Welcome அனுர – கருணாகரன்

 

பெருங்குழப்பங்களின் மத்தியில் தெளிவு என்று சொல்வார்களே, அப்படித்தானிருக்கிறது ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு. ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகள் தமது வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் குழம்பு குழம்பென்று குழம்பிக் கலங்கிக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்பொழுது, எந்தக் குழப்பங்களுமில்லாமல் அனுரகுமார திஸாநாயக்கவை அறிவித்திருக்கிறது ஜே.வி.பி. கூடவே இதற்கெனப் பெரியதொரு எழுச்சிக் கூட்டத்தையும் கொழும்பு காலிமுகத்திலில் நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்திற் திரண்ட மக்கள் தொகையானது  எல்லோரையும் திரும்பிப் பார்க்கவும் யோசிக்கவும் வைத்துள்ளது. ஊடகங்கள் எல்லாம் இந்த எழுச்சிக் கூட்டத்தையும் அதில் திரண்ட மக்கள் தொகையையும் பற்றி வியப்போடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சனங்களும் இந்தளவு சனமா என்று வியந்து போயிருக்கிறார்கள். ஐ.தே.க, சு.க பொதுஜன பெரமுன உள்ளிட்ட பெருங்கட்சிகளில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனமும் சலிப்பும் சனங்களை வேறு பக்கம் பார்க்க வைத்திருக்கிறது. இதெல்லாம் பொதுஜன பெரமுன, ஐ.தே.க, சு.க போன்ற கட்சிகளுக்குக் கலக்கத்தை உண்டாக்கியுள்ளன.

 

ஐ.தே.க விற்குள் நீடித்துக் கொண்டேயிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக் குழப்பம், போர்க்குற்றம் தொடக்கம் குடியுரிமை வரையில் பிரச்சினைகளில் சிக்கியுள்ள பொதுஜன பெரமுன சார்பிலான கோத்தபாய ராஜபக்ஸவின் தெரிவு போன்றவற்றுக்கிடையில் ஜே.வி.பியின் வேட்பாளர் அறிவிப்பு பலருக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அனுரகுமாரவுக்கான வெற்றிவாய்ப்புகள் எப்படியிருக்கும் என்பதற்கு அப்பால், மூன்றாவது சக்தி, மூன்றாவது அடையாளம், மூன்றாவது பாதை என்ற ஒன்று கவனத்திற்குரியதாகி உள்ளது. இதனை எவருமே மறுக்க முடியாது.

 

ஏற்கனவே ஜே.வி.பி மூன்றாவது சக்தியாகத்தானே இருந்தது என்று யாரும் சொல்லக் கூடும். அந்த மூன்றாவது இடத்தைப் பொதுஜன பெரமுன எடுத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. ஆனால், குணாம்ச ரீதியாக அது மூன்றாவது இடமல்ல. பொதுஜன பெரமுன என்பது சு.கவின் உடைந்த இன்னொரு பாகமே தவிர, அது மூன்றாவது அல்ல. இதை உணர்த்துவதற்கும் தன்னுடைய இடத்தைத் தக்க வைப்பதற்குமே ஜே.வி.பி தன்னைத் திரட்டி முன்கொண்டு செல்ல முயற்சிக்கிறது.

 

இங்கே நாம் ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும். அல்லது பேச வேண்டும். ஜே.வி.பி எதனோடும் கரைந்து போகாமல் தன்னைத் திரட்சியாகவே வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறது. ஆனால், நமது இடதுசாரிக் கட்சிகள், தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் எல்லாம் சுய தெரிவும் சுய நிலைப்பாடும் சுய அடையாளமும் இல்லாமல் தடுமாறித் தளம்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இடதுசாரிக்கட்சிகளும் இனவாதக் கட்சிகளும் பொதுஜனபெரமுனவுடன் கூட்டு வைத்துள்ளன. இடதுசாரிகளுக்கும் இனவாதிகளுக்கும் இடையில் எப்படித்தான் ஒத்துப்போகுமென்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் இந்தக் கூட்டு அமைகிறது என்றும் புரியவில்லை. வெற்றி வேண்டும் என்பதற்காக கீழான வழிமுறைகளைத் தேடுகிறார்கள். இது எப்படி முற்போக்காகும்?  புரியாணி சாப்பிட வேணும் என்பதற்காக பன்றியோடு சேற்றில் புரளலாமா?

 

சரி அப்படித்தான் பொதுஜனபெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக இருந்தாலும் கோத்தபாய ராஜபக்ஸவை விட இன்னொருவரையே இந்தக் கட்சிகள் அடையாளம் கண்டிருக்க வேண்டும். அல்லது கோத்தபாய ராஜபக்ஸவைத் தவிர்த்து வேறொருவரை தெரிவு செய்யுங்கள் என்று பொதுஜன பெரமுனவிடம் கோரியிருக்க வேண்டும். இதை அழுத்தமாக வற்புறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் மீண்டும் மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்துக்குள்ளேயே திரவியத்தைத் தேடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. அது ஒரு மூடத்தனம். இயலாமை. அப்படி ராஜபக்ஸக்களுக்கே ஆதவளித்தால் அது ராஜபக்ஸ குடும்பத்தையே பலப்படுத்தும். நாட்டையல்ல. குடும்ப ஆட்சியையே வளர்க்கும். சமூகத்தை அல்ல.

 

மட்டுமல்ல, போர்க்காலக் குற்றச் சம்பவங்களோடு பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவர், ஒரு போதுமே தன்னை எந்த வகையிலும் முற்போக்காளராகவோ ஜனநாயகவாதியாகவோ நிரூபிக்காத ஒருவர், சிறுபான்மைச் சமூகத்தினரிடத்திலே சிறிய அளவுக்கேனும் நம்பிக்கையையும் நல்லபிப்பிராயத்தையும் கொண்டிருக்காத ஒருவரை எந்த அடிப்படையில் இவை ஆதரிக்க முற்படுகின்றன? அப்படியென்றால் இவற்றின் (இடதுசாரிகளின்) முற்போக்கு அம்சம் என்ன? அடையாளம் என்ன?

 

கோத்தபாயவின் ஆதரவுத் தளம் என்பது இனவாதமன்றி வேறென்ன? அதைத்தானே பொதுஜன பெரமுன பெரிய நம்பிக்கையாகவும் அரசியல் முதலீடாகவும் கொண்டிருக்கிறது? இப்படியான ஒரு சக்தியை நாம் எந்த அடிப்படையில் வளர்த்தெடுக்கலாம்? அப்படி வளர்த்தெடுத்தால் நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நாம் எப்படி அமைதியாக வாழ முடியும்?

 

இதற்குச் சற்றும் குறைவற்றதாகவே ஐ.தே.கவும் உள்ளது. தன்னுடைய கட்சிக்குள்ளிருக்கும் ஒருவரை வேட்பாளராகத் தெரிவு செய்ய முடியாத  நிலையில் இறுகிப் போயிருக்கிறது ஐ.தே.க. சஜித் பிரேமதாஸவையா ரணிலையா தெரிவு செய்வது என்று ஐ.தே.கவுக்குள்  தொடர்ந்தும் குழப்பமே நீடிக்கிறது.

 

சஜித்துக்கான இடத்தை ரணில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நேற்று இன்று விடுக்கப்படுவதில்லை. அது பத்தாண்டுகளுக்கு மேலானது. இருபத்தைந்து ஆண்டுகள் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ரணில் அதை இன்னொருவருக்கு, தகுதியானவருக்கு, கட்சியின் ஜனநாயக முறைப்படி விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. தன்னைத் தவிர அல்லது தனக்கு உவப்பானவரைத் தவிர இன்னொருவரைத் தெரிவு செய்வதற்கு அவருடைய தாராளவாதம் (?) இடமளிக்காதிருக்கிறது. இதற்காக அவர் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுதுள்ள நிலவரப்படி தேர்தல் கூட்டணி அமைத்த பிறகே வேட்பாளர் தெரிவு என்றிருக்கிறார் ரணில். ஐ.தே.க சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவதால் அதைக் கட்சியே தீர்மானிக்க முடியும். அதற்கான ஆதரவைப் பெறுவதற்கே கூட்டணி என்கிறது சஜித் ஆதரவு அணி. இப்படியே இந்த இழுபறி நீடிக்கிறது.

 

இங்கேயும் நாம் கவனிக்க வேண்டியது, ராஜபக்ஸக்களைப்போலவே ரணில் தரப்பும் தம்முடைய கையை விட்டு அதிகாரமும் தலைமைப் பொறுப்பும் நழுவ விரும்பவில்லை என்பதை. ஆக இரண்டு தரப்பும் அடிப்படையில் – குணாம்சத்தில் – நிலைப்பாடுகளில் ஒன்றாகவே உள்ளன. இனவாதத்திலும் கூடத்தான்.

 

இங்கேயும் நாம் இன்னொரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கவுள்ள முஸ்லிம் கட்சிகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்டவையும் எந்த அடிப்படையில், எத்தகைய நம்பிக்கையில், எவ்வாறான முற்போக்கு அம்சங்களைக் கண்டு தமது ஆதரவை அளிக்க முன்வந்திருக்கின்றன? என்பதை.

 

ஆனால் மக்களோ தெளிவாக தமது நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில் உள்ளனர். மக்களுக்கு இந்த நாடக அரசியல் புளித்து விட்டது. பொய்களின் சுமையை தொடர்ந்தும் அவர்களால் தலையில் ஏந்தி வைத்திருக்க முடியாது. ஆகவே அவர்கள் வேறு தெரிவுகளுக்கு விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேறு பாதைகள் தேவையாக உள்ளன. அவர்களுக்கு வேறு தலைவர்களும் வேறு திசைகளும் வேண்டியதாக உள்ளது. அது ஜே.வி.பி தான் என்றில்லை. அல்லது அனுரகுமார திஸாநாயக்கதான் என்றில்லை. அவர்கள் ஜே.வி.பியிலும் அனுரகுமார திஸாநாயக்கவிலும் கூட நம்பிக்கையற்றிருக்கலாம். திருப்தியற்றிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு புதிய பாதையும் புதிய பயணமும் அவசியப்படுகிறது.

 

நமது கவலைகள் என்னவென்றால் தொடர்ந்தும் தவறான (ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன) தரப்புகளைப் பலப்படுத்துவதற்கே பாரம்பரியச் சக்திகள் (அவை இடதுசாரிகளாக இருந்தாலென்ன, வலதுசாரிகளாக இருந்தாலென்ன) முயற்சிக்கின்றன. இது ஏன், என்பதே.

 

இவற்றுக்கு வேறு தெரிவுகளே இல்லையா? தம்மால்தான் புதிய பயணத்தை நிகழ்த்த முடியவில்லை. அதற்கான ஆற்றலும் சக்தியும் இல்லை என்றால் புதிய பாதையைக் கூட இனங்காண முடியாதா? அதற்கும் வக்கில்லையா?

 

இப்படி சுழற்காற்றில் இழுபடும் சருகுகளைப்போல இனவாதப் புயற்காற்றில் இவையெல்லாம் இழுபடுவது எதற்காக? இதற்காகத்தானா மக்களாகிய நாங்கள் இந்தக் கட்சிகளை ஆதரிப்பதும் வளர்ப்பதும்?

 

உண்மையில் இவை எதற்காக ஐ.தே.கவை அல்லது சு.க அல்லது பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றன என்றால், அவற்றுடன் மேற்கொள்ளக் கூடிய வணிக நலன்களுக்காகவே. வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கும் கொமிசனுக்காகவே. ஜே.வி.பியோடு இதைச் செய்ய முடியாது. அது மக்கள் இயக்கம். ஊழலற்ற அமைப்பு. அதனோடு இந்த மாதிரி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆகவேதான் இந்தக் கட்சிகள் என்ற கொம்பனிகள் ஐ.தே.கவை அல்லது சு.க வை அல்லது பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றன. மற்றும்படி மக்கள் நலனுக்காக அல்ல.

