நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய நடவடிக்கை

பேராசிரியர் என்.எம். பெரேராவின் 40 வது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட நினைவேந்தல் நிகழ்வு ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது.

ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள அவரின் உருவச்சிலைக்கு அருகாமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, கருத்து தெரிவித்த புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க, என்.எம். பெரேரா நாட்டிற்கு சிறப்பான பல சேவைகளை நிறைவேற்றியவர் என குறிப்பிட்டார்.

சுமார் 30 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக சேவை புரிந்த அவர், நிதி அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன, என்.எம் பெரேராவின் கொள்கைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதேபோல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு எதிர்வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb