ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியின் எதிர்காலம் !

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு புத்­து­யி­ர­ளிக்கும் செயற்­பா­டு­களில் இறங்­கப்­போ­வ­தாக கடந்­த­வாரம் அறி­வித்­தி­ருக்­கிறார். தனது தந்தை காலஞ்­சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­வினால் 68 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பிக்­கப்­பட்ட கட்­சியின் தலை­வி­யாக ஒரு கால­கட்­டத்தில் இருந்த அவர் கொழும்பு ரீ.பி.ஜாயா மாவத்­தையில் அமைந்­துள்ள கட்­சியின் தலை­மை­ய­கத்­துக்கு கடந்த வியா­ழக்­கி­ழமை திடீ­ரென சென்று மூத்த உறுப்­பி­னர்கள் பல­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் கட்­சியின் இன்­றைய இக்­கட்­டான நிலை­மைக்கு தனக்குப் பிறகு தலை­மைத்­து­வத்­துக்கு வந்­த­வர்­களே காரணம் என்று குற்­றஞ்­சாட்­டி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கின.

இன்று திங்­கட்­கி­ழமை முதல் கட்­சிக்கு புத்­து­யி­ர­ளிப்­ப­தற்­கான தனது செயற்­திட்­டத்தை தொடங்­கப்­போ­வ­தாக கூறிய அவர் தலை­மை­ய­கத்தில் தனக்­கென்று தனி­யான அலு­வ­லகம் ஒன்றும் ஊழி­யர்­களும் உட­ன­டி­யாக  ஒதுக்­கித்­த­ரப்­ப­ட­வேண்டும் என்று கேட்­டுக்­கொண்­ட­தா­கவும் அவ­ரது இந்த கோரிக்கை குறித்து கட்­சியின் மூத்த தலை­வர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் தலை­மை­யக வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி செய்­திகள் தெரி­வித்­தன. நான்கு தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான கால­மாக பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் “சொத்து”  போன்று தங்­க­ளது முழு­மை­யான ஆதிக்­கத்தில் இருந்த சுதந்­திரக் கட்­சியின் தற்­போ­தைய பரி­தாப நிலை திருமதி குமா­ர­துங்­க­வுக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதை புரிந்து கொள்­ள­மு­டி­கி­றது. ஆனால், தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையின் கீழிருக்கும் கட்­சிக்கு புத்­து­யி­ர­ளிப்­ப­தற்­கான அவ­ரது செயற்­திட்டம் எந்­த­ள­வுக்கு நடை­முறை சாத்­தி­ய­மாகும் என்ற கேள்வி பெரு­ம­ள­வுக்கு மாற்­ற­ம­டைந்­தி­ருக்கும் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையில் தவிர்க்­க­மு­டி­யாமல் எழு­கி­றது.

திரு­மதி குமா­ர­துங்க, 2005 நவம்­பரில் ஜனா­தி­பதி பத­வியிலிருந்து இறங்­கிய பின்­னரும் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­துவம் சொற்ப நாட்கள் அவர் வசமே இருந்­தது. ஜனா­தி­ப­தி­யாக பதவி­யேற்­பவர் தன்­னி­யல்­பா­கவே கட்­சியின் தலை­வ­ராக வந்­து­விடும் வகையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பில் இருக்­கின்ற ஏற்­பாட்டை சுதந்­திரக் கட்­சிக்கும் பிரதி பண்­ணிய புதிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் தலைவர் பத­வியை தன­தாக்­கிக்­கொண்டார். அதற்கு பிறகு அவர் கட்­சிக்குள் பண்­டா­ர­நா­யக்க குடும்ப மரபு என்று எது­வுமே மீண்டும் தலை­யெ­டுத்­து­வி­டாமல் இருப்­பதை உறு­தி­செய்யும்  நட­வ­டிக்­கை­க­ளையே தனது சகோ­த­ரர்­க­ளுடன் சேர்ந்து தீவி­ர­மாக முன்­னெ­டுத்தார். திரு­மதி குமா­ர­துங்க, கட்­சியின் செயற்­பா­டு­களில் இருந்து  முற்­றி­லு­மாக ஒதுக்­கி­வைக்­கப்­பட்டார். ஜனா­தி­ப­திக்­கு­ரிய மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி ராஜ­பக் ஷ மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை எதிர்த்து எதை­யுமே செய்ய திரு­மதி குமா­ர­துங்­க­வினால் முடி­ய­வில்லை.

