இலங்கைத் தீவு வட்டமிடும் ‘ஏகாதிபத்திய’ வல்லூறுகளுக்கு இரையாகுமா?

இதனை எழுதும் வரை இன்னமும் இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஞாயிறு(11.08.2019) அன்று ‘சிறீலங்கா பொதுஜன முன்னணி’(SLPP) உத்தியோகபூர்வமாக தனது கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்ச என அறிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் எதுவும் இன்னமும் தங்களது வேட்பாளர்கள் பெயரை அறிவிக்கவில்லை.
1982லும் 1988லும் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’(SLFP) என்ற பெயரிலும் 1994-1999ல் ‘பொதுஜன முன்னணி’(PA) என்ற பெயரிலும் 2005-2010-2015ல் ‘ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி’(UPFA) என்ற பெயரிலும் போட்டியிட்டு வந்தவர்கள் இப்போது 2019ல் ‘ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி’(SLPP) என்ற பெயரில் தேர்தல் ஆட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.
2005 வரை ‘ஐக்கிய தேசியக் கட்சி’(UNP) என்றும் 2010ல் ‘ஜக்கிய தேசிய முன்னணி’ (UNF)என்றும் 2015ல் ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’(UNFGG) என்றும் போட்டியிட்டவர்கள் தற்போது 2019ல் ‘ஜக்கிய ஜனநாயக முன்னணி’(UDF) என்னும் பெயரில் தமது வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கையின் ஆட்சிக் கதிரையை மாறி மாறிக் கைப்பற்றி வரும் இந்த இரு பிரதான கட்சிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் மக்களின் நலன்களைப் புறந்தள்ளி தங்களது தனித்துவத்தை இழந்து உதிரிக் கட்சிகளை விலை கொடுத்து வாங்கி அணி சேர்த்து வைத்துக் கொண்டே தேர்தலை சந்திக்கிறார்கள். ஆதலால் இந்தக் கூட்டணிகளுக்கு எந்தவிதமான அடிப்படைக் கொள்கையும் இருக்க முடியாது. அவர்களது இலக்கு எப்படிப் பட்டாவது மக்களின் வாக்குகளை வென்றெடுப்பது ஒன்றே ஒன்றுதான். இந்தப் பதவிப் போட்டியில் அவர்கள் வகுக்கும் அரசியல் வியூகங்கள் மக்களின் உயிர்களைப் பலியெடுக்கவும் தயங்காது என்பதையே கடந்த கால வரலாறு நிரூபித்துள்ளது.
பதவி மோகத்தால் இக் கட்சிகள் நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டுள்ளார்கள். அதனால் இன்று நாட்டின் இறைமையை பறிகொடுத்து விட்டு அவர்களின் கட்டளைக்கு ஏற்றபடி ஆட்சி நடாத்துகிறார்கள். இந்த இரு கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களும் வட கிழக்கில் தமிழ் இளைஞர்களும் ஆயுதமேந்த தூண்டப்பட்டனர். இவர்களது ஆட்சி முறையால் தான் நாட்டின் நீதி, நிர்வாகம் சீர் குலைந்து ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, போதை வஸ்து பாவனை போன்ற குற்றங்கள் இன்று அதிகரித்தபடி உள்ளன.
1971ல் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது அவர்களைக் ‘கிளர்ச்சியாளர்கள்’ என்று குற்றம் சாட்டியவர்கள் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை குத்தினார்கள்.
2009ல் ‘பயங்கரவாதத்தை வேரோடு அழித்துவிட்டோம்.  இனிமேல் இலங்கையில் பயங்கரவாதம் தலை தூக்காது’ என் மார் தட்டி வெற்றி எக்காளம் இட்ட அன்றைய பாதுகாப்புச் செயலாளர் தான் இன்றைய ‘பொது ஜன முன்னணி’ வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச ஆகும். இன்று மறுபடி ‘பயங்கரவாதத்தை என்னால் மட்டுமே ஒழிக்க முடியும். என்னை ஜனாதிபதி ஆக்குங்கள்’ என்று மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு நிற்கிறார். தனது ஆட்சியின் கீழ் ‘பௌத்த மத கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டில் சகல மதங்களும் பாதுகாக்கப்படும்’ என்று வேறு கூறியுள்ளார்.
ஆனால் ஏப்ரல் 21 குண்டு வெடிப்பிற்கான ஆரம்பம் இவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப் பகுதியான யூன் 2014ல்  வெளிப்படத் தொடங்கி விட்டது. 15 யூன் 2014 அன்று  இவரது ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் இயங்கி வந்த ‘பொது பல சேன’(BBS) என்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பின் தலைமையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக களுத்துறை மாவட்டத்தில் அளுத்தகம, பேருவல, டர்கா ரவுன் ஆகிய ஊர்களில் நடாத்தப் பட்ட கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் காயப்பட்டனர். 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தனர். இவை தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாதென அரசாங்கம் நாட்டின் பிரதான செய்தி நிறுவனங்களுக்கு அக் கலவரத்தின் போது கட்டளை போட்டிருந்தது. இவருடைய பதவிக் காலமான 2015 வரை (பல கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்து கோயில்கள் உட்பட)பல பத்துக் கணக்கில் மசூதிகள் தாக்கப்பட்டன. இச் சம்பவங்கள் தொடர்பில் எவரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. அரச ஆதரவுடன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே வன்முறைகள் ஏவி விடப்பட்டன. நாட்டின் நீதிச் சட்டங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.
இத்தகைய அநீதியான ஆட்சி முறை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வன்முறை சிந்தனையைத் தூண்டும் என்பதை ’30 வருட யுத்தத்தை’ முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றி விழா கொண்டாடிய பாதுகாப்புச் செயலாளருக்குத் மிகத் தெளிவாகத் தெரியும். நாட்டில் ‘பயங்கரவாதம்’ மறுபடி தழைக்க வேண்டும் என்பது அன்று அமெரிக்க பிரஜையாகவும் இருந்த அவரது இலக்காக இருந்தது. 
அரசியல் இயங்கு நடைமுறையில் விதி ஒன்று உள்ளது. ஒருவர் தான் குறி வைக்கும் ‘இலக்கை’(ஜனாதிபதி ஆவது) அடைய வேண்டுமானால் அதனை எட்டுவதற்கு ஏதுவாக ஒரு(objective condition) ‘புறநிலைச் சூழ்நிலையை’(பயங்கரவாதம்) உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த நோக்கத்தில் வெற்றியடைய வேண்டி அதனைத் தூண்டி விடும் வகையில் ஒரு(subjective condition) ‘அகநிலைச் சூழ்நிலையை’(தீவிரவாத கும்பல்களை ஊக்குவித்தல்) திட்டமிட்டு தயார்படுத்தல் அவசியமானது.
2009ல் யுத்தம் முடிவுற்றதனைத் தொடர்ந்து ‘யுத்தக் குற்றம்’, ‘சட்ட ஒழுங்கீனம்’, ‘அடிப்படை மனித உரிமை மீறல்’, ‘பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குதல்’ என சர்வதேச சமூக ‘சட்டம்பிமார்’ குரல் எழுப்பினார்கள். அவற்றை எதிர்கொள்ள ‘புலம் பெயர்ந்த தமிழர்கள்’ இலங்கையில் ‘பயங்கரவாதத்தை’ விதைக்கிறார்கள் என்று காட்டும் வண்ணம் உள் நாட்டில் சில நிகழ்வுகள் நடாத்திக் காட்டப்பட்டது. அவற்றுடன் சமாந்திரமாக இன்று உலக நாடுகளில் பரவாலாக ஏகாதிபத்தியங்களின் தலையீட்டை இலகுவாக்கும் காரணியாக பயன்படும் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ உற்பத்தியாவதற்கான அடிப்படை தயாரிப்புகளும் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றுதான் 2015ன் ‘நல்லாட்சி’ மாற்றம். அன்றைய ‘ஜனநாயக மீட்புப் புரட்சி’ என்ற பதாகையின் கீழ் இலங்கையின் அனைத்து மக்களும் ஏகாதிபத்திய சக்திகளால் ‘பகடைக் காய்களாக’ பயன்படுத்தப் பட்டுள்ளதை 2015 – 2019 காலப் பகுதியில் இடம் பெற்றுள்ள ‘நல்லாட்சி’யின் நடைமுறையும் அதற்கு அனுசரணையாக சர்வதேசம் செயற்படும் விதமும் நிரூபணம் செய்துள்ளன. இதில் கடந்த ‘பொல்லாட்சி’யும் இன்று இயங்கும் ‘நல்லாட்சி’யும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனேயே செயற்பட்டு வந்துள்ளன. இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இதில் பாரிய பங்களிப்பும் பொறுப்பும் உண்டு.
