ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் ; டியூ குணசேகர

 

ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுவதால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தாபயவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்களிப்பு அத்தியாவசியமாகும். தனித்து இதனை மேற்கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன தற்போது பிரிந்து செயற்பட்டாலும் இரண்டும் ஒரே கொள்கையுடையதாகும். அதனால் சர்வதேச தலையீடுகளில் இருந்து பாதுகாத்து, நாட்டை கட்டியெழுப்ப இந்த தீர்க்கமான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றது. அவர்கள் தனித்து போட்டியிடுவதன் மூலம் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர்கள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு ஆதரவாகவே இருந்தனர். அதனால் மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்குகள் குறைவடையும் என்றார்.

Share:

Author: theneeweb