(குடி)மக்களே மாட்டுப்படாதீர்கள் மரணப் புதைகுழிக்குள்?

 

எத்தனை தேர்தல்கள்?
எத்தனை ஒப்பந்தங்கள்?
எத்தனை வாக்குறுதிகள்?
எத்தனை தடவை என்னென்ன வடிவத்தில் போராட்டங்கள்? சாம-தான-பேத-தண்ட யுக்திகளெல்லாம் தோற்றுப் போய் ‘கையறு நிலைக்கு’ வந்து நிற்கும் குடிமக்கள் முன்னே தோன்றி நிற்கிறது இன்று ‘தேர்தல்’ என்னும் ‘கானல் நீர்’.
இந்தக் ‘கானல் நீர்’ தோற்றத்தை நிஜமென காட்டி மக்களை அடகு வைத்துப் பிழைக்கும் கும்பல்கள் இன்று தமது வழமையான கோசங்களுடன் மக்கள் முன்னே ஆரவாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். உண்மை, நீதி, நியாயம், மனிதநேயம் எதனையும் கண்டு கொள்ளாத, கருத்தில் எடுத்துக் கொள்ள விரும்பாத விளம்பர, வியாபார ஊடகங்கள் இந்த கும்பல்களின் பண ஆதிக்கத்திற்கு ஏற்றவாறு ‘ஒன்றை ஒன்பதாகவும் ஒன்பதை பத்தாகவும்’ சித்தரித்துக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
மக்களே, 1948ல் ‘சுதந்திரம்’ என்ற பெயரில் இலங்கைக் குடிமக்கள் கழுத்தைச் சுற்றி காலனித்துவ எசமானர்களால் போடப்பட்ட ‘ஜனநாயக(ம்)ச் சுருக்குக் கயிறு இன்று எமது தொண்டைக் குழியைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. இந்தச் சுருக்கை நாங்களாகவே இறுக்கப் போகிறோமா? அல்லது அதனை அறுத்தெறியப் போகிறோமா? என்பதை இந்தத் தேர்தல்தான் முடிவு செய்யப் போகிறது.
1947ல் இலங்கையில் தொடக்கி வைக்கப்பட்ட ஜனநாயகத் தேர்தல் நடைமுறை அதன் ஒவ்வொரு தேர்தல் முடிவுகளின் பின்னரும் அன்றைய அரசியல் யாப்பை உதாசீனம் செய்தபடியே நாட்டின் ஜனநாயக விழுமியங்களை படிப்படியாக இழக்கச் செய்து வந்துள்ளது. ஆளும் தரப்பினருக்கு ஒரு நீதி. ஆளப்படும் தரப்பினருக்கு ஒரு நீதி என்றே இருந்து வந்துள்ளது. இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது. கடந்த 72 ஆண்டுகளாக(1947 முதல்) ஆட்சிக்கு வந்தவர்கள் எவரும் குடிமக்களின் தலைவர்களாக, இலங்கை நாட்டின் தலைவர்களாக அமைந்திருக்கவில்லை. மாறாக சிங்கள பௌத்த மக்களின் தலைவர்களாகவே இருந்து வருகிறார்கள். இலங்கையின் தலைவர்களாக அவர்களால் செயற்பட முடியவில்லை. காரணம் அவர்கள் தலைவர்கள் என்னும் தோல் போர்த்த ‘தரகர்களே’. காலனித்துவ எசமானர்களுக்கு சேவகம் செய்யும் ‘எடுபிடிகளே’. அந்நிய எசமானர்களுக்குத் தமது விசுவாசத்தை நிரூபிக்க செயற்படும் ‘கங்காணிமார்களே’.
இதனை இலங்கையின் கடந்த கால வரலாறு நிரூபித்துள்ளது. 1971லும் 1988-89லும் தெற்கிலும் 1983-2009ல் வட கிழக்கிலும் அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டும் கூட ‘இலங்கை ஒரு ஜனநாயக நாடு’ என்றே சர்வதேசம் கூறுகிறது.