சுதந்­திரக் கட்­சியை ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ முற்­று­மு­ழு­தாக தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு­வந்தார். கட்­சியின் சகல மட்­டங்­க­ளிலும் தங்­க­ளது ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தி­லேயே ராஜ­பக் ஷவும் அவரது சகோ­த­ரர்­களும் கண்ணும் கருத்­து­மாக செயற்­பட்­டார்கள். ஒரு காலத்தில் பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் முழு­மை­யான ஆதிக்­கத்தில் இருந்த கட்சி ராஜ­பக் ஷ குடும்­பத்தின் பிடிக்குள் முழு­மை­யாக வந்­தது. இலங்­கையின் முதல் பிர­தமர் டி.எஸ்.சேன­நா­யக்க தலை­மை­யி­லான  ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கத்திலிருந்து வெளி­யேறி  பண்­டா­ர­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் எதி­ரணி பக்கம் சென்­ற­போது அவரின் பின்னால் உட­ன­டி­யாக வந்­தவர் மஹிந்­தவின் தந்­தையார் டீ.ஏ.ராஜ­பக் ஷ. இதை  சுட்­டிக்­காட்டி ராஜ­பக் ஷ சகோ­த­ரர்கள் சுதந்­திரக் கட்­சியை ஸ்தாபிப்­பதில் பண்­டா­ர­நா­யக்­க­வுக்கும் தங்­க­ளது தந்­தை­யா­ருக்கும் சம­அளவு  முக்­கி­யத்­துவம் இருந்­தது போன்ற தோற்­றப்­பாட்டை காண்­பித்­தார்கள். கட்­சிக்குள் ராஜ­பக் ஷ குடும்­பத்தின் செல்­வாக்கும் ஆதிக்­கமும் எந்­த­ள­வுக்கு  ஆழ­மாக வேரூன்­றி­யி­ருந்­தது என்­பதை 2016 இறு­திப்­ப­கு­தியில் அவர்கள் தங்­க­ளுக்­கென்று  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவை  ஆரம்­பித்­த­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் அரை­வா­சிக்கும் அதி­க­மானோர் புதிய கட்­சி­யுடன் வெளிக்­காட்­டிய ஒரு­மைப்­பாடு பிர­கா­ச­மாக உண­ர­வைத்­தது.

 

2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷவை தோற்­க­டித்து  வெற்றி பெற்று ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, சில வாரங்­களில் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை தன­தாக்­கிக்­கொண்­ட­போ­திலும், கட்­சியை முழு­மை­யாக தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ர­மு­டி­ய­வில்லை. 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­தலை சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி முன்னாள் ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ தலை­மை­யி­லேயே சந்­தித்­தது. இலங்­கையின் வர­லாற்றில் கட்­சி­யொன்றின் தேர்தல் செயற்­பா­டு­க­ளிலும் (வேட்­பா­ளர்கள் நிய­மனம் உட்­பட) பிர­சா­ரங்­க­ளிலும் அதன் தலைவர் பங்­கேற்­காமல் பார்­வை­யா­ள­ராக நின்ற விசித்­தி­ர­மான முதல் சந்­தர்ப்­ப­மாக அது அமைந்­தது. பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் சேர்ந்து  ஜனா­தி­பதி சிறி­சேன அமைத்த  “தேசிய அர­சாங்­கத்தில்” இணைந்து ஆரம்­பக்­கட்­டங்­களில் பத­வி­களைப் பெற்­றுக்­கொண்­ட­போ­திலும், ராஜ­பக் ஷ தலை­மையில் பாரா­ளு­ம­ன்­றத்­திற்குள் செயற்­பட்ட கூட்டு எதி­ர­ணி­ பக்கம் அவர்­களில் பலர் நாள­டைவில் வந்­து­விட்­டார்கள்.

2018 பெப்­ர­வ­ரியில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் பொது­ஜன பெர­முன பெற்ற மகத்­தான வெற்றி சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வுத்­தளம் ராஜ­பக் ஷாக்­களின் பக்கம் நகர்ந்­து­விட்­டதை பிர­கா­ச­மாக வெளிக்­காட்­டி­யது. ஐக்­கிய தேசியக் கட்சி மிகவும் பல­வீ­ன­மான இரண்டாம் இடத்­துக்­கு­வர சுதந்­திரக் கட்சி தொலை­தூர மூன்றாம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டது. ஜனா­தி­பதி சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் முரண்­பா­டு­களும் பல­வீ­னங்­களும் பொது­ஜன பெர­மு­னவின் அந்த வெற்­றிக்கு பெரு­ம­ள­வு பங்­க­ளிப்புச் செய்­தன. அதற்கு பிறகு  அடுத்­து­வ­ரக்­கூ­டிய எந்த தேர்­த­லிலும் தங்­களால் சுல­ப­மாக வெற்­றி­பெ­ற­மு­டியும் என்ற  நம்­பிக்­கை­யுடன் ராஜ­பக் ஷாக்கள் செயற்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இப்­போது அவர்கள் தங்­க­ளது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரையும் அறி­வித்து பிர­சா­ரங்­களைத் தொடங்­கி­விட்­டார்கள். ஜனா­தி­பதித் தேர்தல் பற்­றிய அறி­விப்பு வரு­வ­தற்கு முன்­பா­கவே  பொது­ஜன பெர­மு­னவும் அதன் ­த­லை­மைத்­துவக் குடும்­பமும் அடுத்த ஆட்சி தங்­க­ளு­டை­யதே என்ற உறு­தி­யான நம்­பிக்­கை­யுடன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கும்­போது மறு­பு­றத்தில் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் தலை­மையில் எஞ்­சி­யி­ருக்கும் சுதந்­திரக் கட்சி அடுத்து எத்­த­கைய அணு­கு­மு­றையைக் கடைப்­பி­டிப்­பது என்று தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கி­றது.

கடந்த அக்­டோபர் அர­சியல் சதி­மு­யற்­சிக்குப் பிறகு அர­சாங்­கத்திலிருந்து வெளி­யே­றிய சிறி­சேன அணி பொது­ஜன பெர­மு­ன­வுடன் சேர்ந்து பய­ணிக்கும் தந்­தி­ரோ­பா­யத்தில் நாட்டம் காட்­டி­யது. ஜனா­தி­பதி தலை­வ­ராக இருக்­கிறார் என்­பதைத் தவிர அந்த அணிக்கு வேறு எந்த ஒரு அர­சியல் வல்­ல­மை­யுமே கிடை­யாது. ஆனால், ராஜ­பக் ஷாக்­களைப் பொறுத்­த­வரை, சிறி­சேன அணி­யுடன் எந்­த­வி­த­மான பேரத்­தையும் செய்­ய­வேண்­டிய தேவை இருக்­க­வில்லை. பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி அமைப்­பது குறித்து சுதந்­திரக் கட்சி தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திக்­கொண்­டி­ருந்­தாலும் அதனால் முன்­வைக்­கப்­பட்ட எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் ராஜ­பக் ஷாக்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அவர்­களின் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் செயற்­பட சுதந்­திரக் கட்சி முன்­வந்தால் பெய­ருக்கு ‘கூட்­டணி’ ஒன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு மாத்­திரம் ராஜ­பக் ஷாக்கள் தயா­ரா­யி­ருக்­கி­றார்கள்.

