நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூடியவரே அடுத்த ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டிருக்க கூடிய ஒருவரையே அடுத்த ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என சிவில் சமூக பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

´நல்லாட்சியின் அடுத்த நகர்வு´ என்ற தலைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிலையான சமூகத்திற்கான தேசிய அமைப்பு, புறவெசி இயக்கம் உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பல எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த, மூத்த ஊடகவியலாளர் கே.டப்ள்யூ. ஜனரஞ்சன 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பல விடயங்கள் நடக்கவில்லை என கூறினார்.

அரசியல் தலைவர்கள் அவ்வாறு செய்ய உறுதியாக இல்லை என்றும், நாடு முன் ஒரு சவால் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், 2015 க்கு முன்னர் இருந்த சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு நாடு மீண்டும் திரும்புவதை எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.

Author: theneeweb