட்டுரை துவங்குகிறது. பிறகு தொடர்ந்து, விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட நிலையில், ஷேக் அப்துல்லாவின் நடவடிக்கைகளை இந்திய அரசு எதிர்ப்பதை திராவிட நாடு கண்டிக்கிறது.

காஷ்மீர் படத்தின் காப்புரிமை Getty Images

குறிப்பாக, ஜாகிர்தார்களிடமிருந்து நிலங்களை உழவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஷேக் அப்துல்லாவின் முயற்சிக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது, நேரு ஜாகிர்தார்களின் பக்கம் இருந்ததாக திராவிட நாடு குற்றம்சாட்டுகிறது.

“படேலின் பிடியில் உள்ள சமஸ்தான இலாகா மக்களின் உரிமைகள், நலன்களைவிட மகாராஜாக்களின் சுகபோகத்தைக் காப்பதிலேயே அதிக அக்கறை செலுத்துகிறது. எனவே ஷேக் அப்துல்லாவைப் போன்ற சமதர்ம நோக்குடையவர்களின் போக்கை எதிர்க்கிறது. இப்போதுள்ள நிலைமை முற்றுமானால், ஷேக் அப்துல்லா பதவியை ராஜினாமா செய்ய வேண்டியும் நேரிடக்கூடும் என்று தெரிகிறது. மகாராஜா நீக்கப்பட வேண்டும் – அதிகாரம் மிக மிக குறைக்கப்பட வேண்டும். – சீமான்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் – சமதர்மத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் – என்பவை ஷேக் அப்துல்லாவின் திட்டங்கள்” என்றது திராவிட நாடு.

மேலும், “இன்று படேல் தர்பாரிலே காஷ்மீர் மகாராஜாவுக்கும் அவருடைய அலங்காரப் பொம்மைகளுக்கும் இடமும் செல்வாக்கும் கிடைத்திருக்கிறது. அப்துல்லா மீது சந்தேகமும் பழியும் சுமத்தப்பட்டுவருகிறது. அவருடைய மனக்குமுறல் ஓரளவுக்கு வெளிவந்திருக்கிறது. இதன் விளைவும் முடிவும் எவ்விதமிருக்குமோ? ஷேக் அப்துல்லா ராஜிநாமா செய்துவிடக்கூடும் என்ற எண்ணம் வலுத்துவருகிறது” என்று கட்டுரை முடிக்கப்பட்டிருந்தது.

திராவிட நாடு கட்டுரையில் காஷ்மீர் தொடர்பாக தெளிவான நிலைப்பாடு சொல்லப்படவில்லையென்றாலும் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது, ஷேக் அப்துல்லாவின் நிலைப்பாடு சார்ந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.

Share:

Author: theneeweb