மஹிந்தா தரப்பை தமிழர் ஆதரிப்பரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்க்ஷவும் தமிழ் ஊடகங்களுக்குத்  தாராளமாகப் பேட்டிகள், செவ்விகள், செய்திகள் வழங்குகின்றனர்.

இது தேர்தல் காலம். வழமையாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசும் சமயம். மஹிந்தவும் கோட்டாபயவும் என்ன விதிவிலக்கா? அவர்களும் தம்பாட்டில் வாக்குறுதிகளை அள்ளி வீசத்தானே செய்வர்…?

தங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் இரண்டு வருடங்களில் தீர்வு என்கின்றார் மஹிந்தர். இது ஒன்றும் புதிய வாக்குறுதியல்ல. ஆறு மாதங்களுக்கு முன்னர்காலைக்கதிர்நாளிதழுக்கு அவர் கூறிய செய்திதான்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு இரண்டு வரு டங்களில் தீர்வு என்ற அவரது வாக்குறுதியை இலகுவாக நம்புவதற்குத் தமிழர்கள் தயாரில்லை என்பதுதான் நிலைமை. அப்படி அவர்கள் நம்பாமல் இருப்பதற்குப் பல நியாயங்கள் உண்டு.

2005 நவம்பரில் முதன்முதலாகத் தாம் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த போது மஹிந்த  வழங்கிய வாக்குறுதிகளைத் தமிழர்கள் மட்டுமல்லர், முழு நாடுமே அறியும். ஒரே ஒருமுறை ஜனாதிபதியானதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்று தொடங்கி, அச்சமயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் வழங்கிய வாக்குறுதிகள் பலப்பல.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அப்போது மஹிந்த ராசபகஷவை நம்பியதார்த்தவாதிஎன்று தமது மாவீரர் தின உரையில் அவரைப் புகழ்ந்துரைக்கத் தவறவில்லை.

ஆனால், மக்களுக்கு வாக்குறுகி அளித்து ஏமாற்றுவதுதான் அரசியல்வாதிகளின் யதார்த்தப் போக்கு என்பதை எவரும் அப்போது உய்த்துணர்ந்திருக்கவில்லை. அதைத் தான் உறுதிப்படுத்தினார் மஹிந்தர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து, அதன் அடிப்படையில் ஆட்சிப் பீடம் ஏறிய மஹிந்தர், அந்த முறைமையைமேலும் உறுதிப்படுத்தும் அரசியல் வேலைகளைத்தான் செய்தார். தனது வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் தாம் தொடர்வதற்கான ஏற்பாடுகளை நிலைப்படுத்தினார்.  இப்போது அவரும், அவரது சகோதரர் கோட்டாபய ராசபகஷவும் தீர்வு குறித்துப் பேசுகின்றார்கள்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படை ஏற்பாடுகளை – உயிர்ப்பான சரத்துக்களை – அடியோடு நிராகரித்து விட்டு அவர்கள் “13 பிளஸ்குறித்துப் பேசுவது மிக மிக வேடிக்கையாகும்.

தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகியனவே அதிகாரப் பகிர்வின் மிகமிகப் பிரதான விடயங்கள். அவற்றை அடியோடு நிராகரித்துவிட்டு அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் பேசுகின்றமை அரசியல் கோமாளித்தனமின்றி வேறில்லை.

வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்கனவே உயர்நீதிமன்றம் மூலம் துண்டாக்கச் செய்து, பிளக்கப் பண்ணி விட்டாயிற்று. அவற்றை மீளச் சட்டரீதியாக இணைக்கும் அதிகாரம் கொழும்பு அரசுக்கு இருந்தும் அது, இப்போதைக்கு அதைச் செய்யப் போவதேயில்லை என்பது திண்ணம்.

மாகாணங்களுக்குப் பகிர வேண்டிய 13  ஆவது திருத்தத்தின் கீழ் பகிர்வதற்கு இணங்கி இலங்கை அரசு சட்டமாக்கியது காணி அதிகாரப் பகிர்வாகும்.

அவ்வாறு காணி அதிகாரம் மாகாணங்களுக்கு பகிரப்பட்டு விட்டதாக அரசமைப்பில் இப்போது எழுதப்பட்டிருந்தாலும் அரசு அதனை நடைமுறைப்படுத்தவே இல்லை. அந்தக் காணிப் பகிர்வு அதிகாரத்தை மாகாணங்களுக்கு விட்டு வைக்கும் எண்ணம் தமக்கு அடியோடு இல்லை என்பதை கோட்டாபய ராசபகஷ ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.

காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அது குந்தகமாகி விடும் எனப் புதுஅரசியல் வியாக்கியானத்தை வேறு, கோட்டாபய முன் வைத்து வருகின்றார்.

இந்தச் சூழலில் கோட்டா – மஹிந்த அணி அதிகாரத்துக்கு வந்தால் காணி அதிகாரம், இணைப்பு ஏதும் சாத்தியப்படப் போவதில்லை என்பது தெளிவு.

பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரை அது, முழு மாகாணத்துக்கும் வழங்கப்படுகின்றமையை மஹிந்த – கோட்டா தரப்பு ஏற்கவே இல்லை.சமூகப் பொலிஸ்‘ (Community Police) என்ற அடிப்படையில் கிராம ரீதியாக ஒரு  செரீப் தலைமையில் சில குழுக்கள், குழுக்களாக மாகாணத்தின் கீழ் பொலிஸ் இயங்கலாம் என்பதுதான் அவர்களின் தீர்மானம். அதாவது மாகாணங்களின் கீழ் வலுவான ஒரு பொலிஸ் கட்டமைப்பு அமைவதற்கு அவர்கள் இடமளிக்கமாட்டார்களாம்.

இத்தகைய கொள்கைச் சீத்துவத்தில் அமையும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தரப்பை இத்தேர்தலில் தமிழர்கள் ஆதரிப்பது என்பது துர்லபமே. அது பெரும்பாலும்
சாத்தியமேயற்றதுதான்.(காலைக்கதிர் – நமது பார்வை 12-08-2019)

Share:

Author: theneeweb