சஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால் கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும்

கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்பட சந்தர்ப்பம் உள்ளதாக என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தலா? மாகாண சபை தேர்தலா முதலில் நடைபெறும் என ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்தப்பட வேண்டும் என எதிர் பார்த்துள்ளதால் அந்த தேர்தலை முதலில் நடத்துவது உசிதம் என கூறினார்.

ஜனாதிபதி தேர்தலோடு மாகாண சபை தேர்தலும் ஒன்றாக நடத்தப்படுவதில் எந்தவித தவறும் இல்லை எனவும் ஆனால் அது மயக்கமான நிலைமையை தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் சாத்தியமுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் முதலாவதாகவும் இல்லாவிடின் இரு தேர்தல்களையும் கூட்டாக நடத்தலாம் எனவும் கூறினார்.

அவ்வாறு இல்லா விட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது எனவும் அவ்வாறான தீர்மானத்தை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த வாசுதேவ நாணயக்கார ஐ.தே.கவில் சஜித்தை தெரிவு செய்யாவிட்டால் அந்த கட்சிக்குள் பாரிய பூகம்பம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சஜித்தை வேட்பாளராக நியமித்தாலும் ஐ.தே.கவுக்குள் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரவித்துள்ளார்.

Share:

Author: theneeweb