பொது­ஜன பெர­மு­ன­வுடன் அமைக்­கப்­ப­டக்­கூ­டிய கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சிறி­சே­னவை  நிய­மிக்­க­வேண்டும்; மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் பத­விக்­கான வேட்­பா­ள­ராக இருக்­கலாம் என்று ஒரு கட்­டத்தில் சுதந்­திரக் கட்சி கோரிக்கை முன்­வைத்­தது. அதை பரி­சீ­லிக்­கின்ற அள­வுக்கு ராஜ­பக் ஷாக்கள் என்ன அர­சியல் கற்­றுக்­குட்­டி­களா? கடந்த வாரம் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு பிறகு ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பதை தவிர ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுக்கும் அவ­ருடன் இருப்­ப­வர்­க­ளுக்கும் வேறு வழி­யில்­லாமல் போகி­றது. இன்னும் இரு வாரங்­களில் நடை­பெ­ற­வி­ருக்கும் சுதந்­திரக் கட்­சியின் மா­நாட்டில் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் தங்­க­ளது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வி­ருப்ப­தாக அவர்கள் கூறிக்­கொண்­டி­ருந்­தாலும், எதையும் பெரி­தாக எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. தனதும் சுதந்­திரக் கட்­சி­யி­னதும் தற்­போ­தைய “உய­ரத்தை” ஜனா­தி­பதி சிறி­சேன தெரிந்­து­கொள்­ளா­த­வ­ராக இருக்­க­மு­டி­யாது. தனது அர­சியல் பல­வீ­ன­நி­லையை ஒளிப்­ப­தற்­காக பொது­ஜன பெர­மு­ன­வுடன் சேர்ந்து ராஜ­பக் ஷாக்­களின் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் அவர் செயற்­ப­டுவார் என்று எதிர்­பார்க்­கலாம். அதற்­காக ஒரு கூட்­டணி நாடகம் அரங்­கே­றலாம். அவ்­வ­ள­வுதான்.

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பு வெளி­யாகி நிய­ம­னப்­பத்­தி­ரங்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்னர் தற்­போது ஜனா­தி­ப­தி­யுடன் இருக்­கின்­ற­வர்­களில் எத்­தனை பேர் வெளிப்­ப­டை­யா­கவே பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொள்­வார்­களோ தெரி­ய­வில்லை. அவர்­களைப் பொறுத்­த­வரை தங்­க­ளது அர­சியல் எதிர்­காலம் முக்­கி­ய­மா­னது.அதற்கு இன்­னமும் ஒரு­சில மாதங்­களே அதி­கா­ரத்தில் இருக்­கப்­போகும் ஒரு ஜனா­தி­ப­தி­யுடன் சேர்ந்து நிற்­பது எந்­த­வ­கை­யிலும் அவர்­க­ளுக்கு உத­வப்­போ­வ­தில்லை.

இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லை­யிலே, அடுத்­து­வரும் தேசியத் தேர்தல்களில் சுதந்திரக் கட்சி என்பது ராஜ­பக் ஷாக்களின் பொதுஜன பெரமுனவுக்குள் கரைந்துவிடக்கூடிய சாத்தியமே இருக்கிறது. அதற்கு பிறகு திருமதி குமாரதுங்க, எதற்கு புத்துயிரளிக்கப்போகிறாரோ? காலங்காலமாக அரசியல் அதிகாரத்திலிருந்த தலைமைத்துவத்துடன் அண்டிப்பிழைத்த அரசியல்வாதிகள் இன்று எந்த அதிகாரமும் இல்லாத முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து சுதந்திரக் கட்சிக்கு புத்துயிரளிக்க முன்வரவா போகிறார்கள்?  பண்டாரநாயக்கவின் கொள்கைகள் என்று கூறிக் கொண்டு மக்களை அணிதிரட்டுவதென்பது இனிமேல் சாத்தியப்படாத ஒரு  யுகத்தில் இன்று தான் வாழ்வதை திருமதி குமாரதுங்க புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக சுதந்திரக்  கட்சி வகித்துவந்த இடத்தை இப்போது பொதுஜன பெரமுன மிகவும் வலிமையான முறையில்  தனதாக்கிக்கொண்டுள்ளது என்பதே உண்மை. கடந்த வாரம் கட்சியின் தலைமையகத்துக்கு திருமதி குமாரதுங்க விஜயம் செய்தபோது அவருடன் கூடச்சென்றவர் “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின்” அமைப்பாளர் பண்டார அத்துக்கோரள என்று செய்திகளின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான சுமார்  7 தசாப்தங்களில்  அரை வாசிக்கும் கூடுதலான காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த ஒரு கட்சியை பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கவேண்டியிருப்பதை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.

வீ.தனபாலசிங்கம்   – Virakesari

Share:

Author: theneeweb