 

இதை எதிர்வரும் நாட்களில் ஊடகங்களும் அறிஞர்களும் சமூகச் செயற்பாட்டினரும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அவர்களும் இந்தப் புயலில் சிக்குண்டு அள்ளுப்படக் கூடாது. எந்த நிலையிலும் திசைகாட்டிகளாகச் செயற்பட வேண்டும்.

 

இல்லையெனால் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தலைவர்களும் விடுகின்ற தவறுகளை விடப் பெரிய தவறை, அவர்கள் செய்கின்ற துரோகத்தை விடப் பெரிய துரோகத்தை இவர்கள் செய்ததாக வரலாறு சொல்லும்.

 

இங்கே புதிய பயணத்துக்கான ஒரு தொடக்கத்தை அனுரகுமார திஸாநாயக்க காட்டுவதற்கு முன்வந்திருக்கிறார். ஜே.வி.பிக்கும் இனவாத முத்திரை இருந்தாலும் அதற்கப்பால் சில சிறப்பான முக்கியத்துவங்கள் உண்டு. அது ஒரு மக்கள் இயக்கம். ஊழலற்ற நிர்வாகத்தையும் மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்திய அமைப்பு. சிறுபான்மைச் சமூகத்தினரின் மீது குற்றச் செயல்களில் ஈடுபடாதது. மட்டுமல்ல, குற்றச் செயல்களோடும் திரைமறைவு அரசியல் நாடகங்களோடும் தொடர்புபடுத்த முடியாதவர் அனுரகுமார திஸாநாயக்க. இதுவரையில் ஊழல், கொலை, ஜனநாயக விரோதம் போன்ற கறை படியாத கரங்கள் அனுரகுமார திஸாநாயக்கவினுடையவை.

 

ஆனால், தனக்கான ஆதரவுத்தளத்தை அனுரகுமார திஸாநாயக்க சிங்கள இனவாதத்துக்குள் சுருக்கி விடக் கூடாது. அப்படிச் சுருக்கினால் அது அனுரகுமார திஸாநாயக்கவுக்கு மட்டுமல்ல, ஜே.வி.பிக்கும் கெட்டதாகவே முடியும். சிறுபான்மைத் தேசிய இனங்களை நோக்கி அனுரகுமார திஸாநாயக்க முன்வர வேணும். ஜே.வி.பி அதற்கான தயார்ப்படுத்தல்களைச் செய்ய வேணும். அதனால் அப்படியெல்லாம் செய்ய முடியுமா என்பது கேள்வியே. இருந்தாலும் அதற்கு வேறு வழியில்லை. வேட்பாளரை நிறுத்துவதொன்றும் முக்கியமானதல்ல. அவரை வெற்றி பெற வைக்க வேணும். அதுவும் சரியான முறையில் வெறறியடைய வைக்க வேணும்.

 

இதற்கு ஜே.வி.பியின் தலைவர் என்ற வகையில் அனுரகுமார திஸாநாயக்கவுக்குப் பெரும் பொறுப்புகள் உண்டு. தன்னை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் அவர் ஜே.வி.பியைச் சரியாக முன்கொண்டு செல்ல வேண்டும். ஆக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இப்பொழுது அதிக பொறுப்புகளுண்டு. இந்தப் பொறுப்புகளைச் செய்யக் கூடிய இளைய தலைவர் அவர் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதை அனுர செய்வரா இல்லையா? சூழலை தனக்கிசைவாக மாற்றுவாரா இல்லை சூழலுக்கு இசைவாகத் தன்னைக் கரைத்துக் கொள்வாரா என்பதை அனுரவே தீர்மானிக்க வேண்டும்.

 

என்பதால்தான் நாம் அவரை “Welcome அனுர” என்று அன்பாக அழைக்கிறோம்.

 

இனி வெற்றி தோல்வி என்பது அனுரகுமார திஸாநாயக்கவோடு  நல்லவர்கள், தீர்க்கதரிகள், நியாயவான்கள், தேசத்தை நேசிப்போர், சமாதான விரும்பிகள் என்ற எல்லோரும் இணைந்த பயணத்தில்தான் நிகழலாம்.

 

Share:

Author: theneeweb