கஷோகி படுகொலை விவகாரத்தில் சவூதியிடம் நம்பகத்தன்மை இல்லை

செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பாக சவூதி அரேபியா நடத்தி வரும் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: துருக்கியிலுள்ள சவூதி துணைத் தூதரகத்தில் செய்தியாளர்கள் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து சவூதி அரேபியா பல்வேறு தகவல்களைக் கூறி வருகிறது.

மேலும், அந்தப் படுகொலை தொடர்பான விசாரணையையும் நடத்தி வருகிறது. எனினும், எங்களைப் பொருத்தவரை இதுதொடர்பாக சவூதி தெரிவித்து வரும் தகவல்களும், அந்த நாட்டில் நடத்தப்படும் விசாரணையும் போதிய நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை.

மேலும், உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. விரைவில், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சவூதி உள்ளிட்ட 8 மத்தியக் கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

JAMAL

அப்போது, கஷோகி படுகொலை விவகாரத்தில் உண்மையான விசாரணையை நடத்துமாறு சவூதி அரசிடம் அவர் வலியுறுத்துவார் என்றார் அந்த அதிகாரி. சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்தச் சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டது.

 

Share:

Author: theneeweb