தாக்குதலை தடுக்க 16 மணித்தியாலங்கள் கால அவகாசம் இருந்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு சுமார் 16 மணித்தியாலங்கள் வரையான கால அவகாசம் இருந்தாக தாக்குதல் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவில் நேற்று (20) சாட்சியம் வழங்கிய குறித்த குழுவின் உறுப்பினர்கள் இதனை தெரியபடுத்தியுள்ளனர்.

தாக்குதல் குறித்த தகவல்கள் ஒரு நாளுக்கு முன்பே கிடைத்தாகவும் ஆனால் அதனை தடுப்பதில் தோல்வி கண்டதாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட யூரியா நைட்ரேட்டை பயங்கரவாதிகள் இதன்போதும் பயன்படுத்தியதாக குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு உறுப்பினர்களை சாட்சியமளிக்க அழைத்திருந்தனர்.

அதற்கிணங்க உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இதற்கமைய சாட்சியம் வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தான் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியாக சாட்சியம் வழங்கவில்லை எனவும் மாறாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராகவே சாட்சியமளிப்பதாகவும் தெரிவுகுழுவிடம் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb