பயங்கரவாதம் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

நாட்டில் அடிப்படைவாத பயங்கரவாதம் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமை பதவி எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸினால் தலைவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பின் பின், உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, இந்த அரசாங்கம் சகல மதங்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மதத்தினதும் தர்மத்துக்கு இந்த அரசாங்கம் கட்டுப்படவில்லை.

எமது இழைத்த அநீதிக்கு நாங்கள் வைராக்கியம் வைப்போம் என எண்ணிணார்கள்.

எனினும் வைராக்கியம் வைப்பதற்கு ஒன்றும் இல்லை என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;.

இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றினார்.

இதன்பின்னர், உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ, அன்று நாட்டுக்காக எனது பொறுப்புகளை நிறைவேற்றும்போது, எந்தவொரு வெளியக சக்திகளும் அதற்கு தடையேற்படுத்துவதற்கு தான் இடமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனது நாட்டை எதிர்பவர்களுக்கு நான் ஒருபோதும் தலை வணங்கியதில்லை.

எதிர்காலத்திலும் எனது தாய் நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.

இன்று இந்த நாட்டுக்கு, எதிர்காலம் தொடர்பாக நோக்குகை உள்ள, நாட்டின் அபிவிருத்திக்கு திட்டமொன்று உள்ள, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றல் உள்ள ஒழுக்கமுடைய, ஊழல்களற்ற மக்கள் நேயத்துடனான, நாட்டுப்பற்றுடைய தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.

ஒரு ஜனாதிபதியிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது அவ்வாறான தலைமைத்தவமாகும்.

மக்கள் எதிர்பார்க்கும் தலைமைத்துவத்தை அளிக்கும் ஆற்றல் எனக்குள்ளது என்பதை நான் தற்போதும், எனது செயற்பாடுகள்மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன்.

எமது அரசாங்கத்தின் முதலாவது கடமைப் பொறுப்பு யாதெனில் நாட்டில் பூரண பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாகும்.

மீண்டும் இந்த நாட்டை உலகத்தில் பாதுகாப்பான நாடாக உருவாக்க முடியுமென நான் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றேன்.

உங்களதும், உங்களது பிள்ளைகளதும் பாதுகாப்பின் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

பௌத்த தத்துவ கோட்பாட்டினுள் எமக்கு, எல்லா சமயங்களுக்கும் கௌரவமளிக்கும்படி கற்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த எழுத்திலான வரலாற்றினைக் கொண்டுள்ள எமது நாட்டில் பல்வேறு இனத்தவர் வாழ்கின்றார்கள்.

அவர்கள் பல்வேறு சமயங்களை பின்பற்றுகின்றனர்.

நாம் எப்போதும் ஒவ்வொருவரினது சமயத்திற்கு கௌரவமளித்து, ஒவ்வொருவரினது கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளித்து நற்புறவுடன் வாழ்ந்த இனமாகும்.

எமது பலமாக அந்த ஒற்றுமை இருத்தல் வேண்டும்.

இந்த தாய் நாட்டில் பிறக்கும் எவரொருவரும் அச்சமோ, சந்தேகமின்றி வாழக் கூடியதான, பாதுகாப்பான சூழலை மீண்டும் கட்டியெழுப்புவேன் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

நான் ஒருபோதும் தீவிரவாத பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டேன்.

அதே போன்று வடக்கு மக்களுக்கு தேவையான, விசேடமான எதிர்பார்ப்புகள் பற்றி எமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது.

அவர்களின் இந்த பிரச்சினைகளை எமது அரசாங்கத்தால் உறுதியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

2015 – 2014 ஆகிய காலப் பகுதிகளில் மகிந்த சிந்தனை கொள்கையின்கீழ் எமது நாட்டில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டது.

தற்போது நாம் அதிலிருந்து நாட்டை முன்கொண்டுச் செல்லுதல் வேண்டும்.

அதற்காக தற்கால உலகளாவிய பொருளாதார செல்நெறிகளுடன் எனது நோக்கினை ஒன்றிணைத்து எதிர் காலத்திற்கு தேவையான, புதிய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து அவர்களின் ஆதரவாளர்களால் நாட்டின் பல பாகங்களில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb