காணாமல்போன ஆட்கள் பற்றிய யாழ்ப்பாண அலுவலகம் இன்று திறப்பு..!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதே தமது காரியாலயத்தின் நோக்கம் என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன ஆட்கள் பற்றிய யாழ்ப்பாணம் அலுவலகம் இன்று காலை அவரால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்பின்னர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பணியக தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் தங்களுக்கு கிடைக்கும் உதவித் திட்டங்களினால் தங்களது வலிகளை போக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கமைய இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

வெறுமனே சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக மாத்திரம் இந்த அலுவலகம் திறக்கப்படவில்லை.

மாறாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றவே இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்டோருக்கான பணியகத்தின் தலைவருடன் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களது ஆதங்கங்களை இவ்வாறு வெளிப்படுத்தினர்.

Share:

Author: theneeweb