அரச உளவுப் படையினரால் கடத்தப்பட்டோர்,  இராணுவத்திரால் உறவினர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டோர், அரச படையினரிடம் சரணடைந்தோர் என ஆயிரக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டும் கூட ‘இலங்கையில் ஜனநாயக ஆட்சி உள்ளது’ என்றே சர்வதேசம் ஏற்றுக் கொள்கிறது.
உறுதியான சாட்சியங்கள் காணப்படும் படையினர் தொடர்பான பல கடத்தல், சித்திரவதை, கொலை தொடர்பான வழக்குகள் அரசியல் தலையீடுகள் காரணமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் சர்வதேசம் இலங்கையை ஒரு ஜனநாயக நாடாகவே மதிப்பிடுகிறது.
இலங்கையில் சர்வதேசம் ஆயுத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, வேண்டுமென்றே திட்டமிட்டு நாட்டில்  ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்தை’ உருவாக்கி விட்டுள்ள ஆட்சியாளர்களை ‘ஜனநாயகவாதிகள்’ என்றே சர்வதேசம் அங்கீகரித்துள்ளது.
இந்த வகையான ஜனநாயக நடைமுறையில் அடுத்த தேர்தலில் யார் ஜனாதிபதியானாலும், எவர் ஆட்சியைப் பிடித்தாலும் மக்களுக்கு கிடைக்கப் போவது அடக்குமுறை, அரச வன்முறை, கொலை, கைது, சிறை, பசி, பட்டினி, சாவு ஆகியவையே. ‘ஜனநாயகப் புரட்சி’ என்று புகழாரம் சூட்டப்பட்ட ‘நல்லாட்சி’ பதவிக்கு வந்து ஐந்தாவது ஆண்டாகிறது. சாதித்தது என்ன? ஒன்றே ஒன்றுதான். முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர்களைப் பாதுகாத்துள்ளதுடன். அடுத்த தேர்தலில் மீண்டும் அதே கொடுங்கோல் ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் நாட்டின் நிர்வாகத்தை நடாத்தியதுதான்.
நாட்டில் வீதித் தடைகள் இல்லை. சோதனைச் சாவடிகள் இல்லை. யாரும் எங்கும் போய் வரலாம்;.  எவரும் எதுவும் பேசலாம். வெள்ளை வான் கடத்தல் இல்லை. எனவே ‘நல்லாட்சி’யின் நன்மைகள் இவைகள் என்று ஒரு வாதம் வைக்கக் கூடும்.
ஆனால் பல ஆண்டுகளாக வழக்குத் தாக்கல் செய்யாமல் ஒருவரை சாகும் வரை சிறையில் வைத்திருப்பதும் பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்கள் கொல்லப்படுவதும் பொலிசாரின் வார்த்தைகளை மட்டும் நம்பி ஒருவரை விசாரணைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்புவதும் ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை’(PTA) தொடர்ந்து வைத்திருப்பதற்கான சூழ்நிலைகளை ஆட்சியாளர்களே உருவாக்குவதும் அச்சட்டத்தை நீக்குவதாகக் கூறி ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை’ (CTA)அமுலாக்க முற்படுவதும் ஜனநாயகம் ஆகாது. 
பாடப் புத்தகங்களில் இனவாதத்தை பதித்து வைத்துக் கொண்டு பாடம் புகட்டும் நாட்டில், ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்கும் நாட்டில் ஜனநாயம் இருக்க முடியாது. சட்டத்தை மீறுவோரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தனுப்பி அவர்களைக் கொண்டு நாட்டின் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவது ஜனநாயகம் ஆகாது. குற்றமிழைத்த அரச படையினருக்கு மன்னிப்பு அளித்து சலுகைகள் வழங்குவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
நாட்டில் எந்தக் கட்சியுமே ‘ஜனநாயக விழுமியங்களுடன்’ இயங்கவில்லை. மக்களுக்கும் ‘ஜனநாயகம்’ பற்றிய புரிதலும் இல்லை. அதனைப் பற்றிய அக்கறையும் கிடையாது. ஜனநாயகம் புரியாத மக்கள் எப்படி ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த முடியும்? சமயக் குருமார் கால்களைத் தொட்டு கும்பிடும் தலைவர்கள்  உள்ள ஆட்சியில் ஜனநாயகம் எப்படித் தளைக்கும்? சுதந்திர ஆணைக் குழுக்களை ஏற்படுத்தலாம். சட்ட திட்டங்களை வரையலாம். அரசியல் யாப்பினை நிறைவேற்றலாம். ஆனால் அவற்றை மதிப்பவர்களை, அவற்றின் பிரகாரம் செயற்படுபவர்களை மக்கள் தெரிவு செய்யாவிட்டால் ஜனநாயகம் நடைமுறைக்கு வராது.
குடிமக்களே!
இலங்கையில் ஜனநாயகம் என்பது “ஒரு சிலருக்காக ஒருசிலர் ஒரு சிலரைக் கொண்டு நடாத்தப் படும் ஆட்சிமுறை” ஆகும். அதன் தொடர்ச்சி தான் எதிர்வரும் தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் நீங்கள் போடப் போகும் வாக்குகள் உங்களுடைய எதிர்காலத்தை மட்டுமல்ல உங்களின் வருங்கால பல தலைமுறைகளின் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகிறது. வழமை போல ‘மாற்று அணி எதுவும் இல்லை. எனவே உள்ள பிசாசுகளில் நல்ல பிசாசுக்கே போடுவோம்’ என்று முடிவு செய்தீர்களானால் உங்களுக்கும் உங்களது சந்ததியினருக்கும் நீங்களே குழி பறித்தவர்கள் ஆவீர்கள். 
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ல் இடம் பெற்ற குண்டு தாக்குதலுக்கான காரணங்கள் முன்னாள் ஆட்சியாளர்களினதும், இந்நாள் ஆட்சியாளர்களனதும் செயற்பாடுகளில் அடங்கியிருப்பதாகவே இதுவரை வெளிவந்த விசாரணைகள், செய்திகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ‘இனவாத வீச்சு’ குறைந்து ‘மத வெறி’ வீச்சு மேலோங்கி நிற்கிறது. 
காலங்காலமாக எமது நாட்டில் உருவாக்கம் பெற்ற அரசியல் கட்டமைப்புகள் ஒடுக்கப்படும் மக்கள் ஓரணியாகத் திரளக் கூடாது என்பதற்காகவே இயங்கி வருகின்றன.
அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளருடன் பேரம் பேச ஆங்கில கல்வி பயின்று, பட்டங்கள் பெற்று, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கீழ் பதவி பெற்றிருந்த கனவான்கள் அன்றைய அரசியல் சூழ்நிலையில் ஆங்கில எசமானர்களுடன் பேரம் பேசுவதற்காக நாட்டில் உள்ள சகல இனங்களையும் உள்ளடக்கியதாக (11 மார்கழி 1919ல்) ‘இலங்கைத் தேசிய காங்கிரஸ்’(Ceylon National Congress) என்ற கட்டமைப்பை உருவாக்கினர். ஆங்கலேயர் ஆட்சியை சுதேசிகளிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அறிந்த போது அது சிங்களம் – தமிழ் எனப் பிளவு பட்டது. பின்னர் முதலில் தமிழ் பிரிவு இரண்டாகவும் அடுத்ததாக சிங்களப் பிரிவு இரண்டாகவும் உடைந்தன. இன்று சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் மத்தியில் பல கட்சிகள். ஓவ்வொன்றும் தாங்கள் சார்ந்த மக்களுக்குச் சேவை செய்வதாகக் கூறி செயற்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் அந்தந்த கட்சிகளாலேயே சுரண்டப்பட்டு அரசியலில் பகடைக் காய்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பயணத்தில் கட்சிகளை விமர்சனம் செய்தபடி முளைத்து வளர்ந்த ஆயுதப் போராட்ட வரலாற்றிலும் தொடங்கப் பட்ட அமைப்புக்கள் ஒவ்வொன்றும் பலவாறாக உடைந்து இறுதியில் எதுவுமே இல்லாமல் போனது நாம் கண்ட நிதர்சனம்.
