ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்

 

எல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார். ராஜபக்ஸ குடும்பத்திலிருந்து இன்னொரு வலுவான முகம் அரசியலுக்கும் அரசியலதிகாரத்துக்குமாக இறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகாரத்தின் மையத்தில் கோத்தபாய இருந்தாலும் மக்கள் ஆதரவைப் பெற்று அரசியலதிகாரத்தோடு இருக்கவில்லை. இப்பொழுது மக்கள் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானபோது நாடு முழுவதிலும் வெடி கொழுத்தி ஆரவாரம் செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிக்கான வெடியா இல்லையா என்பதைத் தேர்தல் முடிவின்போது தெரிந்து விடும்.

ஆனாலும் ராஜபக்ஸக்கள் எளிதில் தோல்வியை ஒப்புக் கொள்வதுமில்லை. தோற்று விடுவதுமில்லை. 2015 இல் ஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது தோல்வியைச் சந்தித்த மகிந்த ராஜபக்ஸ, தளர்ந்து போய்  வீட்டுக்குச் செல்லவில்லை. பல படிகள் இறங்கிப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சாதாரண உறுப்பினராகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

அங்கிருந்து கொண்டே காய்களை நகர்த்தி மேலும் கீழுமாகப் போரிட்டு எதிர்கட்சித் தலைவரானார். அப்படியே சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் ஒரு பகுதியினரைப் பிரித்தெடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளையும் இணைத்து பொதுஜன பெரமுனவை உருவாக்கினார். இப்பொழுது அதற்குத் தலைவருமாகியும் விட்டார்.

மேலும் சொல்வதென்றால், 2014, 2015 களில் ராஜபக்ஸக்கள் இந்த நாட்டின் விரோதிகள், துரோகிகள், ஊழல் பேர்வழிகள் என்றெல்லாம் சித்தரித்துப் பலமான எதிர்ப்புப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களிலும் கணிசமானோர் ராஜபக்ஸக்களை நிராகரித்தனர். இதனால்தான் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வர முடிந்தது.

2015 இல் ஆட்சி மாற்றம் நடந்தபோது ராஜபக்ஸக்களின் கதை முடிந்தது. இனி அது சிறைக்கூடங்களில்தான் கழியும் என்றெல்லாம் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிறகு அப்படி எதுவுமே நடக்கவில்லை. தொடக்கத்தில் இந்த அந்தா என்ற மாதிரி ஏதோ சாட்டுக்கு கைதுகளும்  நீதிமன்றத்தில் வழக்குகளும் என்று ஏதோ சில காட்சிகள் நிகழ்ந்தன. பிறகு அதற்கெல்லாம் என்ன ஆனது என்று யாருக்குமே தெரியாது.

பதிலாக ராஜபக்ஸக்கள் மெல்ல மெல்ல முன்னேறி வலுவடைந்தனர். இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையை எட்டியிருக்கிறார். பஸில் ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகி உள்ளார். நாமல் ராஜபக்ஸ கிளிநொச்சி வரை பயணித்து முன்னாள் போராளிக்கு வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஸ அடுத்ததாக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வந்திருக்கிறார்.

ஆகவே ராஜபக்ஸக்கள் எளிதில் தோற்பதுமில்லை. தோற்கடிக்கப்படக் கூடியவர்களுமில்லை என்பதே உண்மையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிரதானமான காரணம், எதிர்த்தரப்புகளின் பலவீனமாகும்.     

இதைப்பற்றித் சமூக ஆர்வலரான தங்கராஜா தவரூபன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பது நம் கவனத்திற்குரியது. 

