அவசரகால தடை சட்ட நீக்கமானது 3 அமைப்புகளின் மீதான தடையில் தாக்கம் செலுத்தாது

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது, பயங்கரவாத அமைப்புக்களான தேசிய தௌஹீத் ஜமாம், ஜமாத்தே மிலாது இர்ராஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லாணி முதலான மூன்று அமைப்புகளின் மீதான தடையில் தாக்கம் செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் தேசிய ஊடக மத்திய நிலையம் அந்தத் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதிவிஷேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைய அந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்காக பெயரிடப்பட்டுள்ளதாக அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவசரகால சட்டத்தை நீடிக்காதமையானது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளின் விரிவான மட்டத்தி;ல் இடம்பெறுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இதேநேரம், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்புக் கடமைகளில் மாற்றங்கள் ஏற்பட மாட்டாது என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை சாதகமான முறையில் உள்ளமையினால், அவசரகால சட்டத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் ஜனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், அவசரகால சட்டம் நீடிக்கப்படாதபோதும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதும், முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 40 ஆம் அத்தியாயத்தின் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் 12 ஆம் பிரிவின் கீழ், தனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு, ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர், நாட்டில் கடந்த நான்கு மாதகாலமாக அவசகால சட்டம் அமுலில் இருந்தநிலையில், அதனை நீடிக்காதிருக்க நேற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இராணுவத்தினர் செயற்படும் முறைமையில் மாற்றம் ஏற்படாது என இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்து எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தினர் அந்தந்த மாவட்டங்களில் அவ்வாறே நிலைநிறுத்தப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பு தொடர்பில் காவல்துறையினருக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவர் என்றும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த நிலைமைகள் தொடர்பில் விளக்கமறித்து காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து சந்கேத்துக்குரியவர்களும், அவசரகால தடைச் சட்டத்தின்கீழ் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளுக்கு அமையவே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அவசரகால தடைச் சட்டம் நீடிக்கப்படாமையானது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகளுக்கு எவ்வித தடையும் இல்லை.

அத்துடன், பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்குவதற்கோ எவ்வித தடையும் இல்லை என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Author: theneeweb