இலங்கை அரச நிர்வாகம் இன்று சர்வதேச சமூகத்தின் கடன் உதவியில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. கட்சிகளும் வெளிநாட்டு நிதி வளத்தில் தான் இயங்குகின்றன. சுதேசிகளாக சிந்தித்து நாட்டையும், அதன் குடிமக்களையும் கணக்கில் எடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் அரசியல் செயற்பாடு நாட்டில் இல்லை. மாறாக குடிமக்களிடையே சந்தேகங்களையும், அச்ச உணர்வுகளையும், மோதல் கொதி நிலைமைகளையும் உருவாக்கி வைத்தபடி தேர்தல் வெற்றிகளுக்காக வெறுப்புணர்வுகளை ஊக்குவித்தபடி ஆளும் வர்க்கம் இன்று ஆர்ப்பரித்து நிற்கிறது. 
ஆம். இந்தத் தடவை வரப் போகும் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்ப் பேசும் மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? இத் தேர்தலில் அவர்களின் வகிபாகம் யாது? அவர்கள் தமது வாக்குகளை எதற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள்? நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் இரு பிரதான சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளுக்குத் தான்(வழமைபோல்) போடப் போகிறார்களா? போட வேண்டிய கட்டாயம் உள்ளதா? அல்லது மாற்று வழி பற்றி ஏதும் சிந்திக்கிறார்களா? அப்படி மாற்று வழி ஏதும் உண்டா?
அண்மைக் காலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதிகம்? தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் அதிகம்? தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி முன்னேற்றம்? என்றும், யார் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு(தமிழ்ப் பேசும் மக்களுக்கு அல்ல)அதிகாரப் பகிர்வு கிடைக்கும்?  என்பன போன்ற பல வகையான புள்ளி விபரக் கணக்குகளைச் சுமந்தபடி சகல உதிரிக் கட்சிகளும் வாக்கு வேட்டைக்கு கிளம்பியுள்ளனர். வாக்கு வேட்டைக்கு வசதியாக  சந்திப்புகளும், அணி சேர்க்கை ஒப்பந்தங்களும் இடம் பெற்று வருகின்றன. அறிக்கைகளும், மறுப்பறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன. அடுத்த ஜனாதிபதி எந்த ஏகாதிபத்திய சக்திக்கு சார்பானவராக அமைவார்? எந்த வேட்பாளர் எந்த வெளிநாட்டு சக்திக்கு தோதானவர்? என்றெல்லாம் ஊடக விவாதங்களும், விளம்பரச் செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் வாக்குப் பலத்தை எப்படி எதற்காக பயன்படுத்தப் போகிறீர்கள்? வேட்பாளர்களின் வாக்குறுதிகள், ஒப்பமிடப்படும் ஒப்பந்தங்கள் யாவும் பதவிக்கு வரும் வரை தான். எவருக்கு வாக்களித்தால் என்ன கிடைக்கும் என்று பார்த்து முடிவு செய்யப் போகிறீர்களா?  பதவியில் அமர்ந்ததும் ‘வாய்க்கரிசி’ தான் மிஞ்சும் என்பதே நாம் கண்ட அனுபவம்.
அடுத்து வர இருப்பது இலங்கையின் 8வது ஜனாதிபதிக்கான தேர்தலாகும். இதுவரை பல உறுதிமொழிகளுடன் வெற்றியீட்டி பதவியில் இருந்த எவரும் இலங்கையின் சாதாரண குடிமக்கள் நலன் கருதி செயற்படவில்லை. இனப் பிரச்சனையை காரணம் காட்டி சகல இன மக்களையும் ஏமாற்றியே செயற்பட்டுள்ளனர். இத் தேர்தலில் இனச் சிக்கலை மூடி முறைக்கும் வகையில் சமய உணர்வுகளை கிளறிவிட்டு ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்கிற விதமாக அரசியல் தந்திரோபாயத்தை கையாளுகின்றனர்.
இது சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளால் இலங்கையின் சிறுபான்மை இனங்களான மலையக – தமிழ் – இஸ்லாமிய  மக்களுக்கு திட்டமிட்டு வைக்கப்படும் மரணப்பொறி ஆகும். இதற்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஏகோபித்த ஆதரவு பின்புலத்தில் உண்டு. இதற்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் ‘அவலை நினைத்துக் கொண்டு வெறும் உரலை இடிக்கிற’ கதையாக செயற்படுவதன் ஊடாக மக்களை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்கிறார்கள். தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் வீராவேச உரைகளும் சாதாரண சிங்களக் குடிமக்களை பேரினவாதிகளின் பின்னால் அணி திரளுவதற்கே வழிவகுக்கிறது. தலைவர்கள் யாவரும் தங்கள் தங்கள் இருப்பை தக்க வைத்து அதனைப் பாதுகாப்பதற்கான முனைப்புடனேயே செயற்படுகின்றனர்.
‘தேசிய இனம்’,  ‘தேசம்’, ‘பாரம்பரியப் பிரதேசம்’ என்ற அடிப்படையில் ஒரு காலத்தில் ஒரு ஆயுதப் போராட்டமே நடாத்தப்பட்டது. அது தோல்வியில் முடிந்ததற்கான ஒரேயொரு காரணம் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக வாழவில்லை. தேசிய இனம் என்பதற்கான அடிப்படை அத்தியாவசிய வாழ்க்கை நடைமுறைகளை கொண்டிருக்கவில்லை. மொழி ஒன்றைத் தவிர மக்களை ஒன்றிணைக்கின்ற ஒரு பொதுவான சமூகப் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை. தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற தார்மீக ஆத்மாவைக் கொண்டிருக்கவில்லை. ஒரு தேசிய இனத்திற்கான மூலகூறுகளை, பின்னல் இழைகளை, சமூகக் கட்டுமானங்களை வைத்திருக்கவில்லை. 
உடல் வருத்தித் தன் சுய உழைப்பினால் உயர்ந்த ஒரு ‘தமிழன்’ தனது பாரம்பரியத் தாய் மண்ணில், தனது தேசத்தில் சொந்த வீடு கட்ட ஒரு துண்டு நிலம் வாங்க முடியாது. கல்வித் தகைமைகள் எவ்வளவு பெற்றாலும் உயர் பதவிகளில் அமரமுடியாது. தான் நம்பும் கடவுளைக் கோயில் ஓரத்தில் நின்று தான் கும்பிட முடியும். அப்படியானால் அவனுக்கும் தேசத்திற்கும் என்ன சம்பந்தம்? தேசியத்திற்கும் அவனுக்கும் இடையிலான உறவு யாது? தேசியம், தேசம் என்று கதையாடல் செய்தவர்களும், செய்பவர்களும் வாழ்கிறார்கள். அதனை நம்பி தேசத்தை மீட்கச் சென்றவர்கள் அனைவரும் போராடி மடிந்தார்கள். அதுதான்  உண்மை. அது தான் வரலாறு.
எனவே வழமையான இந்த பரம்பரைப் பாரம்பரிய அரசியல் போக்கை தடுத்து நிறுத்தவும் சகல இனவாத அரசியல் வாதிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம்(அவர்கள் மனநோயாளர்கள் என்பதால்) அளிக்கவும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை வேரோடு சாய்க்கவும் இத்தேர்தலை நாம் பயன்படுத்துவோமாக.