“ஐந்து  வருசமா கோத்தாவை பொத்தி வைச்சு பொது ஜன பெரமுனவுக்கு காப்பற்றிக்கொடுத்ததில் ரணிலுக்கும் பெரும் பங்குண்டு. கூட்டமைப்புக்கும் பங்குண்டு. மனோ கணேசன் கட்சி உள்ளிட்ட சகல பங்காளிக்கட்சிகளுக்கும் பங்குண்டு . யாவரும் முண்டு கொடுத்தவர்களே. மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள், என்ன காரணத்துக்காக கடந்த ஆட்சியை குறைகூறி மைத்திரியை கொண்டு தேசிய அரசை ஏற்படுத்தினீர்களோ அதைச் செய்தீர்களா?

எங்கள் தலையில ஐந்து வருசமாக இந்தா அந்தா என்று மிளகாய் அரைத்து விட்டு இப்பொழு வீர வசனம் பேசுவது கேவலமில்லையா?

தமிழ் மக்களை விடுங்கள், லசந்தவுக்கேனும் அந்த ரக்பி வீரனுக்கேனும் உங்களால் நீதி வழங்க முடிந்ததா? சிங்கள மக்களுக்கே உங்களால் நீதி வழங்க முடியவில்லையே.

சாதாரண வழிப்பறிக்கொள்ளையரை அன்றாடம் சிறையில் போட முடிந்த உங்களால் கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் மக்கள் பணத்தை கொள்ளையிட்ட பெருங்கொள்ளையரை உள்ளே தள்ள முடியவில்லையே. மத்திய வங்கியில் வெளிப்படையாக ஆட்டையப் போட்ட (மோசடியைச் செய்த) அர்ஜூன மகேந்திரனை கூட கைது செய்து கொண்டு வர முடியலையே.

அப்படியாயின் உங்கள் வாக்கும் கையும் சுத்தமில்லை என்றுதானே அர்த்தம்? இப்பொழுது எந்த முகத்துடன் வந்து எம்மை வாக்கு போட கேட்கிறீர்கள்?

வெள்ளை வான் அனுப்பியவர்களை வெள்ளைச் சட்டை, வெள்ளை காற்சட்டையுடன் எங்கள் முன் வேட்பாளராக வர வைத்தற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்என்று தங்கராஜா தவரூபன் சினத்தோடு குறிப்பிட்டிப்பதற்கு ஆளுந்தரப்பிடம் பதில் இல்லை.

ஆனாலும் அவர்கள் மிகப்பலவீனமான பதிலையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன அறிவித்த பிறகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடக்கம் ஐ.தே.க மற்றும் அதனுடைய பங்காளிக்கட்சியினர் அனைவரும் சொல்வதைக் கேட்கச் சிரிப்பும் எரிச்சலுமே ஏற்படுகிறது.

இதை நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

“கோத்தபாய ராஜபக்ஸவின் கைகள் கறை படிந்தவை. இப்படிக் கறை படிந்த கரங்களா இந்த நாட்டை ஆள்வது?”

“கோத்தபாய ராஜபக்ஸ வெள்ளைவான் கடத்தல்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம் வேண்டுமா?”

“கோத்தபாய ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்தால் ஊடகத்துறைக்குச் சாவு மணிதான்”

“லஷந்தவையும் தராகியையும் மீட்பாரா கோத்தபாய? இன்னும் பல ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் கோத்தபாய ராஜபக்ஸ”

“கோத்தபாய ராஜபக்ஸ வந்தால் மீண்டும் ராஜபக்ஸக்களின் கையில் அதிகாரமும் காலடியில் நாடும் சிக்கிவிடும்”

“கோத்தபாய ராஜபக்ஸ வெற்றியடைந்தால் சிறுபான்மைச் சமூகங்களின் கதை முடியும். அவை கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளாகும்”

இப்படி ஏராளம் குற்றச்சாட்டுகளும் அச்சுறுத்தல்களும் பொதுவெளியில் விடப்படுகின்றன.

இவையெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள்தான். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதியன அல்லவே.  

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனையை வழங்கியிருக்க வேண்டியது தற்போதைய அரசாங்கமே. அதற்கான ஆணையை புதிய ஆட்சிக்கு மக்கள் வழங்கியுமிருந்தனர். அதைச் செய்யால், செயற்படுத்தாமல் விட்டதேன்?

ஆகவே கோத்தபாய ராஜபக்ஸவை களமிறக்குவதற்குக் காரணமாக இருந்தது தற்போதைய ஆட்சியாளரும் பிரதமர் ரணிலும்தான். அவ்வாறே ராஜபக்ஸக்களை வலுவூட்டம் செய்ததும் இதே ஆட்சியாளரும் ரணில் விக்கிரமசிங்கவும்தான்.

ஜனநாயகம், தாராளவாதம் போன்றவற்றைத் தாம் பின்பற்றியதால்தான் இதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது என்று சப்பை நியாயங்களை இந்த இடத்தில் வந்து யாரும் சொல்லக் கூடும்.

எந்த ஜனநாயகச் சூழலிலும் குற்றவாளிகள் தப்பிவிட முடியாது என்பது விதி. அந்த விதியை மீறினால் அது ஜனநாயக துஸ்பிரயோகம் என்றே அர்த்தப்படுத்தப்படும்.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் பலவீனமே இப்போதும் இனி வரும் காலத்திலும் எதிர்நிலைச்சக்திகளுக்கு வாய்ப்பாகப்போகின்றன. இதை மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றனர் என்பதே மிஞ்சியுள்ள கேள்வியாகும்.

இதேவேளை கோத்தபாய ராஜபக்ஸவை ஏனைய ராஜபக்ஸக்கள் எந்த அடிப்படையில், எந்தத் துணிச்சலில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர் என்பதும் கேள்வியே.

கூடவே இதற்கு ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் பங்காளிக்கட்சிகளும் இடமளித்திருப்பது இன்னும் கேள்வியை எழுப்புகின்றன.

கோத்தபாய ராஜபக்ஸ பல்வேறு குற்றச்செயல்களோடும் அரசியல் தவறுகளோடும் நிர்வாக முறைகேடுகளோடும் தொடர்புபட்டவர் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டப்பட்டவர்.

நீதிமன்ற வழக்கில் உள்ளவர்.

சிறுபான்மைச் சமூகத்தினரின் மனதில் எதிர்நிலை ஆளாகப் பதியப்பட்டவர்.

குடும்ப ஆட்சியின் சின்னமாகவும் சிகரமாகவும் கருதப்படுகின்றவர்.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானவர் என்று நோக்கப்படுகின்றவர்.

எதையும் இராணுவக் கண்ணோட்டத்தில் அணுகும் இயல்புள்ளவர்.

இப்படியெல்லாம் எதிர்நோக்கப்படும் ஒருவரை எப்படி பொதுஜன பெரமுன துணிச்சலோடு களமிறக்கியது? எந்த நம்பிக்கையில் தனது வெற்றியை பொது ஜனபெரமுனவும் பங்காளிகளும் எதிர்பார்த்திருக்கின்றன?

இரு பச்சையான இனவாதியே வெற்றிக்கான இலக்கின் அருகில் உள்ளனர் என்ற நம்பிக்கையன்றி வேறென்ன?

இருந்தும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க முடியாத நிலையில் ஐ.தே.கவும் ஜே.வி.பியும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும்பொழுது சரியோ தவறோ ராஜபக்ஸக்கள் தங்களுடைய போட்டியாளரை முன்னறிவித்துள்ளன.

இந்தத் துணிச்சலும் முன்னெழுந்து செல்லும் உறுதிப்பாடுமே ராஜபக்ஸக்களுடைய பலம். அதுவே அவர்களுடைய பலவீனமும்.

அடுத்த ஜனாதிபதி யார் என்பது ஒரு புறமிருக்கட்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என்பதே இன்றுவரையில் தீராத புதிரும் சிக்கலுமாகும்.

Share:

Author: theneeweb