நாட்டைப் பாதுகாக்கும் படையில் ஒரு பொறுப்பதிகாரியாக கடமையாற்றி 88-89ல் தென்னிலங்கை பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது சொந்த நாட்டு(இலங்கைக்) குடியுரிமையைக் கைவிட்டு 21நவம்பர் 2003ல் அமெரிக்க பிரஜையானார். 2005ல் அவரது அண்ணர் மகிந்தாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக ‘உல்லாசப் பயணிகள் விசா’வில் இலங்கை வந்தவர், அண்ணர் ஜனாதிபதி ஆக வெற்றி பெற்ற ஓரிரு நாட்களில் மீண்டும் இலங்கைப் பிரஜை ஆகி பாதுகாப்புச் செயலாளர் ஆகப் பதவியும் ஏற்றுக் கொண்டார்.
2009 யுத்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அழுத்தங்களை சமனாக்குவதற்கு சீனாவிடம் சரணடைந்தார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றமையும் 2 வருடங்கள் தங்கியிருந்தமையும் பின்னர் நாடு திரும்பி பாதுகாப்புப்  பொறுப்பை எடுத்துக் கொண்டதும் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கருதக் கூடிய வகையில் தான் அவருடைய அண்மைய உரைகள் அமைந்துள்ளன. அவரது உரைகளின் சாராம்சத்தை பார்த்தோமானால் ‘பொல்லாட்சி’ மீண்டும் வரும் என்பதைத் தான் உறுதிப்படுத்துகிறது. அவரது அமெரிக்க பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட்ட விதம்  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது காலை ஊன்றுவதற்காக இன்று அமெரிக்கா இலங்கையின் அடுத்த அதிபராக இரும்புக் கரம் கொண்ட ஒருவரை ஆட்சிக் கதிரையில் அமர்த்த முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளது.
2015ல் நல்லாட்சி வந்த பின் அவர் மேல் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் அவரை இது வரை விசாரணைக் கைதியாக்க இலங்கை நீதித்துறையால் முடியவில்லை. அமெரிக்காவிலும் அவர் மீதான கொலை, சட்டவிரோத கைது, சித்திரவதை என்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் உண்டு.
நாட்டில் இன்று ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ ஒழிக்கப்படவேண்டும் என்பதில் இலங்கையின் அனைத்து இன-சமய(முஸ்லீம்கள் உட்பட) மக்களும் ஒரே அணியில் நிற்கிறார்கள். அதற்குத் தகுதியானவர் கோத்தபாயா ராஜபக்ச எனவும் நம்புகிறார்கள்.
அவர் திட்டமிட்டு ஏற்படுத்திய இந்தச் (புறநிலைச்) சூழலில் தான் ‘இவர் அமெரிக்கரா? இலங்கையரா? எனப் பலரும் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருக்கையில் அவர் தான்  போட்ட திட்டத்தின் பிரகாரம் தனது ‘இலக்கை’ அடைவதற்காக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் கட்சியோ கொள்கையோ எதுவும் எடுபடாது. ‘பொல்லாட்சி? அல்லது ‘நல்லாட்சியா? எது வேண்டும்? என்பது மட்டுமே பரப்புரைகளாக அமையும்.
இந்த இரண்டு) பிரதான கட்சிகளினதும் (ஜக்கிய ஜனநாயக முன்னணி(UDF) -ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி(SLPP)பரப்புரைகளுக்கு செவிமடுத்து இவர்களது வேட்பாளர்களுக்கு அடுத்த தேர்தலில் அளிக்கப்படும் தமிழ்ப் பேசும் வாக்காளரின் ஒவ்வொரு வாக்கும் இன்று வரை இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் செய்து வந்த அநியாயங்களை, கொலைகளை, அழிவுகளை, நியாயப்படுத்தி ‘சிங்கள பௌத்த பேரினவாதத்தை’ தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்பதையே நிச்சயம் உறுதிப்படுத்தும்.
(குடாநாடான்)
Share:

Author: theneeweb