ஆம். இம்முறை நாம் எமது சுய அறிவைப் பயன்படுத்துவோமாக. முதலாவதாக நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளையும் நிராகரிப்போம். இந்த இரு கட்சிகளுமே சிங்களக் குடிமக்களை ஏமாற்ற ‘பௌத்த மதப் பாதுகாப்பு’ ‘தமிழர்களின் அச்சுறுத்தல்’ என்ற இரண்டு மந்திர உச்சாடனங்களையே பாவித்துத் மாறி மாறித் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறார்கள். இது வரை இலங்கையின் தலைவர்களாக (பிரதமராகவோ – ஜனாதிபதியாகவோ) தெரிவானவர்கள் யாவருமே சகல சமய மக்களினதும் வாக்குகளையும் பெற்று பதவிக்கு வந்திருந்தாலும் வெற்றி பெற்றவுடன் செய்யும் முதல் செயற்பாடு உடனே கண்டிக்கு ஓடிப் போய் பௌத்த மதத் தலைவர்களின் காலைத் தொட்டு வணங்குவதேயாகும்.
அது மட்டுமல்லாமல் அண்மைய ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னால் நடைபெற்ற பல சம்பவங்கள் மதவாதிகள் அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் பலம் பெற்றுள்ளதையும், இலங்கையில் பௌத்த குருமார் நாட்டின் சட்ட திட்ட ஒழுங்கு முறைகளுக்கு விதிவிலக்கானவர்கள் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
இந்நிலையில் இவ்விரு கட்சிகளையும் தவிர்ப்போம். “சட்டத்தின் முன் சகலரும் சமன்.” என்பதை கூட மதிக்காத கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இம்முறையும் நாம் வாக்களித்தோமானால் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிகளுக்கும் சவக்குழி பறித்தவர்கள் ஆவோம். 
எனவே இம்முறை ஏனைய வேட்பாளர்களின் மத்தியில் இருந்து ஒருவரை,
 “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்  அப்பொருள்  
  மெய்ப்பொருள் காண்ப தறிவு” 
என்னும் வள்ளுவனார் கூற்றின் படியே நன்கு ஆராய்ந்து, அலசிப் பார்த்து எமது மனச்சாட்சிக்கு சரியென தோன்றுகின்ற ஒருவருக்கு வாக்களிப்போமாக. இதில் நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. மாறாக நிச்சயம் அரசியல் போக்குகளில் மாற்றம் ஒன்று ஏற்படும். தரகர்களும், ஒப்பந்தக்காரர்களும் தடுமாற்றம் அடைவர். இந்த வகையான வாக்களிப்பால் நாட்டில் தோற்றம் பெறும் புதிய அரசியல் சூழல் சாதாரண சிங்கள மக்களை சிந்திக்க வைக்கும். தாங்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வந்ததை உணர வைக்கும். அப்போது தான் சகல வாதங்களுக்கும், வாதிகளுக்கும் பின்னால் இருப்பது ஒரு சிலரின் ‘சுகபோகமே’ என்பது தெளிவாகத் தெரியவரும். தெற்கு வடக்கைத் தேடும். வடக்கு தெற்கை நாடும். அதனூடகவே இலங்கையில் (இன)வாதிகள் அகற்றப்படுவர். (மத)வாதங்கள் இல்லாதொழியும். மக்கள் மக்களை மனிதராக நோக்குவர். வெறுப்பு பகை – பழிக்குப் பழி அரசியல் மறைந்து நாடளாவிய வகையில் பொதுவான, பொறுப்பான சிந்தனைகள் பிறக்கும். அதனடிப்படையில் இலங்கை நாடு தனது இறைமையை சுதந்திரத்தை இழக்காமல் தலை நிமிர்த்தி நின்று சபீட்சத்தை நோக்கி வீறுநடை போடும்.
இந்த வழி ஒன்றே ஒன்றுதான் இலங்கைத் தமிழ் மக்களை என்றென்றும் காப்பாற்றி வாழவைக்கும்.
Share:

Author: theneeweb