ஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை, மக்கள் தனக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை வீரகெடிய-மெதமுலனயிலுள்ள ஸ்ரீ தர்மஹிருவா சே விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தமது பிறந்த வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த பிரதேச மக்கள் அவருக்கு மகத்தான வரவேற்பை வழங்கினர்.

பின்னர், மெதமுனயிலுள்ள தனது பெற்றோரின் நினைவிடத்திற்கு சென்று அவர்களுக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார்களும் ஏராளமான மக்களும் கலந்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தனது சகோதரருக்கு மக்கள் வழங்கிய ஆதரவையும் நல்லாசிகளையும் தனக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Author: theneeweb